எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதைவிட வாழ்ந்த காலத்தில் அவர் சாதித்தது என்ன என்றறிவதுதான் கற்றறிந்தார் செயல்.
சுவாமி விவேகானந்தர், பாரதியார் போன்ற வர்கள் வாழ்ந்த காலம் மிகச் சொற்பமானது.
ஆனால் இன்றுவரை இந்த உலகம் அவர் களைப் புகழ்ந்தும் வியந்தும் பேசுகின்றது.
எனவே ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந் தார் என்பதைவிட; எவ்வளவு காலம் அரசிய லில் இருந்தார் என்பதைவிட அவர் சாதித்தது என்ன? மக்கள் மத்தியில் அவரின் செல் வாக்கு எப்படி? அவரின் நேர்மைத்தன்மை தொடர்பில் மக்களின் கருத்து என்ன? என்பது போன்ற விடயங்களைக் கவனத்தில் எடுப்பது தான் நடுநிலையாளர்களின் செயலாக இருக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, சமஷ்டி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூறிய கருத்துத் தொடர்பில் ஊடகங்களிலும் அரசியல் தரப்புகளிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதில் சமஷ்டி தொடர்பில் தான் கூறிய சந் தர்ப்பத்தைப் புரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.
தவிர, சமஷ்டி பற்றி கூட்டமைப்பின் பங் காளிக் கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் போதாது என்ற கருத்துப்படவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.
இதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் என்பது புளொட், ரெலோ ஆகியவற்றையே குறித்துரைக்கும்.
ஆக புளொட், ரெலோ ஆகிய கட்சித் தலை வர்கள் அல்லது செயலாளர்கள் அல்லது அந்தக் கட்சி சார்பில் குரல் கொடுக்க வல்லவர்கள் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறிய கருத்துக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக இருப்பர்.
இதில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் சமஷ்டி பற்றித் தமக்குப் போதிய தெளிவு உண்டு என்றும் அது தொடர்பில் யாரும் தமக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை என்றும் பதில் கூறியுள்ளார்.
ஆக, இனிக் கருத்துரைக்க வேண்டிய பொறுப்பு ரெலோவினுடையதாகும். நேற்று முன்தினம் ரெலோவின் பத்திரிகையாளர் மாநாடு இடம்பெற்றது.
சமஷ்டி குறித்து எம்.ஏ.சுமந்திரன் முன் வைத்த கருத்துத் தொடர்பில் ரெலோ பதில் அளிக்கும் என எதிர்பார்த்திருந்த போதிலும் அதுபற்றி அவர்கள் எதுவும் கதைக்கவில்லை.
மாறாக ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவர் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று அரசியலுக்கு வந்தவர் என்று கூறியிருந்தார்.
இது எதற்காகக் கூறப்பட்டது என்பது புரியாமல் இருப்பதுடன் சமஷ்டி பற்றிய தெளிவு ரெலோவிடம் இருக்கிறதா? என்பது பற்றி ரெலோவின் தலைமை பதிலளித்திருந்தால் அது பொருத்தப்பாடான விடயமாக இருந்திருக்கும்.