பரீட்சை முறையில் பல்தேர்வு வினா என்பது பகுதி ஒன்றுக்குரியது.
நான்கு விடைகள் தரப்பட்டு அதில் சரியான விடையைத் தெரிவு செய்யுமாறு அமைகின்ற வினாக்களே பல்தேர்வு வினா என்று அழைக் கப்படும்.
இவ்வாறான ஒரு வினாவை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களிடம் முன்வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் தமிழ் மக்கள் பேரவை யின் கூட்டம் நடைபெற்றபோது அதன் இணைத் தலைவராக இருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் உரையாற்றினார்.
பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த உரையில், பலரும் என்னிடம் வந்து எனது வருங்கால அரசியல் பற்றிக் கேள்வி எழுப்புகின்றனர்.
எனது வருங்காலத்தைப் பொறுத்தவரை என்னிடம் தற்போது நான்கு வழிகள் உள்ளன.
அதில்,
1.வீட்டுக்குச் சென்று எனது ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது.
2.ஒரு கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பது.
3.புதிய கட்சியொன்றைத் தொடங்குவது.
4. கட்சி அரசியலைவிட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றை முன்வைத்து அதனைப் பெற முயற்சிப்பது.
இவ்வாறாக நான்கு வழிமுறைகளைக் கூறியுள்ளார்.
இங்குதான் முதலமைச்சர் முன்வைத்த பல் தேர்வு வினா பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
அதாவது தனது எதிர்கால அரசியல் தொடர் பில் தான் எடுக்கக்கூடிய முடிவென நான்கு விடைகளை அவர் முன்வைத்துள்ளார்.
இந்த நான்கு விடைகளில் மிகப்பொருத்த மானது அல்லது மிகவும் சரியான விடையைத் தெரிவு செய்கின்ற பொறுப்பு தமிழ் மக்களையே சாரும்.
இதன்காரணமாகவே முதலமைச்சர் மிக நுட்பமாக தனது நிலைப்பாட்டில் இருக்கக் கூடிய நான்கு வழிமுறைகளை முன்வைத் துள்ளார்.
இதில் தமிழ் மக்கள் எதனைத் தெரிவு செய் கின்றார்களோ அதனை தான் ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பேன் என்பது அவரின் முடிவு.
அதாவது தனது எதிர்காலம் பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையில் ஆற்றிய உரைமூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இனி, அவரின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழ் மக்களே கூற வேண்டும்.
நான்கு விடைகள் தரப்பட்டுள்ளன. அந்த நான்கு விடைகளும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல.
அது தமிழ் மக்களுடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால் சரியான விடையைத் தெரிவு செய்கின்ற முழுப்பொறுப்பும் தமிழ் மக்களுடையதாகும்.
எங்கே தமிழ் மக்களே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் எம் இனத்துக்குத் தேவை என்றால் நீங்களே அதனை உரக்கச் சொல்லுங்கள்.