நாலுபுறமும் இராணுவம் சூழ்ந்துள்ள நிலையில் மக்களை குடியேற்றுவருது என்பது கண்துடைப்பே. அதிலும் அவ்வாறான குடிறேறலிற்கு தாம் உதவப் போவதில்லை என உதவி அமைப்புக்கள் அறிவித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு கூறியுள்ளது.
ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகள் அரைகுறை விடுவிப்புடன் கைவிடப்பட்டுள்ளன. அதனை கைவிட்டு இப்போது புதிய இடங்களை விடுவிப்பது பற்றி பேசப்படுகின்றன. விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் விடுவிக்கப்படவில்லை. வெறும் தோட்டக்காணிகளே விடு விக்கப்பட்டுள்ளன. இதற்கப்பால் மக்கள் குடியிருப்பு காணிகளை ஊடறுத்து புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நிலையில் அரசு கூறுகின்ற புதிய இடங்கள் விடுவிப்பு நம்பிக்கையினை தரவில்லையென அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று வசாவிளான் மத்தியமகா வித்தியாலத்தில் விடுவிக்கப்படாத நிலப்பகுதிகள் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடி ஆராய்ந்திருந்தனர்.
இதே வேளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன. வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடல், தெல்லிப்பழை பிரதேச செயலகத் தில் நேற்றுக் காலை, அரச அதிபர் தலைமையில் நடத்தப்பட்டிருந்தது.
ஏற்கனவே முதல் கட்டமாக 430 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. வளலாயில் 233 ஏக்கர், வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு இணைந்து 197 ஏக்கர் நிலப் பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக வளலாயில் மேலும் 195 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை தெற்கு (ஜேஃ235), பளைவீமன்காமம் வடக்கு (ஜேஃ236), பளைவீமன் காமம் தெற்கு (ஜேஃ237), கட்டுவன் (ஜேஃ238), தென்மயிலை (ஜேஃ240), வறுத்தலைவிளான் (ஜேஃ241), மயிலிட்டி வடக்கு (ஜேஃ246), தையிட்டி தெற்கு (ஜேஃ250) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே பகுதியளவில் அடுத்த கட்டமாக விடு விக்கப்படவுள்ளன.