தனக்கு அரசியல் பின்னணியிருக்கின்றதென்பதை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிந்திய திருச்சபை ஆயர் டானியல் தியாகராசா ஏற்றுக்கொண்டுள்ளார்.அதனை மறைக்கவேண்டிய தேவையில்லையென தெரிவித்த அவர் அது அனைவரிற்கும் தெரிந்ததொன்று எனவும் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பின்னணியில் தாங்கள் செயற்படுவது தான் தற்போது தென்னிந்திய திருச்சபையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களிற்கான காரணமாவென கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுக்களில் உண்மையிருப்பதாக ஏற்றுக்கொண்ட அவர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்புக்களுடன் பேச தயார் எனவும் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் வட்டுக்கோட்டையில் தனியார் கல்வி நிலையம் ஒன்றினை நடாத்தி வந்தார். அந்தக் கல்வி நிலையத்துக்கு வரும்படி அவர் மாணவர்களைக் கேட்டதுடன் அங்கு வரும் மாணவர்களுக்கு அவர் பாடசாலைப் பரீட்சைகளுக்குகாகத் தயாரிக்கும் கணித பாட வினாத்தாள்களை லீக் செய்திருக்கிறார். மேலும் தனது கல்வி நிலையத்துக்கு வராத மாணவர்களுக்குக் குறைவான புள்ளிகளை வழங்கியுள்ளார். இது குறித்து பாடசாலையின் உப அதிபர் திரு விக்டர் ஜெயக்குமார் பலரிடம் முறையிட்டுள்ளார். ஏன் இந்த ஆசிரியரின் மீறல்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? இதே ஆசிரியரே இன்று தனது கல்வி நிலையத்துக்கு வந்த யாழ்ப்பாணக் கல்லூரி மாணவிகளைத் துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி இருக்கிறார்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியர் நியமனங்களிலே குறைபாடுகள் நிலவுவதாகச் சொல்லப்படுகிறதே. உதாரணமாக முன்னாள் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு வேலை வழங்குதல், பாடத்துக்கு ஏற்ற ஆளை எடுக்காது ஆளை எடுத்த பின் பாடத்தினைப் போடல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறதே. இதற்கான உங்கள் பதில் என்ன? உதாரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலே இடம்பெற்ற ஆங்கில மொழி மூல விஞ்ஞான பாட ஆசிரியர் நேர்முகத் தேர்வின் போது நீங்கள் தலைமை வகித்த நேர்முகப் பரீட்சை சபை மனைப் பொருளியல் மற்றும் நடனம் போன்ற துறைகளிலே தகைமை பெற்ற ஆசிரியர்களை எந்த முன்னறிவித்தலோ விளம்பரப்படுத்தலோ இல்லாது தெரிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியர்கள் கல்வி கற்கும் பாடங்களுக்கும் அவர்களின் கல்வித் தகைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலைமை இருப்பதாகப் பெற்றோரினாலும், பழைய மாணவர்களினாலும் சுட்டிக்காட்டப்படுகின்றதே. உதாரணமாக பிரதம பாடசாலையிலே கல்வி போதிக்கும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பக் கல்வியிலே பயிற்சி அற்றவர்களாக இருக்கின்றனர். ஆங்கிலம், விஞ்ஞானம், மற்றும் வரலாறு போன்ற பாடங்களை சிரேஷ்ட பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் சிலரின் ஆகக் கூடிய கல்வித் தரம் கல்விப் பொதுத்தராதர உயர் தரமாக இருப்பதாகக் கல்வி அமைச்சிடம் இருந்து பெறப்பட்ட பாடசாலையின் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணக் கல்லூரியின் நிருவாகிகளின் மத்தியில் அதிகாரங்களும் பொறுப்புக்களும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. ஒரு துணை அதிபரின் கட்டுப்பாட்டிலே கல்லூரி இருப்பதாகவும் அவருக்கு அதிபர் உட்பட ஏனைய நிருவாகிகள் பயப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த துணை அதிபர் ஏனைய நிருவாகிகளுக்குப் பொறுப்புக்கள் வழங்கப்படுவதனைத் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தர்மகர்த்தா சபையினர் நீங்கள் பதவி விலகாவிடின் பாடசாலைக்கான நிதியினை முற்றாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலைமையினை நீங்கள் எவ்வாறு கையாளப் போகிறீர்கள் என அவர் மீது குற்றச்சாட்டுக்களினை முன்வைக்கும் தரப்புக்கள் கேள்விகளை எழுப்பியிருந்தன.
அப்போதே குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பேச தயார் என தெரிவித்தார்.இதேவேளை தென்னிந்திய திருச்சபையின் 141 கேர்டி தர்மகர்த்தா சபை வசமிருப்பதாக தெரிவித்த அவர் அதன் வட்டியிலிருந்தே தமக்கான ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே டாண் தொலைக்காட்சி அவரிற்கு ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சியை ஒதுக்கி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.