மைத்திரி, ரணிலுக்கு ஜயம்பதி எச்சரிக்கை!

மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அல்ல. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். முதலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசமைப்பை உருவாக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக மாறிவிட வேண்டாம் என்பதை இந்த அரசின் தலைமைகளுக்கு சுட்டிக்காட்டுகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றிடம் அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற வழிகாட்டல் குழுவின் உறுப்பினராகவும் உள்ளவர் அவர். புதிய அரசமைப்பை உருவாக்கத்தின் பின்னணியில் கடுமையாக உழைத்து வரும் ஒருவர்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்படா விட்டால், நடு நிலையாகச் செயற்பட்டு வரும் தமிழ்த் தலைவர்களுக்குப் பெரும் தாக்கம் ஏற்படும், அவர்கள் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பொய்யாகி போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
புதிய அரசமைப்பு உருவாக்கம் முழுமைப்படுத்தக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது. இந்த ஆட்சிக் காலத்தினுள் அரசமைப்பை முழுமைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசிலுள்ள சகல தரப்பினரிடமும் உள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்ற வேண்டும்.
இந்த நாட்டின் நீண்டகால அரசியல் பிரச்சினை, தமிழ் மக்களின் நெருக்கடிகள், கடந்த கால அசம்பாவிதங்களை தடுக்க புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வுகள் பெற்றுத்தருவதாக இந்த நாட்டு மக்களுக்கு அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது.
புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் மைத்திரிக்கும், ரணிலுக்கும் முதன்மையான இரண்டு கட்சிகளுக்கும் அக்கறை இருக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்ச்சி இருக்க வேண்டும். அது இல்லாது புதிய அரசமைப்பை உருவாக்க முடியாது.
இன்று வாக்குறுதிகளை மறந்து மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேசும் நிலைமை உருவாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் இனி நடைபெறாது என்றே நாம் ஆரம்பம் முதல் தெரிவித்து வந்தோம்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தான் இந்த நாட்டில் நடைபெறும் இறுதி ஜனாதிபதித் தேர்தல் என்று கூறினோம். மேடைக்கு மேடை ஜனாதிபதியும், பிரதமரும் இதனையே தெரிவித்தனர்.
இன்று மீண்டும் ஜனாதிபதி வேட்பாளர், 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்று கூறிக்கொண்டு உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது, இரகசிய பேச்சுக்கள் நடத்துவது, எதிரிகளாக இருந்தவர்கள் ஒன்றிணைந்து களமிறங்குவது என்ற பல்வேறு சூழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
இது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி அல்ல. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
முதலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசமைப்பை உருவாக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக மாறிவிட வேண்டாம் என்பதை நாமும் இந்த அரசின் தலைமைகளுக்குத் தெரிவிக்கின்றோம்.
இன்று அரசமைப்பை உருவாக்க முடியாது போனால் அதன் மூலமாக பெரிய தாக்கம் நடு நிலையாக செயற்பட்டு வரும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கே ஏற்படும்.
தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இன்று நடு நிலையான தமிழ்த் தலைமைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில் அரசமைப்பு உருவாகாத பட்சத்தில் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளே உருவாகும்.
அவர்களின் உரிமைகளை மக்களாட்சியைப் பலப்படுத்தப்படுவதன் மூலமாக மட்டுமே நாட்டை வெற்றி கொள்ள முடியும். அன்று எந்தக் காரணத்துக்காக தமிழ்த் தரப்பு போராட்டத்தைக் கையில் எடுத்ததோ இன்று அதே நோக்கத்தை வெற்றிகொள்ள அரசியல் ரீதியில் பயணித்து வருகின்றனர்.
ஜனநாயக ரீதியில் அவர்கள் சிந்தித்து சிங்கள மக்களின் மனங்களை வெற்றி கொண்டு அதன் மூலமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனச் சிந்திக்கின்றனர். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு இலட்சம் வாக்குகள் பறிபோயுள்ளன. இதில் 50 ஆயிரம் வாக்குகள் ஜனநாயகக் கட்சிகளுக்குச் சென்றுள்ளன.
அதனை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெற்று கொள்ள முடியும். ஆனால், எஞ்சிய 50 ஆயிரம் வாக்குகள் வடக்கின் அடிப்படைவாத கட்சிகளுக்கே சென்றுள்ளன.
தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila