காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமக்கு நம்பிக்கையில்லை என தெரிவிக்கும் காணாமல் போனோரின் உறவினர்கள், உள்ளக விசாரணையை நிறுத்தி ஐ.நாவின் அனுசரணையுடன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியறுத்தினர். யாழ்ப்பாணம் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் ‘எமது உறவுகள் எங்கே’, ‘சர்வதேச விசாரணை வேண்டும்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கியிருந்தனர். இந்த அமைதிப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மதகுருமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சி கிளிநொச்சி தொண்டமான் நகரில் காணாமல் போனோரின் உறவினர்கள் அமைதிப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்குச் பேரணியாக சென்ற காணாமல் போனோரின் உறவினர்கள், ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். திருகோணமலை திருகோணமலையில் சிவில் சமூக அமைப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட காணாமல் போனோர் சங்கம் ஆகியோர் இணைந்து, திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.காணாமல் போன தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்தவும் தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டிருந்தது. மட்டக்களப்பு இதேவேளை காணாமல் போனோரின் உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு, மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், காணாமல் போனோரின் உறவினர்களால் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. வவுனியா அதேபோல், வவுனியாவில் காணாமல் போரின் உறவுகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த அதேவேளை, வவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சென்று அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். மன்னார் இதேபோல் மன்னாரிலும், காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கம் மற்றும் பிரஜைகள் குழுக்களின் ஒன்றியம் வடக்கு, கிழக்கு ஆகியவை இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், மக்கள் ஊர்வலமாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கென மகஜர் ஒன்றை கையளித்தனர். முல்லைத்தீவு முல்லைத்தீவில் இன்று காலை 11 மணிக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது. இங்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர் ஒன்று கூடியிருந்து கண்ணீருடன் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டங்களில் காணாமல் போனோரின் உறவினர்கள் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு, ஏக்கம் நிறைந்த சோத்துடன் காணப்பட்டனர். |
உள்நாட்டு விசாரணைக்கு எதிராக வடக்கு, கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் போராட்டம்!
Add Comments