இன்று பெப்ரவரி 14 உலக காதலர் தினம். காதலர்களுக்கும் தினம் ஒதுக்கி அதைக் கொண்டாடும் அளவில் உலகம் அளப்பெரும் கருணை கொண டது. காதலர் தினத்தில் காதலர்கள் தத்தம் அன்பைப் வெளிப்படுத்தினால் அது போதுமா? என்ற கேள்வி எழுவதும் நியாயமானதே.
எதுவாயினும் பெப்ரவரி 14 உலக காதலர் தினம் அவ்வளவுதான் சர்வதேசம் வகித்து விட்டுள்ளது. நாம் அதைக் கொண்டாடுவோம் என்றளவில் எவரும் எதுவும் சொல்ல முடியாது.
தமிழில் காதல் என்பது மிகவும் உயர்வான சொல். அன்பு என்பதும் காதல் என்பதும் ஒரு பொருள் குறிப்பவை அல்ல.
அன்பு என்பது அனைவர் மீதும் செலுத்தப்பட வேண்டியது. காதல் என்பது இன்னும் ஒருபடி மேற்சென்று அன்பும் ஈர்ப்பும் கலந்தது.
ஆக, அன்பு+ஈர்ப்பு=காதல் என்று கூறிக் கொள்ளலாம். அன்பில் நம்மவர் மற்றவர் என்ற வகைமைப்படுத்தல்களுக்கு இடமில்லை. காதலில் என்னவர் என்ற உரிமைப்படுத்தலும் இருக்கவே செய்யும்.
காதல் என்பது கனிவானது. காதலாகிக் கசி ந்து கண்ணீர் மல்கி ஓதுவார்... என்று தேவாரத் திருமுறை பேசுகிறது.
இறைவன் மீது கொண்ட காதல் ஆன்மாவைக் கசிந்துருகச் செய்கிறது. ஆன்மா கசிந்துருகும் போது உள்ளம்-உடல்-உயிர் என்ற மூன்று நிலை களும் மெய்ம்மறந்து தலைவன் தாள் தலைப்படுகிறது. இவை இறைவன் மீது கொண்ட காதல்.
எனினும் எம் சமகால உலகில் காதல் என்ற புனிதமான தமிழ்ச் சொல்லை நாம் அப்படியே பொருளுணர்ந்து உள்வாங்காமல், ஆங்கிலப் பதத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்து Love என்ற சொற் பதமாக்கி அதன் பொருளை உள்வாங்கிக் கொள்கிறோம்.
இத்தகையதொரு நிலையில் இன்று காதல் என்பது காதலன் - காதலி என்ற இருவரும் கொண்ட அன்பு என்பதாகப் பொருள்படுகிறது. இத்தகைய பொருள்படுதல்தான் விரும்பத்தகாத சம்பவங்களை ஏற்படுத்தி விடுகின்றன.
உண்மையில் காதல் என்பதன் உன்னதம் இல்வாழ்க்கையில் இருக்கக்கூடிய தலைவன் - தலைவி உறவைக் குறிப்பதாகும். இதனை ஔவையார் காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்றுரைத்தார்.
ஆக, காதல் என்பது கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மீதும் காட்டுகின்ற அன்பும் ஈர்ப்பும் ஆகும். சிலவேளைகளில் இன்பமான இல்வாழ்வில் இணைவதற்கும் காதல் அவசியப்படுகிறது.
எனவே, காதல் என்பதில் தோல்விக்கு இடமில்லை - துன்பத்துக்கு இடமில்லை - கோபத்துக்கு இட மில்லை. ஆகையால் காதல் என்ற தமிழ்ச் சொல் மிகவும் உன்னதமானது. அதில் எவ்வித அப்பழுக்கும் இருப்பதில்லை. இந்தக் காதலுக்கு ஒரு நாளை ஒதுக்கி வகுப்பது அர்த்தமற்றது.எந்நாளும் குறைவில்லாக் காதலர்களே! இன்பமான வாழ்வை வாழ்கின்றனர்.
ஆக, காதல் என்பது அன்பு - ஈர்ப்பு என்பவற்றுடன் கருத்தொருமித்து வாழ்தலையும் குறித்து நிற்கிறது என்ற உண்மை உணரப்படவேண்டும்.
ஆதலால்தான் காதலர் இருவர் கருத்தொரும த்து ஆதரவு பட்டதே இன்பமென்று நம்தமிழ் வகுத் துக்கொண்டது.