கூடுகட்ட முடியாத குயில்கள் காகக் கூட்டை நாடுகின்றன

குயில்கள் ஒருபோதும் அடைகாத்து குஞ்சு பொரிப்பது கிடையாது. காகக் கூட்டில் முட்டை யிடுவதைத் தவிர குயில்களுக்கு குஞ்சு பொரிப்பதில் - குஞ்சை வளர்ப்பதில் எந்தப் பங்களிப்பும் இல்லை. இவ்வாறு குயில்கள்  அடைகாக்காமல் இருப்பதற்குக் காரணம் கூடுகட்ட முடியாமல் போனதே ஆகும்.

அட! எல்லாப் பறவைகளும் கூடு கட்டி குஞ்சு பொரிக்க, இந்தக் குயில்களுக்கு மட்டும் ஏன் கூடு கட்டத் தெரியாமல் போனது என்ற கேள்வி  இப்போது எழுகிறது.

இங்கு தான் குயில்களின் ஒழுக்கம் என்ற விடயம் எழுகை பெறுகிறது. அதாவது பெண் பறவைகள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிப்பதாக இருந்த போதிலும் கூடு கட்டுதல் என்ற பிரசவத்திற்கான ஏற்பாட்டில் ஆண் பறவைகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாக உண்டு.

அது மட்டுமன்றி பெண் பறவை முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொரிக்கின்ற பணியை செய்யும் போது, பாதுகாப்பு மற்றும் உணவு தேடல் ஆகிய பெரும் பணியை அதன் சோடியான ஆண் பறவையே செய்து முடிக்கின்றது.

ஆனால் குயில்களிடம் அப்படியான ஏற்பாடு எதுவும் கிடையாது. ஒரு பெண் குயில் ஒரு ஆண் குயிலுடன் மட்டும் குடும்பம் நடத்துவது என்ற நெறிமுறையை மீறிவிடுவதன் காரணமாக, கூடு கட்டுகின்ற வேலையில் ஆண் குயில் பங்கேற்பதில்லை. ஆண் குயிலின் ஒத்துழைப்பு இல்லாமல் பெண் குயிலால் கூடுகட்டிவிட முடியாது.

ஆக, பரத்தையர் கூட்டமாக குயில்கள் இருப்பதன் காரணமாகவே அவற்றால் கூடுகட்டவும் அடைகாக்கவும் முடியாமல் போயிற்று. என்ன செய்வது எல்லாம் அவன் செயல் என்று விட்டு விடலாம்.

கூடுகட்ட முடியாத - அடைகாக்கத் தெரியாத குயில்கள் காகக் கூட்டுக்காகக் காத்திருக்கின்றன. கூடுகட்டத்தெரியாத குயில்கள் எங்ஙனம் காகக் கூடுகளுக்காகக் காத்திருக்கின்றனவோ அது போல இலங்கையின் அரசியலிலும் சிலர் காத்திருப்பது தெரிகிறது.

ஆம், இலங்கையின் அரசியல் புலத்தில் தமது அரசியல் பிழைப்புக்காக மற்றவர்களின் கூட்டில் முட்டையிடுவதைத் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகளும் இருக்கவே செய்கின்றனர்.

காகத்தின் கூட்டில் குயில்கள் முட்டையிடுவதால், காகத்தின் முட்டை எது? குயிலின் முட்டை எது? என்பதை இனங்கான முடியாத சூழல் ஏற்படுவது போல, நம் அரசியலிலும் அத்தகைய தொரு சூழல் ஏற்பட்டு விடுகின்றது.

குயில் குஞ்சு கூவும் வரை இனங்காண முடியாத நிலைமை இருப்பது போன்று, அடுத்தவர் கூட்டில் முட்டையிடும் அரசியல்வாதிகளின் சுயத்தை அறியாதவரை, அவர்களையும் நாம் இனங்காண முடியாது போகிறது.

எதுவாயினும் காகங்கள் விழிப்பாக இருக்காத வரை, குயில்கள் முட்டையிடுவதைத் தவிர்க்க முடியாது போல, அரசியல் கூடுகளைக் கட்டியவர்கள் விழிப்பாக இருக்காதவரை மற்றவரின் கூட்டில் முட்டையிடுகின்ற அரசியல்வாதிகளின் நடவடிக்கை தொடரவே செய்யும்.

இவ்வாறு இரவல் கூட்டில் முட்டையிட்டு தமது அரசியல் இருப்பைத்தக்க வைக்கின்ற அரசியல் வாதிகள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பொது மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல் இலக்குகள் மாற்ற மடையும்.     
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila