ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் கஃபே உணவகத்தில் ஆயுததாரி ஒருவரால் பலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்.
மார்டின் ப்ளேஸ் என்ற அந்தப் பகுதி முழுவதையும் நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் சுற்றிவளைத்து யாரும் நுழையாதபடி, மூடியுள்ளனர். மார்டின் ப்ளேஸ் ரயில் நிலையமும் மூடப்பட்டுள்ளது.அந்த உணவகத்திற்குள் குறைந்தது மூன்று பேர் ஒரு ஜன்னலுக்கு அருகில் கைகளைத் தூக்கியவாறு, அரபி எழுத்துக்களைக் கொண்ட கறுப்பு நிறக் கொடியைப் பிடித்தபடி இருப்பதைப் பார்க்க முடிந்தது.
"இந்தச் சம்பவம் மிகுந்த கவலைக்குரியது" என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் இருப்பது யார் எனத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதச் சம்பவமாகப் பார்க்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் நியூ சவுத் வேல்ஸின் காவல்துறை ஆணையர் ஆண்ட்ரூ சிபியோன், பல பிணைக் கைதிகளை ஆயுதம் தாங்கிய ஒருவர் பிடித்துவைத்திருப்பதை உறுதிசெய்துள்ளார்.
முன்னதாக, நகரின் பல பகுதிகளில் இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் பரவின. ஆனால், மார்ட்டின் ப்ளேஸைத் தவிர, வேறு எங்கும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஒரு மனிதன், கையில் பையுடனும் துப்பாக்கியுடனும் லிண்ட் கஃபேவிற்குள் போவதை சிலர் பார்த்துள்ளனர்.
சுமார் பத்து ஊழியர்களும் 30 வாடிக்கையாளர்களும் உள்ளே இருக்கலாம் என லிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த உணவகத்தின் ஊழியர்கள் என்று கருதப்படும் மூன்று பேர், அரபியில் எழுதப்பட்ட கறுப்புக்கொடி ஒன்றை ஜன்னலில் காட்டியபடி நிற்கும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சித்து வருகிறோம் என ஆணையர் சிபியோன் தெரிவித்துள்ளார்.
மார்டின் பிளேஸ் பகுதியில்தான் மிகப் பெரிய இரண்டு வங்கிகளின் தலைமையகம் இருக்கிறது. அங்கிருந்து சில தெருக்கள் தாண்டி அம்மாநில சட்டமன்றம் இருக்கிறது.
சமீப நாட்களாக ஆஸ்திரேலியாவில் பல தீவிரவாத அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் சில, இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புக்கு எதிரான யுத்தத்தோடு தொடர்புடையவை.