முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தற்காலிக தடை உத்தரவினை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது .
கடந்த 04.09.18 அன்று குருந்தூர் மலைப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள்.
இதன்போது பிரதேச இளைஞர்கள் மக்கள் இணைந்து இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலீசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த பிக்குமார் உள்ளிட்ட 12 பேரையம் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர்கள் குருந்தூர் மலையில் முன்னர் இருந்த விகாரை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளதாக தெரிவித்து பூகோளவியல் பணிப்பாளர் கொடுத்துள்ள கடிதத்தினையும் காட்டியுள்ளார்கள்.
இதன்பின்னர் குறித்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேரையும் பொலீசார் விடுவித்துள்ளார்கள்.இச்சம்பவம் தொடர்பிலும் குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தடைவிதிக்ககோரி பொலிசார் 05.09.18 அன்று நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.
இன்னிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை (06.09.18) இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது எதிர்வரும் 13.09.18 வரை குறித்த மலைக்கு எவரும் செல்லமுடியாதவாறு தற்காலிக தடை உத்தரவினை நீதிபதி பிறப்பித்துள்ளதுடன் விகாரை ஆய்விற்காக பிக்குமார் செல்வதற்கு அனுமதிகொடுத்த பூகோளவியல் பணிப்பாளரின் கடிதத்தின் உண்மை தன்மையினை உறுதிப்படுத்துமாறு தொல்பொருள்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அடுத்த வழக்கு விசாரணை 13.09.18 அன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.