பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணியினை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேருந்து மீது களுவன்கேணி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளமையால் வாழைச்சேனை பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து வண்டி மீது கிண்ணையடி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வாகனத்தின் ஒரு பகுதி கண்ணாடி சேதமடைந்துள்ளமையால் பேருந்து தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பொலிஸார் வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்படுவதை தடுக்க இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comments