முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு கிராமத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் இந்த ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் குறிப்பிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும், குறித்த பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளது. இவை ஒவ்வொன்றும் 250 அடி ஆழம் கொண்டதாக காணப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற சாதாரண கிணறுகள் 40 தொடக்கம் 80 அடி ஆழம் கொண்டதாக அமைக்கும் போதே நீரை பெற்றுக்கொள்ள முடிகிறது.
இந்த நிலையில் குறித்த ஆழ்துளை கிணறுகளால் நாம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளோம் என மக்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் சுரேஸ் கூறுகையில்,
ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு தற்போது தடை உள்ளது. மிகவும் ஆழமான இவ்வாறான ஆழ்துளை கிணறுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை நிறுத்த வேண்டும். அத்துடன் இந்த கிணறுகளை அமைக்க சிறிய பகுதி போதியதாக காணப்படும் நிலையில், கிணறு அமைப்பதை காரணம் காட்டி பெரிய நிலப்பரப்பு துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.