"எங்கள் இன அடையாளங்களும் வாழ்வுரிமையும் அழிக்கப்படுகின்றன போகட்டும் எங்கள் கஜாணாக்கள் நிறைகிறதே"

"எங்கள்  இன அடையாளங்களும் வாழ்வுரிமையும் அழிக்கப்படுகின்றன போகட்டும்  எங்கள் கஜாணாக்கள் நிறைகிறதே"
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தது மட்டுமன்றி மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தைப் போக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் கெண்டுசெல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது
'நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புக் கிடைத்தது. இப்பங்கரவாதத்தினால் சகல இன மக்களும் துன்பப்பட்டனர். முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை மட்டுமன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கெலிஓயா நகரில் ஞாயிற்றுக்கிழமை (14.12.14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள் இவை..
இவை உண்மைதானா முஸ்லீம் தலைவர்களேமலையகத் தலைவர்களே?
இலங்கையின் சிறுபான்மை இனங்கள் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு காலகட்டத்தில் நிற்கின்றன. நீங்களும் நானும் இந்தச்சிறுபான்மை இனங்களின் உறுப்பினர்கள் என்ற வகையில் இந்தச்சந்தர்பத்தில் பெறுமதியான ஒரு உரையாடலை செய்ய வேண்டிய தேவை உள்ளது.
22 வருடகால ஊடகவாழ்வில் பல அனுபவங்களை நடைமுறையில் பெற்றுக் கொண்டவன் என்ற வகையில் எமது சகோதர இனமான முஸ்ஸீம் மக்களை நோக்கியும் அதன் வழி முஸ்லீம்மக்களின் பெருந்தலைவர்கள் என்ற வகையில் உங்கள் அனைவரையும் நோக்கியும் சில முக்கியமான விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
இதற்கு உமக்கு என்ன தகுதி இருக்கிறது அருகதை இருக்கிறது என நீங்கள் யாராவது கேட்க முனையலாம்.... 1990களில் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பொது தேசியத்தின் தற்கொலை என தலைப்பிட்ட, அந்த வெளியேற்றம் தவறு என்ற நிலைப்பாட்டை எடுத்த,  “சரிநிகர்” பத்திரிகையின் ஊடகவியலளர் குழாமில் நானும் ஒருவன்... என்பது மட்டும் அல்ல தொடர்ச்சியான எனது ஊடக பணியில் சிறுகான்மையினங்களின் உரிமைகளுக்கான குரல்களோடு இணைந்திருப்பவன் என்ற வகையிலும் அந்த தகுதி இருப்பதாக உணர்கிறேன்...
இதனால் உங்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதற்காக முன்கூட்டியே என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
போருக்குப் பின்னான அல்லது புலிகள் அழிக்கப்பட்ட பின்னான சூழலிலும் கூட சிங்களப் பெருந் தேசியவாதத்தின் தொடர்ச்சியான ஒடுக்குதல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகி வரும் சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களூம் மலையகமக்களும் தம்மிடையே பரஸ்பர புரிந்துணர்வும் அங்கீகாரமும் கொண்ட ஐக்கிய முன்னணியை அல்லது அதற்குத் தேவையான அடிப்படையான வேலைத் திட்டத்தையாவது உருவாக்க வேண்டும் என்ற பலமான எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் இன்றைக்கு எழுந்து வருகின்றன. தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் சாதாரண மக்கள் தொடங்கி  இவற்றின் சனநாயகச்சிந்தனை மிக்க புத்திசீவிகள் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் இந்த எதிர்பார்ப்பே நிரம்பியிருக்கிறது.
மகிந்த அரசாங்கத்தினது கடுமையான அழுத்தங்கள் மற்றும் கட்சிக்குள் உள்ளவர்களின் அழுத்தங்கள் காரணமாக நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசாங்கவரிசைக்குச் சென்றீர்கள்.
சலுகைகள் இன்றி நெடுநாள் எதிர்க்கட்சியாக இருந்து களைத்துப் போனதன்  விளைவில் கட்சிக்குள் எழுந்த அழுத்தங்கள் காரணமாக நீங்கள் மகிந்தவின் அழுத்தங்களுக்கு பணிந்து கொண்டதை ஒருவகையில் எங்களாற் புரிந்துகொள்ள முடிந்தது.
சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தின் தேவை இலங்கை சுதந்திரமடைந்தநாளில் இருந்து கடுமையாக பேசப்பட்டும் உணரப்பட்டும் வருவதை நாங்கள் இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு கொள்ள வேண்டியவர்கள் ஆகிறோம்..
அந்த வகையில் சிறுபான்மையினங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு வடக்கிலும்கிழக்கிலும்மலையகத்திலும் பின்னர் நாடு முழுவதிலும் பிற்போக்கான முரட்டுத்தனமான, குடும்பஆட்சியை தலைமையாகக் கொண்ட, சிங்களப் பெருந் தேசியவாதத்தின் சட்டரீதியான ஆளுமைக்குச் சவால்விடுக்க முனையவேண்டும் என ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதற்காக எதிர்த்தரப்பில் நிற்கும் பொது வேட்பாளர் சிங்களப் பெருந் தேசியவாதத்திற்கு அப்பாற்பட்டவர் அவர் ஆபத்பாந்தவர் என அவர்கள் நினைக்கவில்லை... குறைந்தது சுவாசிப்பதற்கான மீள் எழுவதற்கான கால மாற்றமாக எதிர்கொள்ள விரும்புகிறார்கள்..
இந்தவிடத்தில் சலுகை அரசியல் பற்றியும் ஒரு முறை திரும்பிப்பார்ப்போம்.
காலாதிகாலமாக இலங்கையின் ஆளும் பேரினவாதக் கட்சிகளுடன் முஸ்லீம் அரசியல்வாதிகள் மலையக அரசியல்வாதிகள் இணைந்துகொண்டு (இப்போ வடக்கு கிழக்கின் சில தமிழ் அரசில்வாதிகளும் இதற்கு விலக்கல்ல) பெற்ற சலுகைகள் யாருக்குப்பலன் தருபவையாக இருந்தன என்ற கேள்வி எழுகிறது.
அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் அரசியற் செயற்பாட்டாளாரனான திரு பௌசர் பின்வருமாறு கூறுகிறார்:
இன்றைய மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், முஸ்லிம் மக்களின் தேசிய இன உரிமைகளையோ, அவர்களுக்கான சமத்துவ இருப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக் கூடிய அரசாங்கம் அல்ல என்பது பகிரங்கமாக தெரிந்த உண்மைதான். ஒரு படி மேலாக இந்த அரசாங்கத்தினுள் அமைச்சர்களாக ,பிரதி அமைச்சர்களாக பதவி வகிக்கின்ற முஸ்லிம் மக்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரிந்ததே. ஆனாலும் ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் இன்று உள்ளனர்.
பாராளுமன்றத்தில் உள்ள பதினாறு முஸ்லிம் உறுப்பினர்களில் பதின்நான்கு பேர், ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களே. அரசாங்கத்திற்கு யார் கூடிய விசுவாசத்தினை காட்டமுடியும் என்ற சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருப் பவர்களாகவும், யாரை கவிழ்த்து முழு அதிகாரத்தினை பெறலாம் என சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கக் கூடிய காய்நகர்த்தலில் கைதேர்ந்தவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.
மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல
இன்னுமொரு அரசியற் செயற்பாட்டாளாரான    லத்தீப் பாரூக் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:
'தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராகத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அரசாங்கம் அளித்த சலுகைகளின் பின்னாற் சென்றனர்.  பலவீனமான எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதனையும் சாதிக்கப் போவதில்லை எனவும் அரசுடன் சேர்ந்து எமது சமூகத்திற்கு நல்லது செய்வோம் எனவும் கூறப்பட்டது.
இப்போது அவர்கள் அரசுடன் இணைந்திருக்கிறார்கள்.  எனவே முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் கவனம் எடுப்பார்கள் என முஸ்லீம்கள் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் அவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்களே தவிர சமூகத்திற்கு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
முஸ்லீம் அரசியல்வாதிகள்அதிகாரத்திற்கும் தங்களது நலன்களுக்குமாக முஸ்லீம் மக்களைப் பயன்படுத்தியதன் பின் கைவிட்டுவிட்டதாகவும் முஸ்லீம் மக்களை உண்மையிலும் பிரதிநிதிப் படுத்துபவர்களாக இருக்கவில்லை எனவும் முஸ்லீம் சமூகத்துள் எண்ணம் வளர்ந்து வருகிறது.
உதாரணமாக அண்மையில் வினைத்திறனற்றுத் தொழிற்படும் நிறுவனங்களையும் அவற்றின் சொத்துக்களையும் சுவீகரிக்கும் அரசின் சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது நிசப்தமே நிலவியது.   முஸ்லீம் அரசியல்வாதிகள் வாயே திறக்கவில்லை! 
தீவிர சிங்களத்தேசியவாதிகளான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் கூட தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.”
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில்  இருந்தவரும் மக்றூம் அஸ்ரப் அவர்களின் உறவினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதுர்க்கனி 1990 களில் முதலாவது முஸ்லீம் காங்கிரஸ் மகாநாட்டிற்கான மலரை என்னிடம் அச்சிட வந்தபோது (அப்பொழுது நான் அச்சுக்கூட உரிமையாளராகவும் இருந்தேன்) நிகழ்ந்த உரையாடலின் போது பின்வருமாறு கூறி வருத்தப்பட்டார்.
குருபரன் எங்களுடைய அரசியல் என்பது நான் உட்பட சலுகைகளை நோக்கியதாக மாறிவருகிறது. தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்ட அரசியல் போலல்லாது இப்போ இந்தப் பேரினவாத அரசாங்கங்களுடன் சலுகைகளுக்கான பேரம் பேசும் அரசியலாக முஸ்லீம் அரசியல் இழுபட்டுச் செல்கிறது
இவற்றில் இருந்து மிகவும் தெளிவாகத் தெரிவது என்னவெனில் சலுகை அரசியலால் சாதாரணமான முஸ்லீம் மக்கள் எந்த நன்மையையும் அடையவில்லை என்பதுடன் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாகும். அது மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தின் உண்மையான அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் சனநாயகவாதிகளும் இந்த அரசியல் நிலைபாட்டுடன் உடன்பாடு கொள்ளவில்லை என்பதும் வெளிப்படுகிறது. ஒருசிலரின் நலன்களுக்கு மட்டும் பிரயோசனப்படும் இந்தச்சலுகை அரசியலை என்றேன்றும் கட்டி கொண்டிருப்பதற்காகத்தான்
இங்கே இன்னொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறதுசட்டத்தரணியான மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கத்தில் அவரின் கீழ் நான் நீதி அமைச்சராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்என சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூவ் ஹக்கீம் அன்று ஒருநாள் கூறியிருந்தார்..
உள்நாட்டிற்  சிங்களப் புத்திஜீவிகளில் இருந்து சிங்கள மனித உரிமைவாதிகள் வரையும் சர்வதேச அளவில் மனித உரிமைகள் அமைப்புகளில் இருந்தும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் வரையும் மகிந்த ராஜபக்ஸமீதும் அவரது சகோதரர்கள் மீதும் இலங்கைப்படைகள் மீதும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் பற்றிக் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருந்த போது சிறந்த சட்டத்தரணியும் சட்ட வல்லுனரும், அரசியற் புத்திஜீவியாகவும் மதிக்கப்படும் அமைச்சர் ரவூவ் ஹக்கீம், மகிந்தவின் ஆட்சியில் அவரின் கீழ் நீதி அமைச்சராக இருப்பதற்கு பாக்கியம் செய்திருப்பதாக தெரிவித்தமையை அவரின் ஆன்மாவின் மரணமென்று சொல்ல வேண்டாமா?
ஏனேனில் இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து முஸ்ஸிம் மக்களுக்கு மோசமான கொடுமைகளைச் செய்த சிங்கள அரசுகளுக்கு முஸ்லீம் தலைமைகள் பரிபூரண ஆதரவை அளித்தே வந்துள்ளன.
இவற்றுக்கான உதாரணங்களாகச் சிலவற்றைக் கீழே தருவதற்கு முன் அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான்ஜான் கனடாவில் ஆற்றிய உரை ஒன்றையும் இங்கு தருகிறேன்.
"தம்புள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் என்பது ஒன்றும் முதன்முதலாக நடப்பது அல்ல. புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமது கவனங்களை யுத்தத்தை ஆதரிப்பதில் தீவிரமாக குவித்திருந்த சிங்கள தேசியவாதிகள், யுத்தம் முடிந்த உடனேயே தமக்கான புதிய இலக்குகளை தேர்ந்தெடுத்து அவற்றின்மீது தமது தாக்குதல்களை தொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். மலையக மக்களது இந்து ஆலயங்கள் மணி அடிப்பது தொடர்பான பிரச்சனையை கிளப்பியதிலிருந்து அடுத்து அடுத்து வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற பிரச்சனையை கிளப்பி வந்தவர்களின் அண்மைக்கால இலக்குத்தான் தம்புள்ள பள்ளிவாசலாகும். இந்த போக்கு இத்துடன் நிறுத்தப்பட மாட்டாது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் சிங்கள தேசியவாதத்தின் இருப்பானது இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலமாகவே தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். சிங்கள அரசியல் தலைமையும், சட்ட ஒழுங்கைக் காக்க வேண்டிய படையினரும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாதவர்களான இருக்கும் வரையில் இந்த சிங்கள தேசியவாத சக்திகள் முழுச்சுதந்திரமாக செயற்படமுடியும்: அவ்வாறுதான் செயற்படும். ஏனெனில் சிங்கள தேசியவாத சக்திகள் சிங்கள சமூகத்தின் மீது தமது சித்தாந்த மேலாண்மையை திடமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் வரையில், இலங்கை சமூக உருவாக்கத்தின் திசைவழியை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாக இவர்களே திகழப்போகிறார்கள்"      அந்த வகையில்
 இலங்கையின் வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்  1915ல் முதன்முதலாகக் கண்டியிற் மிகப்பெரிய கலவரம் முஸ்லீம்களுக்கு எதிராகப் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டது. அது பின் நாடு முழுவதுமாக பரவியது. இதில் பெருமளவு உயிரழிவுகளும் சொத்து அழிவுகளும் ஏற்பட்டன.
முஸ்லீம்களுக்கு எதிரான இரண்டாவது மிகப் பெரிய இனக் கலவரம் புத்தளத்தில் 1976 ஆம் ஆண்டு இடம்பெற்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்தக் கலவரத்தில் புத்தளமும் அதனை அண்மித்த கிராமங்களும் முஸ்லீம் பள்ளிவாசல்களும் கடுமையாக தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் பெரும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் பல முஸ்லீம்கள் கொல்லவும்பட்டனர்.
1982ல் ஐக்கியதேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் காலியில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதன் பின்னர் தொடர்ச்சியாக கண்டி மாவட்டம் மாவனல்லவில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இனக் கலவரத்திற் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.“
இவை தவிரவும் களுத்துறை, பேருவில பகுதிகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்ததனை வரலாறு மறக்காது.
சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இறுதித் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்னவில் முஸ்லீம் இளைஞர்கள் துடி துடிக்கக் கொல்லப்பட்டார்கள். (இது முஸ்லீம் தலைவர்கள் பலரின் சொந்த மாவட்டடம்.) அன்றைய பிரதி பாதுகாப்பு அமைச்சரான  அனுருத்த ரத்வத்தை முஸ்லீம் காங்கிரசிற்கு  சவால் விடுத்து தனது கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் மூலம் இந்த முஸ்லீம் இளைஞர்களைக் கொன்று முடித்தார். அவரை இந்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கடைசிவரை பாதுகாத்தது.
இவைதவிர இன்றுவரையும் முஸ்லீம்மக்கள் அனுபவித்து வரும் சில முக்கியமான பிரச்சனைகளையும் பார்ப்போம்
அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி பிரதேசத்தைச் சூழ உள்ள பிரதேசங்களில் முஸ்லிம்களுடைய நிலங்கள் சிங்களத் தரப்பால் அபகரிப்பப்பட்டு வருகின்றன.
அந்நிலங்கள் தொடர்பாக முஸ்லிம்கள் நீதிமன்றுக்குச் சென்று நீதிமன்றம் அவை முஸ்லிம்களுடைய நிலங்கள் தான் என்று தீர்ப்புரைத்த பின்னரும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் அந்நிலங்கள் முஸ்லிம்களிடம் திருப்பி வழங்கப்படவில்லை (இது முஸ்லீம் தலைமைகளுக்கும் தெரியும்.)
தம்புல்லவில் அரை நூற்றாண்டாக முஸ்லீம்களால் பேணப்பட்டு வணங்கப்பட்டு வந்த பள்ளிவாசல் நீங்கள் நீதி அமைச்சராக இருக்கும் போதே  மிகப் பிரபலமான பௌத்த பிக்குவொன்றின் தலைமையில் வெளிப்படையாகவே அடித்து நொருக்கப்பட்டது மட்டுமன்றி இது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனையாக நீறுபூத்த நெருப்பாக உள்ளது.
மேலும் தெகிவளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்குத் தொடர்ச்சியாக பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லீம்களுக்கும் சிறுபான்மையினருக்கும் தொடரும் அரச ஆதரவுடனான நெருக்குதல்கள் இலங்கை வரலாற்றில் என்றும் இருந்ததில்லை...
2014 ஆம் ஆண்டில் மகிந்தராஜபக்ஸகோத்தாபய ராஜபக்ஸபொதுபலசேனாக் கூட்டு முன்னணியால் முஸ்லீம்களுக்கு எதிராகவும் கிறீஸ்தவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகைளை கொழும்பின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பு இன்போம் அறிக்கையாக வெளியிட்டு இருந்தது... அதன் தமிழாக்கத்தை தருகிறேன்....
முஸ்லிம்களிற்கு எதிரான வன்முறைகள்
January 2, 2014- மாத்தறை மாவட்டத்திலுள்ள தங்கஸ்வல என்ற இடத்தில் உள்ள முஸ்லிம் ஒருவரிற்கு சொந்தமான மாட்டுஇறைச்சிகடை இழுத்து மூடப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர் நாகோட ஸ்ரீ சுன்னட வித்தியாலய அதிபரும் விகாராதிபதியுமான வெல்வே சுஜாதா தேரர் ஆவார்.
January 4, 2014வீதி அபிவிருத்திக்கென கூறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையானது மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ளை என்ற இடத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை சுற்றி குடியிருந்த சுமார் 107 குடும்பங்களை அந்த இடத்திலிருந்து அகலும் படி உத்தரவிட்டது. முஸ்லிம் மக்களை அந்த இடத்தை விட்டு அகற்றி விட்டு,  பள்ளிவாசலை இடித்தழிப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. 
January 19, 2014 – கண்டி-குருணாகல் வீதியிலுள்ள மாவத்தகம என்ற நகரிலுள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின் முன்பு தொங்கவிடப்பட்டஅமைதியாக இருக்கவும்என்ற சமிக்ஞை பலகை தீயிட்டு அழிக்கப்பட்டது. ஏற்கனவே இதை அகற்றுமாறு பொது பல சேனா போலீசாரிடம் தெரிவித்த நிலையில் இது நடந்தது. இதை தொடர்ந்து இந்த சமிக்ஞை பலகையை அகற்ற வந்த போலீசாருக்கும்  மக்களிற்கும் இடையில் பதற்றம் நீடித்தது.
February 13, 2014- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள முஸ்லிம்களின் பிரார்த்தனை அறையானது, அந்த வைத்தியசாலையில் உள்ள விகாரைக்கு பொறுப்பான பிக்குவினாலும் அவரது ஆதரவாளர்களினாலும் பலவந்தமாக இழுத்து மூடப்பட்டது.
February 19, 2014- கண்டியிலுள்ள டி.எஸ்.சேனநாயக்க வீதியிலுள்ள ஜின்னா பள்ளிவாசலிற்குள் புகுந்த மாவனல்ல பகுதியிலிருந்து வந்ததாக கூறப்படும் பதினான்கு பேர் கொண்ட குழு பள்ளிவாசல் கட்டடத்தையும் அங்குள்ள பொருட்களையும் அடித்து நாசப்படுத்தியது.
March 3, 2014 – கொழும்பு நாவல ஏன்ற இடத்திலுள்ள ஜனாதிபதி பாலிக வித்தியாலயத்தில் கல்வி பயின்ற முஸ்லிம்களின் பாரம்பரியத்தோடு இசைந்த பாடசாலை சீருடை அணிந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் இருவர், மொட்டாக்கை கழற்றி விட்டு முழங்காலில் இருந்து அதிபரை வணங்குமாறு மிகவும் கேவலமாக அவமானப்படுத்தப்பட்டனர்.
March 22, 2014 – மாவனல்ல என்ற இடத்தில் அமைந்துள்ள கசன்மாவத்தை என்ற இடத்தைஅநாகரிகதர்மபால மாவத்தைஎன்று பலவந்தமாக மாற்றி விட்டு, இலங்கையில் உள்ள எல்லா இடங்களும் சிங்கள பௌத்தத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறி அங்குள்ள மக்களை மிரட்டி சென்றது பொது பல சேனா.
March 26, 2014 – தம்புள்ளையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு 25 ஆம் தேதி இரவு, இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டன.  இதில் ஒரு குண்டு மட்டுமே வெடித்ததால் சிறியளவு சேதத்துடன் பள்ளிவாசல் தப்பியது. இரண்டு போலீசார் சம்பவ நேரத்தில் காவல் கடமையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
April 23, 2014 –கம்பொளை நகரிலுள்ள மஸ்ஜிதுல் இல்காம் பெபில என்ற பள்ளிவாசலில் மதியநேர தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீதியை அபகரித்து இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று கூறிக்கொண்டு இரண்டு வாகனங்களில் வந்த பௌத்த பிக்குமார் உள்ளே அத்துமீறி நுழைந்து பள்ளிவாசலை பல கோணங்களில் ஒளிப்பதிவு செய்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
May 6, 2014 – 65 வருடங்கள் பழமையான தம்புள்ள பள்ளிவாசலை அழிக்கும் நோக்கிலான வீதி அபிவிருத்தி பணிகள் ஸ்ரீ சுமங்கள தேரரின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்தது.
May 8, 2014 – பிக்குகளின் முறைப்பாட்டை அடுத்து, வத்தளையில் உள்ள டிப்பிட்டி கோடா என்ற இடத்திலுள்ள மஸ்ஜிதுல் மொகிதீன் என்ற பள்ளிவாசலிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியது.
May 09, 2014 – அளுத்கம என்ற இடத்திலுள்ள முஸ்லிம் ஒருவரிற்கு சொந்தமான கடையானது அங்கு மூன்று பிக்குகளுடன் அங்கு வந்திருந்த 250 ற்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
May 14, 2014 கந்தானை என்ற இடத்திலுள்ள பள்ளிவாசளிற்கு சொந்தமான நாற்பது பேச் நிலத்தினை மூன்றாக பிரித்து சிங்களவர்களிற்கு வழங்கப்பட்டது.
May 18, 2014- மாவனல்ல என்ற இடத்திலுள்ள முஸ்லிம் ஒருவரிற்கு சொந்தமான வன்பொருளகம் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது.
May 19, 2014 – பாணந்துறையில் அத்தாஸ், காசிம் என்ற இரண்டு அப்பாவி முஸ்லீம் வியாபாரிகள் அதிகாலை இரண்டு மணியளவில் முகமூடி அணிந்த கும்பலால் நீங்கள் முஸ்லிம்களா எனக்கேட்டவாறு மோசமாக தாக்கப்பட்டனர்.
May 16, 2014-  கம்பொலை முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் மீது அதிகாலை நடாத்தப்பட்ட கல்லெறி தாக்குதலில் பாடசாலையின் ஓடுகளும் கண்ணாடிகளும் நொருக்கப்பட்டதுடன் பெயர்ப்பலகையும் அடித்து சிதைக்கப்பட்டது. 
May 27, 2014- பதுளையில் தாடிவைத்திருந்த சிங்களவர் ஒருவர் முஸ்லிம் என தவறாக கருதப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.
May 28, 2014-  பதுளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொது பல சேனா, அந்த வழியால் சென்ற 12 வயதே நிரம்பிய முஸ்லிம் சிறுவனை கடுமையாக வெறித்தனமாக தாக்கியது.
May 28, 2014- மாவனல்லையில் அமைந்துள்ளமஸ்ஜிதுல் தாருல் கிக்மாஎன்ற பள்ளிவாசலிற்குள் நுழைந்த கிரிமினைய விகாரையை சேர்ந்த இரு பிக்குகள், அந்த பள்ளிவாசலை இழுத்து மூடுமாறு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
கிறிஸ்தவர்களிற்கு எதிரான வன்முறைகள்
05th January 2014- காலி மாவட்டத்திலுள்ள ரத்கம என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார் வீட்டிற்கு சென்ற பிக்குகளும் அவர்களின்  ஆதரவாளர்களும் பாதிரியார் வீட்டை அடித்து நொறுக்கினர். பாதிரியார் வெளியே வராமல் போலீசாரை அழைத்தமையால் தப்பிப்பிழைத்தார்.
05th January 2014- காலி மாவட்டத்திலுள்ள கிக்கடுவ என்ற இடத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிறு அன்று வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளே சென்ற ஐந்து போலீசார் வழிபாட்டை இடைநிறுத்துமாறு வற்புறுத்தினர். பின்னர் இந்த தேவாலயம் சட்டவிதிகளிற்கு அமைவாக இல்லாதிருப்பதாக கூறி பிரதேச செயலர் கடிதம் ஒன்றை அனுப்பினார்.   07th January அன்று இந்த தேவாலய பாதிரியார் மீது பிக்குகள் தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
08th January 2014- ஏற்கனவே பிக்குகள் இந்த தேவாலயம் தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில், கம்பகா மாவட்டத்திலுள்ள நல்லெ என்ற இடத்திலுள்ள தேவாலயத்தின் பாதிரியார் வீட்டின் மீது மூன்று தடவைகள் கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.
12th of January 2014- காலி மாவட்டத்திலுள்ள கிக்கடுவ என்ற இடத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிறு அன்று வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பிக்குகள் தலைமையிலான 300 ற்கும் மேற்பட்ட காடையர்கள் உள்ளே புகுந்து தேவாலயத்தை அடித்து உடைத்து நாசப்படுத்தியதுடன் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோர்களை அச்சுறுத்தும் படியாக நகராது செய்தனர்.
12th January 2014- கோமாகமவிலுள்ள பிட்டிப்பான என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்யும் இல்லம் ஒன்று அதிகாலை தீயிடப்பட்டது.
26th January 2014- காலி மாவட்டத்திலுள்ள ரத்கம என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு பிக்கு ஒருவர் சகிதம் புகுந்த எட்டு போலிசார், வழிபாட்டை இடைநிறுத்தியதுடன் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு வரும் படி உத்தரவிட்டனர்.
08th February 2014- மொனராகலை மாவட்டத்திலுள்ள செவனகல என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தினுள் புகுந்த பிக்கு தலைமையிலான குழு வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோறை அச்சுறுத்தி சென்றது. பின்னர் பாதிரியார் வீட்டின் மீது கல் வீசி சேதப்படுத்தியது.
16th February 2013- கண்டி அஸ்கிரியவில் உள்ள கிறிஸ்தவ மதகுரு வீட்டிற்குள் புகுந்த 11 பிக்குகள் அடங்கிய 250 ற்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று, மதகுருவையும் அவரது மனைவியையும் இழுத்து வெளியே தள்ளி அங்கு இனி வழிபாடு செய்யக்கூடாது என்று அச்சுறுத்தியது.
17th February 2014- கொலன்னாவ என்ற இடத்திலுள்ள சோமாதேவி பாலிக வித்தியாலயத்தில் ஆறு வயது கிறிஸ்தவ மாணவர் பௌத்த சடங்கை பின்பற்றவில்லை என்ற காரணத்தால் பாடசாலை அதிபரால் மோசமாக தண்டிக்கப்பட்டார்
24th February 2014- பலாங்கொடவில் உள்ள கிறிஸ்தவ மதகுரு பிக்குகளுடன் வந்த பொலிசாரால் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு தேவாலயத்தை இழுத்து மூடுமாறு மிரட்டப்பட்டார்.
09th March 2014- மகியங்கனையில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த 6 பிக்குகள் அடங்கிய  60 ற்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு ஒன்று, அங்கிருந்த மதகுருவை மோசமாக தாக்கி விட்டு இனி இங்கு வழிபாடுகள் இடம்பெறக்கூடாது என மிரட்டி விட்டு சென்றது.
31st March 2014- களுத்துறையிலுள்ள வேலபுற மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற கிறிஸ்தவ மதகுருவின் மகனான 13 வயது மாணவன் பௌத்த சடங்குகளை பின்பற்றாமையை காரணம் காட்டி பாடசாலையை விட்டு விலகி செல்ல பெற்றோர்கள் உத்தரவிடப்பட்டார்கள்.   
04th April 2014- கல்குடாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமும் அதனுள் இருந்தத புத்தகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
26th April 2014- சப்புகஸ்கந்த என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தினுள் புகுந்த ஐந்து பொது பல சேனாவை சேர்ந்த பிக்குகள் அங்கிருந்தோரிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்து சென்றனர்.
15th May 2014- வத்தேகமவிலுள்ள வீட்டிற்கு வழிபாடு சம்பந்தமாக சென்ற கிறிஸ்தவத்தை போதிக்கும் பெண் ஒருவர், அங்கு ஐந்து பிக்குகள் தலைமையில் வந்திருந்த இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்களினால் அருகிலுள்ள விகாரைக்கு அழைத்து செல்லப்பட்டு கழுத்தை பிடித்து நெரிக்கப்பட்டு கொலை அச்சுறுத்தளிற்கு உள்ளானார்.
13th July 2014- வராக்கப்போலவில் உள்ள கிறிஸ்தவ மதகுரு வீட்டிற்கு போதனை பெற சென்றோர் அருகில் நிலை கொண்டிருந்த பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
13th July 2014- வெலிகந்தையில் அமைக்கப்பட இருந்ததாக கூறப்படும் கிறிஸ்தவ தேவாலயம் 5 பிக்குகள் தலைமையில் சென்ற 150 பேரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
13th July 2014- மாவலவத்தை என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தினுள் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது புகுந்த 2 பிக்குகள் தலைமையில் சென்ற 25 பேரால் குழப்பப்பட்டது.
17th July 2014- திம்புலகல என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மதகுரு ஒருவர் பிக்குகள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் நிலையத்திலிருந்து வனத்த உத்தரவை அடுத்து பொலிஸ் நிலையம் சென்ற பொது அங்கு கூடியிருந்த பிக்குகளால் தாக்குதலிற்கு உள்ளாக ஏற்பட்ட முயற்சியிலிருந்து தப்பினார்.
19th July 2014- கிங்குராக்கொடவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மதகுரு வீட்டிற்கு சென்ற பிக்குகள் அடங்கிய குழு ஒன்று அங்கு மதகுரு இல்லாத நிலையில் அவரது மனைவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து சென்றனர்.
19th July 2014- மாத்தளையிலுள்ள நவுல என்ற இடத்தி உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்க சென்ற மின்சாரசபையினர், பிக்குகள் தலைமையில் அங்கு கூடியோரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.       
3rd August 2014- மரதானையிலுள்ள கிறிஸ்தவ வழிபாட்டிடம் ஒன்றில் புகுந்த போலீசார் அது சட்ட வரையறைக்கு உட்பட்டிருக்கவில்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டது.
08th August 2014- மொரட்டுவவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெறும் வழிபாடுகளை உடன் நிறுத்த பொலிஸ் உத்தரவு பிறப்பித்தது.
11th August 2014- இரத்தினபுரியிலுள்ள மாவலவத்தை என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெறும் வழிபாடுகளை உடன் நிறுத்த பொலிஸ் உத்தரவு பிறப்பித்தது.
2012 முதல் 2014 வரையான சம்பவங்களை பட்டடியல் இட்டு இருக்கிறார்கள் சிலோன் மூர்ஸ் என்ற இணைம்.. அதனை கீளே பார்வையிடலாம்..
2012
April          20  Dambulla Mosque 
May 25 Dehiwela Mosque
August  12  Pavvakodichchenai,  Batticaloa 
August  30  Kohilawatte,  Wellampitiya
October  26  Malwathu  Oya,  Sinha  Hanuwa,  Anuradhapura
November  02  Thelumbugolla,  Ridheegama
2013
January  9th,    Anuradhapuram Malwathuoya Mosque (மூன்றாவது தாக்குதல்)
February  22nd  Galle, Hirumbura Mohideen Jumma Mosque
February  28th   Kegalle Jumma Mosque
March  3rd     A Mosque was attacked in Opanayaka
March  3rd     A Mosque was attacked in Mahara
March 5th     A government minister ordered the removal of a mosque in Mahara
March  30th   Dematagoda, Colombo Mosque & Bookshop forced to close
April 7th Kotikawatta, Colombo
May          14th   Kolannawa,  Colombo
July          1st   Nawaladi Batticaloa
July 5th Grandpass Colombo
July 11th Mahiyangana,
July 21st Thoppur, Trincomalee
August 3&12 Attidiya, Colombo
August  10th  Grandpass temporary mosque attacjek
2014
June    15 : Aluthgama, Pansalwatta (Bentota), Beruwala
August 22 : Karumalaiyootru, Trincomalee
 
மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலியுடன் பேசும் போதும் அவர் சொன்னார் முஸ்லீம்களுக்கு எதிரான  426 சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது என.
இவ்வளவு சம்பவங்கள் இடம்பெறும் வரை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள - அமைச்சரவை அந்தஸ்த்து இல்லாத முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசங்கத்துடன் தானே இருந்தார்கள்... தமது இனம்தமது வணக்கஸ்தலங்கள்தமது வாழ்விடங்கள் தமது கலாசாரம் யாவும் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்ட பின்பும் இந்த தலைவர்கள் அரசாங்கத்தையும் மகிந்த ராஜபக்ஸவையும் காப்பாற்றத் தானே துடித்தார்கள்.. துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்...
புத்தளம் நகர பிதாவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்த்தருமான பாயிஸ் அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சொல்கிறார்...
பள்ளிவாசல்களை எதிர்க்கட்சிகள் ஏன் உடைத்திருக்கக் கூடாது,   அரசாங்கத்தின் மீது பழியை போடுவதற்காக அப்படி செய்திருக்கலாம் தானே என அசாத்சாலியைப் பார்த்து கேட்டார்...
பொதுபல சேனா இயக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்தால், தாம் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு முஸ்லிம் சமூகம் ஆதரவளித்தால் 1915ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளைப் போன்றே 2015லும் இடம்பெறக் கூடுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் நிசார் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தின் எச்சரிக்கைகள் குறித்து அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை வெளியிடவில்லை எனக் கூறும் அவர், யாருக்கு ஆதரவளிப்பது என்பதனை விடவும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பே கட்சிக்கு முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயின் 2012 முதல் 2014 வரை முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற இடம்பெறுகின்ற நிகழ்வுகளையோ, பொதுபலசேனாவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதையும்  காணாது நிசார் காரியப்பர் கோமா நிலையில்  இருந்தாரோ?
ரிஸாத்பதியுதீன் இன்னும் மெனம் கலைக்கவில்லை.... காரணம் மகிந்த அரசாங்கத்தில் அதிகபட்ச சலுகைகளை அனுபவித்ததோடு இடக்குமுடக்கான பைல்களையும் மகிந்தவின் மேசையில் தயாராக இருக்க வைத்துவிட்டார்...
இப்போ இன்னும் மிரட்டல்களை விட பொதுபலசேனா ஆரம்பித்துவிட்டது.
அதன்படி கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த இயக்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத அமைப்புக்கள் இயங்கி வருவதாகவும், இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது.
இது குறித்து பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் கூறுகிறார்....
கிழக்கு தீவிரவாத இயக்கங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரின் எச்சரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருகிறது.
இந்த வாரம் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற துயரமான சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கிழக்கில் தீவிரவாத அமைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்
கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வருவதாக சர்வதேச அமைப்புக்கள் கூட எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு கிழக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து மெத்தனப் போக்கைப் பின்பற்றி வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் குறிப்பாக ஜிஹாதிய இயக்கங்கள் இயங்கி வருகிறது.
இவை பொதுபல சேனா இயக்கத்தின்  குற்றச்சாட்டுக்கள்...
இப்படியெல்லாம் நடந்துகொண்டு இருக்கையில் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் முஸ்லீம் தலைவர்கள்.. வேற்றுலக கிரகவாசிகள் போல் எதையுமே அசட்டை செய்யாது இருப்பது உலக அதிசயங்கள் தான்...
எம் இனம் கண்முன்னே அழிந்து கொண்டு போகிறது... அதன் வழிபாட்டு தலங்கள் சிதைத்து அழிக்கப்படுகின்றன... காலம் காலமாக எங்கள் இனம் வாழ்ந்த பூர்வீக இடங்கள் கண்முன்னே அபகரிக்கப்படுகின்றன... முஸ்லீம்களின் இனத்துவ அடையாளங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாதொழிக்கப்படுகின்றன. வர்த்தக ஆதிக்கம் தகர்க்கப்படுகிறது... எம்மினப் பெண்களின் பர்தாவை புடுங்கியெறியத் திரிகிறார்கள்... கடும்போக்கு பௌத்த சிங்கள இனவாதிகள்...  மலைபோல் இவ்வளவு பிரச்சனைகளைக் கண்டு முஸ்லீம் மக்கள் கொதித்தெழுகிறார்கள்....
ஆனால் இவைஎல்லாம் நமக்கு தெரியாதைவை அல்லவே.. அவை தொடர்ந்தால் நமக்கென்ன... இருந்துட்டு போகட்டுமே... ஒவ்வொரு தேர்தல்கள் நெருங்கும் போதும் எம் இனத்தின் பேரம் பேசும் பலத்தை தனிப்பட்ட எமது சொந்த பலத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவது தவறா? யார் சொன்னது... எங்கள் கஜானாக்கள் நிரம்பிக் கொண்டுதானே இருக்கின்றன...
மக்களுக்கு ஆட்சிமாற்றம் தேவைப்படலாம் காரணம் அவர்களுக்கு பிரச்சனைகள் அதிகம் இருக்கலாமம்... நமக்கு மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் என்ன குறைவிட்டார்கள்? ஆக மகிந்தரின் முன்னே கைகட்டி வாய்பொத்தி நிற்பது மட்டும் தானே நம் கடமை... எத்தனை ஆட்சியாளர் முன் இனத்தின் நலன் எனக் கூறி நம்நலன் பேண கைகட்டி வாய்பொத்தி நின்றிருப்போம்... தேர்தல் காலங்களில் நமது முழக்கங்களை கேட்டு மயங்குவது போல் இம்முறையும்  முஸ்லீம் மக்கள் மயங்கமாட்டார்களா???? என வழமைபோல்  முஸ்லீம் தலைவர்கள் நினைக்கிறார்கள்...
சமூக வலைத்தளங்களையும்... ஊடகங்களையும்.... பார்க்கும் போது முஸ்லீம் மக்கள் மட்டும் அல்ல மலையக மற்றும் வடக்கு கிழக்கு மக்களும் தமது தலைவர்கள் என்ன சொல்வார்கள்...ஆணையிடுவார்கள் என காத்திருக்கவில்லை.... 2015 ஜனவரி 8ஆம் திகதி என்ன செய்ய வேண்டும் என்பதனை தாமே தீர்மானித்திருப்பது போல் தெரிகிறது... பொறுத்திருந்து பார்ப்போமே....
நடராஜா குருபரன்...
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila