வவுனியா - சூடுவெந்தபிலவு கிராமத்தில் இன்று பொதுமக்களின் காணிகளுக்கு வன வளத் திணைக்களத்தினர் உரிமை கோரியதால் ஆத்திரமடைந்த மக்கள், வன இலாகா அதிகாரிகளின் வாகனத்தை வீதியில் தடுத்து வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
|
மேட்டு நிலப்பயிர்ச் செய்கைக்காக, அங்குள்ள மக்கள் தமது நிலத்தைப் பண்படுத்தும் நோக்கோடு, உழவு இயந்திரங்களில் மூலம் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வருகைத் தந்த வன இலாகாவினரும் விசேட அதிரடிப்படையினரும், குறித்த காணி வன வளத்திணைக்களத்துகு சொந்தமானது எனவும் அங்கு எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்தனர். அத்துடன், அங்கு உழவு வேலையில் ஈடுபட்டிருந்த நபரொருவரை கைது செய்த வன இலாகாவினர், உழவு இயந்திரத்தையும் கைப்பற்றி, தமது வவுனியா அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். மேலும், ஏனைய உழவு இயந்திரங்களையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
இச்செயற்பாட்டைக் கண்டித்து, அங்கு கூடிய கிராமமக்கள் வன வளத் திணைக்களத்தினருடன் முரண்பட்டனர். இதையடுத்து, சம்பவத்தை அறிந்து அங்கு வந்த சேட்டிகுளம் பிரதேசச் செயலாளரிடமும் வன வளத்திணைக்களத்தினருக்கும் குறித்த காணி தொடர்பாகவும் அதற்கான ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை கிராம மக்கள் காட்டி விளக்கினர்.
அத்துடன், குறித்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வந்துள்ள போதிலும், அதனை பிரதேசச் செயலகம் விடுவிக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டிய மக்கள், இக்காணிகளுக்கு அருகில் 3 குளங்களும் வயல் நிலங்களும் உள்ள நிலையில், நடுப்பகுதி மாத்திரம் எவ்வாறு வன இலாகாவினருக்கு சொந்தமாகுமெனவும் கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து, இது தொடர்பில், மாவட்டச் செயலாளர் மற்றும் வனவளத் திணைக்களத்தின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி, தீர்வைப் பெற்றுத்தருவதாக, பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.
பிரதேசச் செயலாளரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மக்கள், வனவளத்திணைக்களத்தினர் கொண்டு சென்ற உழவியந்திரத்தை விடுவிக்காமல், வனவளத் திணைக்களத்தினரை செல்வதற்கு அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்து, வீதியை மறித்து தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்தச் செயற்பாட்டால் கோபமுற்ற வனவள அதிகாரி, எவருடனும் முரண்படாது நடந்துச் செல்வதாகப் கூறி, அங்கிருந்து தனது உத்தியோகத்தர்களுடன் நடந்து சென்றிருந்தார். எனினும், அங்கிருந்த சிலர் அரச அதிகாரிகளின் வாகனத்தைத் தடுப்பது கூடாதெனத் தெரிவித்து வாகனத்தைச் செல்ல அனுமதியளித்தனர்.
|
வவுனியாவில் பொதுமக்களின் காணிகளுக்கு உரிமை கோரிய வனவளத் திணைக்கள அதிகாரிகளால் பதற்றம்!
Add Comments