காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு- கிழக்கு தமிழர் தாயத்தில் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்களை இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு அவதானித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரனைக்குழுக்கள் முன்னிலையில் துணிந்து சாட்சியமளிக்கும் உறவினர்களும் கன்காணிக்கப்புக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவிலும் மற்றும் பொது அமைப்புகளிடம் உறவினர்கள் ஏலவே முறையிட்டிருந்தனர். இந்த நிலையில் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாருக்கு இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசானைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்
ராஜ்குமார், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வடபகுதி இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை, ராஜ்குமார் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆகவே, அவர் விசாரனைக்கு அழைக்கப்பட்டமை தமது சங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் சங்கம் கூறியுள்ளது.
வவுனியா பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள இந்த அழைப்புக் கடிதத்தில், எதிர்வரும் ஆறாம் திகதி வியாழக்கிழமை காலை 9.30க்கு கொழும்பு அலுவலகத்தில் 2ஆம் மாடியில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரனைப் பிரிவுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.
விசாரனைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பில் காரணங்கள் எதுவுமே கூறப்படவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.