2018 செப்ரெம்பர் முதலாம் திகதி வலம்புரிப் பத்திரிகையின் பிரதிகளை பன்னிரெண்டு பேர் கொண்ட முஸ்லிம் குழுவொன்று எரியூட்டியது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள புனிதமான ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக நடந்தேறியது.
பிரதிகளை எரியூட்டுவதற்கு முன்பாக, அங்கு நின்ற சிலர் வலம்புரி நாளிதழை செருப்புக்காலால் மிதித்தனர்.
இதைப்பார்த்தபோது எம் இதயம் கருகிக் கொண்டது.
எத்தனை வக்கிரம் இருந்தால் கல்வி என்ற பகுதிக்குள் அடங்கக்கூடிய ஒரு வாசிப்பு ஏட்டை செருப்புக்காலால் மிதிக்கத் தோன்றும்.
இதுபற்றி நம் அன்புக்குரிய முஸ்லிம் சகோதரர்கள்தான் தம் கருத்தைச் சொல்ல வேண்டும்.
பொதுவில் கல்விக்குரிய - வாசிப்புக்குரிய ஏடுகள், புத்தகங்கள் நிலத்தில் வீழ்ந்து விட்டால், அதனை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுதான் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் பண்பாடு. இந்தப் பண்பாடு மிகவும் உயர்வானது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் பன்னிரெண்டு பேர் அடங்கிய முஸ்லிம் குழுவொன்று வலம்புரி பத்திரிகையை நிலத்தில் போட்டு செருப்புக்காலால் மிதித்துவிட்டு, அதனை எரியூட்டியது எனும்போது இஃது எந்தளவு தூரம் மோசமான செயல் என்பதை நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை.
அதிலும் யாழ்ப்பாணத்தில் வர்த்தகச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர் எனும்போது,
இவர்கள் யாவர்? இவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றியயல்லாம் நீதிபரிபாலனம் ஆராய வேண்டும்.
அதேநேரம் எம் முஸ்லிம் சகோதரர்களுக்கு உண்மை நிலைப்பாட்டைச் சொல்லியே ஆக வேண்டும்.
அன்புக்குரிய முஸ்லிம் சகோதரர்களே! தமிழினம் யுத்தத்தால் அனுபவித்த இழப்புக்களும் துயரங்களும் கொஞ்சமல்ல. இவை பற்றி நீங்கள் அறியாததும் அல்ல.
நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் வடக்கு மாகாண சபையில் ஆற்றுகின்ற உரைகள் தமிழ் மக்களை மீண்டும் இன அழிப்புச் செய்ய வேண்டும் என்பது போலவே அமைகின்றன.
வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துப்பட அவர் உரையாற்றுவது சபையில் ஆசனங்களில் இருக்கக்கூடிய சிலருக்கு உடன்பாடாக இருக்கலாம்.
ஆனால் தமிழ் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
வடக்கின் முதலமைச்சரை வெளியேற்றுவதற்கு உறுப்பினர் அஸ்மின் யார்? என்பது தான் தமிழ் மக்கள் எழுப்பும் கேள்வி.
இவ்வாறு அவர் முன்வைத்த கருத்துக்களை பிரசுரித்தால் அதற்கான பதில் ஊடகத்தை மிதித்து எரித்து அராஜகம் செய்யப்படும் என்பதாக இருந்தால் இதன் பின்னணி என்ன என்பது உங்களுக்கே தெரிய வேண்டும்.
எதுவாயினும் வலம்புரி நாளிதழை மிதித்த சகோதரர்களே! வேண்டுமானால் என்னை மிதியுங்கள்.
ஆனால் எம் உயிரினும் மேலான தமிழை மிதிக்காதீர்கள். உங்கள் செயல் தமிழ் மக்களை வேதனைப்படுத்துகிறது