குறித்த சம்பவமானது நெடுங்கேணிப்பகுதி பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் பௌத்தமத குருமார்கள் இச் செயற்திட்டத்தை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் மக்கள் “எமது பகுதியில் எவரும் குடியேற்றங்கள் அமைக்க கூடாது என்றும், எமது தமிழர் தாயகத்தை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று“ கூச்சலிட்டு எதிர்த்து குறித்த வேலைத்திட்டத்தை தடுத்துள்ளனர்.
இப்பகுதியில் பௌத்த மதகுருமார்கள் அத்துமீறி படையெடுத்தமையின் காரணமாக அமைதி இன்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, “குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க தரப்பிடம் கேட்டால் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்றே தெரிவிப்பதாக அந்த பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர் தாயகப் பகுதிகளில் காணி சுவீகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அந்த பகுதி மக்கள் மேலும் கூறியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க நெடுங்கேணியூடாக தண்ணீர்முறிப்பு குருந்தூர்மலை பகுதியூடாக பதவியா நோக்கி செல்லும் வீதிகளையும் இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளது.
இது குறித்து கேட்டால் தனக்கேதும் தெரியாது என அரசு சொல்ல, அதற்கு எமது தமிழ் பிரதிநிதிகளும் தலையாட்டுகின்றனர் என பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.