மகிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றத் துடிக்கும் அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு மட்டும் கொடிகட்டி பறக்கும்

மகிந்தவை  ஆட்சிப்பீடம் ஏற்றத் துடிக்கும்  அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு மட்டும் கொடிகட்டி பறக்கும்:

 “முதலில் சுவாசிப்பதற்கு ஒக்சிஜன் வேண்டும் விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏன் ஊடகவியலாளர்களாகிய உங்களுக்கும் அது அவசியம்” என வடக்கு ஊடகவியலாளர்களை   அண்மையில் கொழும்பில் சந்தித்த ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இங்கே அவரை உதாரணத்திற்கு எடுப்பதனால் அவர் உத்தமர் என அர்த்தப்படாது... அவர் சொன்ன கருத்தை இங்கு குறிப்பிட்டேன்...

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னிருந்து கடந்த 67 ஆண்டு கால வரலாற்றில் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களோ, அல்லது ஆட்சி அமைத்த ஆளும் கூட்டணிகளோ, தனிக் கட்சிகளோ தமிழ் மக்களின் - சிறுபான்மையினரின் நலன் கருதி செயற்பட்டதற்கான எந்த உதாரணங்களும் இல்லை...

டீ.எஸ் சேனநாயக்கா – டட்லி சேனநாயக்கா – சேர் ஜோன் கொத்தலவால – ஜே.ஆர் ஜெயவர்த்தனா – றணசிங்க பிரேமதாஸா, டீ.பீ. விஜயதுங்க – றணில் விக்கிரமசிங்க வழி வந்த ஐக்கியதேசியக் கட்சியோ அல்லது எஸ் டபிள்யு ஆர்டீ பண்டாரநாயக்கா, தகநாயக்கா,  சிறீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸ வழி வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ ஏட்டிக்கு  போட்டியாக இனவாதம் பேசி இனவாதத்தையே தமது அரசியல் இருப்பின் மூலதனாமாகக் கொண்டிருந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே...

தவிரவும் இரட்டைக் கலாநிதிப் பட்டம் பெற்ற இடதுசாரித் தலைவர் கொல்வின் ஆர்டீ சில்வா, என். எம் பெரேரா, பீட்டர் கெனமன், திஸ்ஸவித்தாரண, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, திஸ்வித்தாரண உள்ளிட்ட இடது சாரித் தலைவர்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து ஆட்சி அமைத்த காலம் எல்லாம் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளில் ஆளும் தரப்பிற்கு தோள்கொடுத்து நின்றார்கள் என்பதனை வரலாறு மறந்து விடப்போவதில்லை...

இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்காவின் இறப்பின் பின் ஆட்சிக்கு வந்த சிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1972ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து முடிக்குரிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த முதலாம் குடியரசு யாப்பு 1947ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பில் பெயரளவிலாவது (நடைமுறையில் பல தோல்விகளைக் இந்த சரத்துகள் எதிர்கொண்டன)  சிறுபான்மையினருக்கான காப்பீடாக இருந்த   ஏற்பாடுகள் அனைத்தையும்  தூக்கி எறிந்தனர்...

29ஆவது சரத்து, செனட்சபை, நியமன உறுப்பினர்கள், பல அங்கத்தவர் தேர்தல் தொகுதி, கோமறைக் கழகம், அரசியல் அமைப்பை திருத்துவதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு என்ற 7 அம்சங்களையும்  நிர்மூலமாக்கி இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதனையும், சிங்க மொழியே ஆட்சி மொழி என்பதனையும் யாப்பில் நிறுவிய பெருமை இடதுசாரி மன்னன் கொல்வின் ஆர்டீ சில்வாவிற்கே சாரும்... 1972ஆம் ஆண்டின் 1ஆம் குடியரசு அரசியல் யாப்பை உருவாக்கியவர் இந்த கம்யூனிச இரட்டைக் கலாநிதியே... எனபதனையும் இலங்கை இடதுசாரிகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் கனவான்களுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியவில்லை.

பாராளுமன்றத்திற்கு புறம்பாக கொழும்பு நவரங்கல மண்டபத்தில் கூடிய இலங்கை அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய யாப்பு நிர்ணய சபையால் மேய்கொள்ளப்பட்ட யாப்பு புரட்சியே முதலாம் குடியரசு அரசியல் யாப்பாக உருப் பெற்றது. இந்த யாப்பு உருவாக்கத்தில் தமிழ் தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்கவில்லை என தெரிவித்து, தமிழ்க் கட்சிகள்  யாப்பு நிர்ணய சபையை விட்டு வெளியேறியிருந்தனர்... ஐக்கியதேசியக்  கட்சியும் அதனை புறக்கணித்தது... ஈற்றில் இடதுசாரிகளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இலங்கையை சிங்கள பௌத்த தேசமாக்கிய யாப்பை உருவாக்கி அங்கீகரித்தனர்.

இதன் பின்னான, 70களில் இருந்தே தமிழ் மக்களின் போராட்டங்களும் எழுச்சிபெறத் தொடங்கின...

தொடர்ந்து 1977 தேர்தலில் சிறிமாவோ தலைமையிலான கூட்டரசாங்கத்தின் பாரிய தோல்வி ஜே.ஆர் ஜெயவர்தனவின் எழுச்சிக்கு வழிகோலியதோடு மட்டும் அல்லாது இலங்கை வரலாற்றில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க் கட்சியாக பாராளுமன்றில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டது...

அத்துடன் 1977ல் முதன் முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன்  ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்தனா 1978ல் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை உருவாக்கினார்... அதன் மூலம் தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக்கிய அவர் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என மார்தட்டிய தலைவராக உருவெடுத்தார்.

அனைத்து அமைச்சர்களிடமும் ராஜினாமாக் கடிதத்தை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு பொறுப்புக்களை வழங்கினார்.

இந்த முதலாவது பதவிக் காலத்திலேயே தனக்கு நிகராக போட்டியிடக் கூடிய  சிறீமாவோ பண்டாரநாயக்காவின்  சிவில் உரிமைகளைப்  பறித்தெடுத்தார். (இப்போ சரத் பொன்சேகாவின் சிவில் உரிமைகளை மகிந்த ராஜபக்ஸ பறித்தது போல்)

அதனால் 1982ஆம் ஆண்டின் முதலாவது ஜனாதிபதி தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட ஹெக்டர் ஹொப்பேகடுவவை இலகு வெற்றி கண்டார். பாராளுமன்றின் ஆட்சியை அதே அறுதிப் பெரும்பான்மையுடன் மேலும் 6 வருடத்திற்கு நீடித்தார். பாராளுமன்றை நீடிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அதில் வெற்றி பெற்றார்.

இவர் தனது காலத்தில் தெற்கின் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு நெருக்குதல்களை கொடுத்தார். நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணா ரட்ண, வாசுதேவ நாணயக்கார, மற்றும் ஜேவீபி தலைவர் றோகண விஜயவீர உள்ளிட்டோரை சிறையில் அடைத்தார். அவர்களின் கட்சிகளை தடை செய்தார். பின்னர்  தடைகளை நீக்கி விடுவித்தார்.

வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத 1983கலவரம், யாழ் நுலக எரிப்பு உள்ளிட்ட துயர நிகழ்வுகள் யாவும் ஜே ஆரின் ஆட்சிக் காலப்பகுதியிலேயே அரங்கேற்றப்பட்டன.

எனினும் 3ஆவது முறையாக போட்டியிடும் வாய்ப்பை அப்போது பிரதமராக இருந்த பிறேமதாஸா வழங்கவில்லை என்பதோடு அதற்காக யாப்பில் திருத்தத்தை கொண்டுவரவும் ஜே.ஆர்  முயலவில்லை... 78ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி இரண்டு முறையோடு ஜே.ஆர் ஓய்வுக்கு செல்ல றணசிங்க பிரேமதாஸா ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியாக களத்தில் இறங்கி தேர்தலில் வெற்றி பெற்றார். 1977ஆம் ஆண்டு முதல் பிரேமதாஸாவின் இறப்பின் பின் டீ.பீ விஜயதுங்க பதவி வகித்த 1 வருடம் ஈறாக 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க பதவிக்கு வரும் வரை 17 வருடம் ஐக்கியதேசியக் கட்சி இலங்கையை ஆட்சி செய்துகொண்டு இருந்தது.

1988ல் முடிவுக்கு வந்த ஜே ஆரின் ஆட்சியின் பின் 1989 ஜனவரி 2 முதல் 1993 மே 1ஆம் திகதி புலிகளின் தற்கொலைத் தாக்குதலில்  கொல்லப்படும் வரை இலங்கையின் 3ஆவது ஜனாதிபதியாக றணசிங்க பிரேமதாஸா பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக் காலமும் மிகவும் சர்ச்சைக்குரிய காலமாக இருந்தது.

எனினும் கிராமோதய அபிவிருத்தி, கம்முதாவ, வீடமைப்பு திட்டம்  உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற அபிவிருத்திகளை மேற்கொண்டு ஏழைகளின் நாயகன், கிராமப்புறங்களின் நாயகன் என்ற பெயரை சிங்கள மக்கள் மத்தியில் தனதாக்கிக் கொண்டவர் பிரேமதாஸா...

இவரது ஆட்சிக் காலத்தில் எழுச்சி பெற்ற ஜே.வீபியின் இராண்டாவது கிளர்ச்சி ஈவிரக்கம் இன்றி ஒடுக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஸவின் முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பாக 1988 – 1989 – 1990 களில் தெற்கின் ஆறு குளங்களில் எல்லாம் இளைஞர் யுவதிகளின் சடலங்கள் மிதந்தன. ஜே.வீ.பீ – பிரேமதாஸா அரசாங்க மோதலில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட தெற்கின் மக்கள் கொல்லப்பட்டு, காணாமல் போய் இருந்தனர். இந்தக் காலப்பகுதியில்தான் பட்டலந்தை சித்திரவதை முகாம் பெயர்பெற்றிருந்தது. அதில் றணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பிருப்பதாக ஜே.வீ.பீ குற்றம்சாட்டி வருகிறது. 1971 கிளர்ச்சியை சிறீமாவோ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கம் ஒடுக்கியது... ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். 1988 1989 காலத்திய கிளர்ச்சியை ஐக்கியதேசியக் கட்சி ஒடுக்கியது...

பிறேமதாஸவின் ஆட்சிக்காலத்திலும் ஊடக ஒடுக்குமுறை – கட்டவிழ்த்து விடப்பட்டது. யுக்திய பத்திரிகை அச்சிடும் அச்சகம் துவசம் செய்யப்பட்டது. ரிச்சார்டி சொய்சா கொல்லப்பட்டார்..

ஒரு கட்டத்தில் பிரேமதாஸாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, காமினி திஸ்ஸநாயக்கா, காமினி அத்துகோரள உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் கொண்டுவர முற்பட்டனர்... பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்க முற்பட்ட வேளை முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்காரரை முதல்நாள் இரவு பிரேமதாஸா மிரட்டியோ – பணம் கொடுத்தோ தன்பக்கம் சாய்த்தார் எனவும்,   நம்பிக்கையில்லாப் பிரேரனை பாராளுமன்ற விவாதத்தில் இடம்பெறுவதை தடுத்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து வந்த முரண்பாடுகளால் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் வெளியேறி ஜனநாயக தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி இருந்தனர். இந்தப் போராட்டமும் பிரேமதாஸா, லலித் மற்றும் காமினி முதலானோர் கொல்லப்பட்டதோடு ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

1994 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்த்து களத்தில் இறக்கப்பட்ட சந்திரிக்கா குமாரணதுஙக பண்டாரநாயக்கா அதுவரை எவரும் பெற்றுக்கொள்ளாத அதி கூடிய வாக்குகளை பெற்று ஐக்கியதேசியக் கட்சியின் 17 வருட ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

இந்த தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சி வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது... 16 பேர் தேர்தல் காலத்தில் கொல்லப்பட்டனர். பலர் காயத்திற்கு உள்ளாகினர்... எனினும் தேர்தல் திணைக்களத்தையோ, தேர்தல் ஆணையாளரையோ ஐக்கியதேசியக் கட்சி கட்டுப்படுத்தி தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர முயலவில்லை...

1994 முதல் 2005 வரை இலங்கையை ஆட்சிபுரிந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா இதுவரை இருந்த  ஜனாதிபதிகளான ஜே.ஆர். முதல் மகிந்த ராஜபக்ஸ வரை ஒப்பீட்டு ரீதியில் மாறுபட்டவராக இருக்கிறார்.

குறிப்பாக, அடக்குமுறை, ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றில் முன்னையவர்களையும் பின்னைய மகிந்தரையும் விட ஒப்பீட்டளவில் சற்று மாறு பட்டு காணப்பட்டார்.

ஊடக சுதந்திரம், நீதிச் சேவை, பொதுச்சேவை, தேர்தல் திணைக்களம், அரசியல் அமைப்பு பேரவை, தேசிய பொலிஸ் சேவை என்பவற்றில் பாரிய அளவில் தலையீடு செய்யவோ, தலையிடவோ இல்லை...

அத்துடன் குறிப்பாக 2001 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 17ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 1978ல் ஜே.ஆர் ஜெயவர்தனாவால் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பின் தீவிரத்தை நெகிழ்ச்சிப்படுத்திய சிறப்பையும் சந்திரிக்கா பெறுகிறார்.

ஆரசாங்க முறைமையினை, ஆட்சி முறைமையினை மேலும் ஜனநாயகப்படுத்தும் நோக்குடன் ஏதிர்க் கட்சிகளின் ஆதரவுடன்  இந்த சட்டத்தை சந்திரிக்கா கொண்டுவந்தார் என அப்போது அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

இதன் மூலம்
1)    ஆரசியல் அமைப்பு பேரவை
2)    பொதுச்சேவை ஆணைக்குழு
3)    தேர்தல் ஆணைக்குழு
4)    நீதிச் சேவை ஆணைக் குழு.
5)    தேசிய பொலிஸ் சேவை ஆணைக் குழு என்பன நிறுவப்பட்டன.

இவற்றின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை சந்திரிக்கா மட்டுப்படுத்தினார்.... எனினும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது ஒழிக்க அன்று அவரது கட்சிக்குள்ளும், வெளியிலும் தற்போது இருப்பது போன்று ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்றே கூறுகிறார்..
ஆனால் இப்போது 18ம் 19ஆம் திருத்தச் சட்டங்கள் மூலம் , ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக் கூடிய சர்வ வல்லமையையும் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது ராஜபக்ஸ அன் கம்பனி.

எனினும் சந்திரிக்காவினுடைய காலத்திலேயே சட்டண ஆசிரியர் சட்டண குமார, தராக்கி சிவராம் ஆகியோர் கொல்லப்பட்டனர். யுத்தகாலத்தில் செய்தி தணிக்கையை நடைமுறையில் வைத்திருந்தார். 1995ல் முதன் முறையாக யாழ் குடாநாட்டை விட்டு தமிழ் மக்களை இடம்பெயர்த்தார். இந்த நிகழ்வுகள் உரிமைகோரி நின்ற தமிழ் மக்களை வதைத்தெடுத்த நிகழ்வு என்பதற்கு அப்பால் ஒரு கடுமையான இன விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற காலத்தின் பெரும்பான்மை மக்களின் ஜனாதிபதியாக, சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்தவராக இருந்த போதும் 1978ன் பின் வந்த தலைவர்களில் நெகிழ்வுத் தன்மையும், குறைந்தபட்சமேனும் அரசியல் ஆட்சி விழுமியங்களை பேண முற்பட்டவர் என்பதனை கூறியே ஆக வேண்டும்... விசேடமாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக இருந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலை ஓரளவிற்காயினும் சுயாதினமாக நடத்தியவர்...
இருந்த போதிலும் தன்னுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்த ஜேவீபியின் நெருக்குதல்களுக்கும் தனது கட்சியின் கடும்போக்காளர்களின் வற்புறுத்தல்களுக்கும் அடிபணிந்து சமாதான பேச்சுக் காலத்தில் றணில் தலைமையிலான பாராளுமன்றை கலைத்தவர் என்ற விமர்சனம் முக்கியமானது...

இவற்றுக்கெல்லாம் அப்பால் தனது பதவிக் காலம் தொடர்பான சர்ச்சையில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அளித்த தீர்ப்பை ஏற்று பதவிக் காலத்தை 11 வருடங்களுடன் நிறைவுக்கு கொண்டு வந்தவர்... அங்கே நீதித்துறையின் மீது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்க முற்படவில்லை...

இப்படி 1948 முதல் 2005 வரையான 57 வருட கால அரசாங்கங்கள் - ஆட்சியாளர்கள் எவருடனும் எவ்வகையிலும் ஒப்பட முடியாத ஒரு ஆட்சியாக சர்வாதிகார ஆட்சியாக ராஜபக்ஸ குடும்ப ஆட்சி நிறுவனமயப்பட்டு இருப்பதில் இருந்து இன்று இலங்கை விடுபடுவது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டு இருக்கிறது.

நாம் தமிழ் மக்களாக சிந்திக்கும் போது ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன ஒன்றுதான் என்பது 67 வருட ஆட்சிக்காலங்களின் அரசியல் நடைமுறை தந்த பாடம்.

ஆனாலும் அவற்றிற்கும் அப்பால் லட்சக்கணக்கான மக்களை குறுகிய நிலப்பரப்பில் அடைத்து வைத்து துடிக்கத் துடிக்க கொத்துக் கொத்தாக  மக்களை எவரும் கொன்று குவிக்கவில்லையே.... முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எவரும் ஏற்படுத்தவில்லையே...
இதன் பின் என்றுமே இல்லாதவாறு 2009 மே 18ற்குப்  பின் தமிழ் மக்கள் மிகக் கேவலமான அடிமைகளாக்கப்பட்டு இருக்கின்றனர். உண்பதற்கும் சிலவேளை மூக்கால் அன்றி வாயால் சுவாசிப்பதற்கும்  மட்டுமே தமிழ் மக்கள் வாய் திறக்கின்றனர். திருமணம் முடிப்பதற்கும், பூப்படையும் சிறுமிகளுக்கு தலையில் தண்ணீர்வாக்கவும், வீட்டுக்கு விருந்தினர் வருவதற்கும் அருகில் உள்ள ராணுவத்திடம் அனுமதி கேட்க வேண்டும். வடக்கில்  தமிழ் மக்கள் சிறைகளுக்குள் வாழ்கின்றனர் என ஜேவீபீ சொல்லும் அரசியல் முன்னைய 57 வருட ஆட்சிகளில் இருந்ததில்லையே...
2005ல் இருந்து 2014ற்குள் உட்பட் 9 வருட ஆட்சியில் இந்த நிலமை என்றால் அடுத்து 6 வருடத்திற்கு சிம்மாசனம் ஏறினால் யார் யாரோடு வாழலாம், யார் யாருக்கு குழந்தை கொடுக்கலாம் என்பதையும் அருகில் இருக்கும் இராணுவம் தீர்மானிக்கும் நிலை ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

1948ல் இருந்து 2004 வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களில் பாரம்பரை ஆட்சி இருந்தது என்பது உண்மையே... டீ.எஸ் சேனநாயக்காவின் பின் டட்லி சேனநாயக்கா ஆட்சிக்கு வந்தார். ஜே ஆர் ஜெயவர்தனா மகன் றவி ஜெயவர்தனாவை நேரடி அரசியலில் இறக்கவில்லை... பின் வந்த பிறேமதாஸா முதன் முறையாக வாழைத் தோட்டத்தில் இருந்து வந்தவர்... அவருடைய காலத்திலும் தன் பிள்ளைகளை அவர் நேரடி அரசியலில் ஈடுபடுத்தியதில்லை.. ஆட்சியில் உறவினர்களின் அடாவடித்தனங்கள் இருக்கவில்லை... சந்திரிக்காவின் ஆட்சியிலும் அனுரா பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலில் இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் முன்பே மக்களால் தெரிவாகி வந்தவர்கள்...அவர்களிடம் வரம்பு மீறிய அதிகாரங்களை சந்திரிக்கா வழங்கவில்லை...

ஜேஆர் ஆட்சியில் பலம்பொருந்திய அமைச்சர்கள் சுயமாக இயங்கினார்கள்.. பிரேமதாசா வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சராகவும் பிரதமராகவும் இருந்தவர்.. லலித் அத்துலத் முதலி பாதுகாப்பு அமைச்சராகவும்  காமினி திஸ்ஸநாயக்கா மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தார்கள்... பிறேமதாஸா ஆட்சியிலும் றஞ்சன் விஜயவர்த்தனா பாதுகாப்பு அமைச்சராகவும் சிரிசேன குரே, றணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் முக்கிய அமைச்சர்களாகவும் இருந்தனர்.

அனால் ராஜபக்ஸ குடும்ப ஆட்சி சர்வ வல்லமைகளையும் தமதாக்கி நாட்டை குடும்ப நிறுவனமாக்கி காற்றும் உட்புக முடியாத சாம்ராட்சியத்தை ஸ்தாபித்திருக்கிறது.

2005ற்கு முற்பட்ட ஆட்சியாளர்கள் நாட்டின் முப்படைகளை, தேசிய பொலிஸ் சேவையை, நீதித்துறையை, பொதுச் சேவையை, தேர்தல் திணைக்களத்தை, பாராளுமன்றத்தை விமான நிலையங்களை, துறைமுகங்களை குடும்ப ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவில்லை...

நாட்டின் ஜனாதிபதி - மகிந்த ராஜபக்ஸ  - பாராளுமன்ற சபாநாயகர் அண்ணன் சமல் ராஜபக்ஸ – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - தம்பி கோத்தாபய ராஜபக்ஸ – அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்களின் அமைச்சர் தம்பி பசில் ராஜபக்ஸ – பாராளுமன்ற உறுப்பினர் மகன் நாமல் ராஜபக்ஸ – கடற்படையில் பலம் பொருந்தியவராக மற்றய மகன் யோசித ராஜபக்ஸ, இவற்றை விட நெருங்கிய உறவினர்கள் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக, இராஜதந்திரிகளாகவும், நெருங்கிய நண்பர்கள் முக்கிய பொறுப்புக்களுக்காகவும் அமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் 75 வீதமான நிதிக் கட்டுப்பாடு ராஜபக்ஸ குடும்பத்தின் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறது.

வெளிநாட்டு ராஜதந்திர சேவையில் தனக்கு நெருங்கிய ஒரு தமிழ் ஊடகவியலாளர், மற்றும் சிங்கள ஊடகவியலாளரகள் இருவரையும் நியமித்துள்ள மகிந்த, இரணுவ, கடற்படை, பொலிஸ் அதிகாரிகளையும் ஓய்வுபெற்ற நீதியரசர்கள், நீதிபதிகளையும் நியமித்திருக்கிறார். வழமையாக வெளிநாட்டு ராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தப்படும் இராஜதந்திர மட்டத்திலானவர்கள் அந்த துறை சார்ந்த பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் அனுபவம் அடைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அலுவலக மட்டத்தில் நியமிக்கப்படுபவர்கள் இலஙகை சிவில் நிர்வாக சேவை பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களாக அல்லது அதற்கு ஈடான தரத்தில் இருக்க வேண்டும் ஆனால் ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் வெளியுறவுச் சேவையில் உள்ள 95 வீதமானவர்கள் அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விளையாட்டுத் துறையிலும் கூட ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதாக அர்சுணா ரணதுங்க அண்மையில் கூறியிருக்கிறார்...

தனது தந்தை கடுமையான ஓர் சுதந்திரக் கட்சி ஆதரவாளர் இருந்த போதிலும், அப்போதைய கிரிக்கட் சபையின் தலைவர் காமினி திஸாநாயக்க ஒரு காலமும் அரசியல் காரணிகளை விளையாட்டில் புகுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேவையென்றால் காமினி திஸாநாயக்கா தமது கிரிக்கட் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்திருக்க முடியும் எனவும், அவர் அவ்வாறு செய்யவில்லை எனவும் தெரிவித்த அர்சுணா ரணதுங்க, 2010ம் ஆண்டின் பின்னர் அதிகளவில் விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு காணப்படுவதாகத் குறிப்பிடுள்ளார்.

இவை யாவற்றுக்கும் அப்பால் வரலாற்றில் முதற் தடவையாக ஆட்சியாளரின் அனுசரணையோடு அதிகாரிகளின் அனுசரணையோடு போதைப் பொருள் கடத்தல், பாதாள உலக ஜாம்பவான்களின் செயற்பாடுகள், கப்பம், ஆட்கடத்தல், கொலை, காடைத்தனம் முதலான சட்டத்திற்கு புறம்பான விடயங்கள் நிறுவனமயப்பட்டுள்ளன. நாட்டின் அமைச்சர்கள்  ரவுடிகளாக காiடையர்களாக சண்டியர்களாக வெளிப்படையாகவே செயற்படுவதற்கு ஜனாதிபதியின் ஆசீர்வாதம் இருக்கிறது. முன்னாள் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையை திருமணம் முடிக்கத் தயார் என்று அமைச்சர் மேர்வின் சொல்கிறார்... முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தள்ளி விழுத்தி மிதித்து நிர்வாணமாக வீதியில் ஓடவைக்கனும் என அமைச்சரவை அந்தஸ்த்துள்ள உயர்கல்வி அமைச்சர் எஸ்பீ திஸ்ஸநாயக்கா சொல்கிறார்... இதை விட அசிங்கம் இருக்க முடியுமா? இந்த அசிங்கங்கள், அருவருப்புகள் யாவும் ராஜபக்ஸ நிறவனமயப்பட்டுள்ளன.
வரலற்றில் என்றுமில்லாதவாறு ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டதும், கொல்லப்பட்டதும், நாட்டை விட்டு வெளியேறியதும், ஊடக நிறுவனங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டதும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சியிலே என்பதனை உலக ஊடக சுதந்திர தரப்படுத்தல் உறுதிசெய்திருக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி நடைமுறைக்கு ஒவ்வாத  கற்பனா வாதங்களில் திளைத்து  2005ல் விட்ட தவறை மீண்டும் தாயகத்  தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் விடுவார்களானால் இலங்கையின் தென்பகுதி மக்கள் மட்டும் அல்ல வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் அதள பாதாளத்துள் செல்வதனை மேற்குலகம் என்ன அமரிக்கா இந்தியாவாலும் தடுக்க முடியாது...

சர்வதேச விசாரணை என்றும்,  கடும்போக்கு இனவாதி ஆட்சியில் இருப்பதே தமிழ் மக்களின் விடுதலையை விரவுபடுத்தலாம் என்றும் சரடு விட்டுக் கொண்டு ஒரு சாராரும், மகிந்தவே நாட்டை மீடக வந்த மீட்பர் என இன்னொரு சாராரும் கூறிக்கொண்டு இருப்பது அரசியல் வியாபாரத்தை பெருக்கவே வழிவகும் அல்லாது வேறு பயன் ஏதும் கிடைக்கப் போவதில்லை....
இந்தத் தடைவ மீண்டும் மகிந்த ஆட்சிப் பீடம் ஏறினால் அடுத்து 6 வருடங்களுக்கு சிங்கள மக்களின் தயவோ யாருடைய தயவும் தேவைப்படப் போவதில்லை.. எதிர்க் கட்சிகளில் இருந்து மீண்டும் படை படையாய் பாராளுமன்ற உறப்பினர் அரசாங்கத்திடம் சரணடைவார்கள்... அந்த செல்வாக்குடன் பாராளுமன்றை தேர்தல் இல்லாமல் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் தனக்கு மேலும் தேவையான சட்டங்களை மகிந்த இயற்றுவார்.. தேர்தல் முறைமைகளை மாற்றி ராஜபக்ஸ பரம்பரை ஆட்சி தொடர்வதை உறுதி செய்வார்..

3 தசாப்தத்திற்கு மேல் மேலைத்தேயத்தோடும் உலகோடும் முரண்டு பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த பர்மிய இராணுவ ஆட்சியாளர் மேலைத்தேய ஆட்சியாளருடன் சமரசத்திற்கு சென்றபோது வேறு வழியின்றி பர்மிய இராணுவ ஆட்சியாளரை மேற்கத்தேயம் அரவணைத்தது.

அதனையே தனது இறுதிக் காலத்தில் மகிந்தவும் மேற்கொள்ள முயல்வார்... தன் மகன் நாமல் அரியணை ஏறும் கால இடைவெளியை பாதுகாக்க முற்படுவார். பர்மிய ஆட்சியாளர்கள் எவ்வாறு வெளி உலகுடன் சமரசம், மற்றும் விட்டுக் கொடுப்பை ஏற்படுத்தினார்களோ அதனையே மகிந்த ராஜபக்ஸவும் மேற்கொள்வார்.   

அவ்வாறாயின்  பர்மாவை எதிர்த்த உலகத் தலைவர்கள், பழைய பகை முரண்பாட்டை எல்லாம் தூக்கி மூலையில் போட்டு விட்டு  எவ்வாறு இப்போ பர்மாவில் நிற்கிறார்களோ அவ்வாறே மகிந்தவுடன் கைகுலுக்கி நிற்பார்கள்.. அப்படி ஒரு சூழல் உருவாகினால்  சர்வதேச விசாரணை – மகிந்தவுக்கு எதிரான மேற்குலக நிலைப்பாடுகள யாவும்  கானல் நீராய் போய்விடும்..

மகிந்தவை மீண்டும் ஆட்சிப் பீடம் ஏற்றத் துடிக்கும் சிங்கள -  தமிழ் அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு
மட்டும் கொடிகட்டிப் பறக்கும்.... பாவம் மக்கள்..
குறிப்பு-
இங்கு மகிந்த ராஜபக்ஸவைின் அதிகார மாற்றம் என்பது மக்கள் சுவாசிப்பதற்கான அல்லது நிலை எடுப்பதற்கான காலமாற்றமே. மாறாக இதன் அர்த்தம் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன இறை தூதர் என்பதோ - அதி உத்தம திலகம் என்பதோ அர்த்தம் அல்ல.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila