வலிகாமம் வடக்கில் விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்த காணிகள்

0வலிகாமம் வடக்கில் விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்த படையினர் அங்கிருந்து வெளியேற விரும்பாதவர்களாகவே காணப்படுகின்றார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
வலிகாமம் பகுதிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்ற முதலமைச்சரிடம், அங்குள்ள நிலைமைகள் குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
“வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து இப்போதுதான் நான் திரும்பியிருக்கின்றேன். வசாவிளான், ஒட்டகப்புலத்தில் 197.6 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இருந்தபோதிலும் 90 ஏக்கர் வரையிலான காணி மட்டும்தான் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. அதுகூட பயன்படுத்தப்ட முடியாத காணியாகவே உள்ளது.
தோலகட்டி பண்ணைப் பகுதி விடுவிக்கப்படுவதாக இருந்தது. இருந்தபோதிலும் விடுவிக்கப்படவில்லை.
கடந்த வியாழக்கிழமை அச்சுவேலி வீதியூடாக வளலாயிலிருந்து பலாலிக்கு நான் சென்றேன். இன்று பலாலி வீதியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மைல் தொலைவிற்கு அந்த வீதி மூடப்பட்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. இதனால், பலாலி வீதியிலுள்ள பிரதேச செயலக அலுவலகத்துக்கு அல்லது பாடசாலைக்குச் செல்வதானால் 30 கிலோ மீட்டர்கள் வரையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இராணுவம் இவ்வாறான ஒரு முடிவை ஏன் எடுத்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தப் பகுதியில் சொகுசான வாழ்க்கையை அனுபவித்த இராணுவத்தினர் இந்தப் பகுதியிலிருந்து வெளியேற விரும்பாதவர்களாகவே உள்ளனர்.
இராணுவக் கட்டளை அதிகாரி உடவத்தவுடன் தொடர்புகொள்வதற்கு நான் முயன்றேன். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பிரிகேட் கொமாண்டர் கேணல் கொடித்துவக்கு இன்று என்னைச் சந்தித்தார். ஆனால், இந்தப் பகுதி உடவத்தவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
மக்கள் குழப்படைந்திருக்கின்றார்கள். எமது காணிகள் விடுவிக்கப்படும் என நாம் அனைவரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் படையினர் ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்” எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று பகல் குறித்த பகுதிக்கு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி. கே.சிவஞானத்துடன் விஜயம் செய்திருந்த முதலமைச்சர், அங்குள்ள மக்களுடைய நிலைமைகள் தொடர்பாக ஒட்டகப்புலம் தேவாலயத்தில் மக்களையும், கிறிஸ்தவ மத தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
இதன்போது 197.76 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டபோதும் அந்தளவு நிலம் விடுவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மக்கள், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 30 ஏக்கர் வரையிலான 22 குடும்பங்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் விவசாய காணிகள் தவிர்ந்த வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தேவாலயங்கள் போன்றன தொடர்ந்தும் படையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இதனால் கடந்த 25வருடங்களாக தொடர்ந்த அவல நிலை மீண்டும் தொடரும் நிலைக்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் மக்கள் கண்ணீருடன் முதலமைச்சருக்கு கூறியிருந்தனர்.
இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும், மீள்குடியேற்ற விடயத்தில் அரசாங்கத்தின் பார்வையும், படையினரின் பார்வையும் வேறு, வேறாக உள்ளதா? என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக இன்று அப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
விடுவிப்பதாகக் கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இன்று அப்பகுதிக்குச் சென்ற வடக்கு முதலமைச்சரையும் இராணுவத்தினர் செல்ல விடாது தடுத்துள்ளனர்.
இராணுவத்தினரால் போடப்பட்ட புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சரை உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,  விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணிகளை உள்ளடக்கியதாகவே இராணுவத்தினரால் புதிய வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila