சமஸ்டி தொடர்பிலான எம்.ஏ.சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் பங்காளிகளிடையே கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இது தொடர்பில் பங்காளிக்கட்சிகள் தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசாவிடம் முறைப்பாடு செய்ததாகவும் அப்போது தனக்கும் சுமந்திரனிற்குமிடையில் தொடர்புகள் இப்போது இல்லாதிருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.
இதனிடையே பங்காளிக்கட்சிகளான டெலோ மற்றும் புளொட் தலைவர்களிற்கு முதுகெலும்பிருக்கின்றதாவென ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே தமிழ் மக்கள் அவர்களது சொந்த நிலத்திலேயே வாழ்வதற்கு ஆப்பு வைக்கின்ற வகையிலும் அதனை செயற்படுத்துகின்ற அரசாங்கத்திற்கு ஆதரவாகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது கருத்துக்களை கூறி வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த ஆட்சியில் கூடுதலான மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லைதீவில் எந்தவிதமான சிங்கள குடியேற்றங்களும் நடைபெறவில்லை என்பது போன்றதான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது.
வடக்கு கிழக்கின் நில தொடர்பினை துண்டாடும் வகையில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இத்தகைய மாகாவலி அதிகார சபையின் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்கு முன்னர் முல்லைதீவில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக விடுதலைப் புலிகள் அப் பகுதியில் பலமாக இருந்த காலத்தில் அங்கு தமது திட்டமிட்ட குடியேற்றங்களை செய்ய முடியாதிருந்த அரசு தற்போது விடுதலைப்புலிகள் இல்லாத காலத்தில் தமது திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்கள் .
இவ்வாறான நிலையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்த ஆட்சியில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்ற ஒரு கருத்தை கூறிவருகின்றார். ஆனால் உண்மையில் சுமந்திரனுக்கு இதில் இருக்கும் உண்மை என்ன என்பது தெரியும். ஆனாலும் இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அரசுக்கு ஆதரவாக, தமிழ் மக்களை அவர்களது சொந்த பிரதேசத்திலேயே வாழ்வதற்கு ஆப்பு வைக்கும் வகையில் கருத்துக்களை கூறி வருகின்றார்.
குறிப்பாக அன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளாத சுமந்திரன் இவ்வாறு கருத்துக்களை கூறுவது எந்த விதத்தில் நியாயமானது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்.
வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களது காணிகள் என்பது அம் மக்களின் நீண்ட கால தொடர் போராட்டத்தினால் கிடைக்கப்பட்டதே தவிர அரசாங்கத்தின் அக்கறையினால் கிடைத்தது இல்லை.
இவ்வாறான நிலையில் சுமந்திரன் கூறும் கருத்துக்களானது தமிழ் மக்களது இருப்பினை, உரிமைகளை பாதுகாப்பதாக இல்லை என்பதுடன் அது தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துக்களாகவே உள்ளது.
எனவே இது தொடர்பாக சுமந்திரனது கருத்துக்கள் கூட்டமைப்பின் கருத்தா அல்லது இதுவும் சுமந்திரனது தனிப்பட்ட கருத்தா என்பதை கூட்டமைப்பு பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் எனக்கோரியுள்ளார்.