ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை புரிந்து கொள்வதற்கான மனிதங்கள் இன்னமும் எங்களிடம் வந்து போகவில்லை என்று சொல்லும் அளவிலேயே நிலைமை உள்ளது.
உள்நாட்டின் ஆட்சியாளர்கள் சரி, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சரி யார் எங்களிடம் வந்தாலும் அவர்களை நாம் நம்பும் அளவில் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக-நம்பிக்கை ஊட்டக்கூடியவர்களாக இருக்கவில்லை என்பதே உண்மை.
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வடபுலத்துக்கு விஜயம் செய்கின்றபோது, எங்கள் மக்கள், தங்களின் வாழ்விடங்களில் குடியிருப்பதற்கு ஆவன செய்யுமாறு; தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு; காணாமல் போனவர்களை கண்டறியுமாறு; கெஞ்சி மன்றாடியும் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றாயிற்று.
நாம் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக அரசியல் தீர்வு காணப்படும் என்று தேர்தல் காலங்களில் உத் தரவாதம் அளிப்பவர்கள், ஆட்சிப்பீடம் கிடைத்து விட்டால் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை மறந்து விடுவதுதான் முதலில் செய்வதாக உள்ளது.
தேர்தல் காலங்களில் உத்தரவாதம் தருவோர் ஆட்சிப்பீடம் ஏறியதும் எதிர்க்கட்சி அனுமதிக்காது; பெளத்த பீடம் ஏற்றுக் கொள்ளாது என்று கூறுவதெல்லாம் மிகப்பெரும் கபடத்தனம் என்பதை சர்வதேச சமூகம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை மண்ணின் பூர்வீகக் குடிகளாகவும்- ஆட்சிக்குரியவர்களாகவும் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் உரிமைகளை-அவர்களின் சுதந்திரத்தை பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் தடுப்பது என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
ஆக, இத்தகைய நிலைமைகளை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளுதல் என்ற விடயத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள், இலங்கையில் இருக்கக்கூடிய வெளிநாட்டு இராசதந்திரிகளின் புரிதல் என்பது இங்கு முதன்மை பெறுகிறது.
நேற்று முன்தினம் (07.02.2016) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹுசைன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் சர்வதேச கொள் கைகள் இடம் தராது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் அக்கொள்கை ஏற்புடையதாயினும் இலங்கை என்ற நாட்டுக்குள் கடைப்பிடிக் கப்படுகின்ற பொது விடயங்களை வலியுறுத்துவதில் சர்வதேச கொள்கைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்பதே நம் தாழ்மையான கருத்து.
அதாவது இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.
ஆக, சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றால் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதை வலியுறுத்துவதில் தவறில்லை.
அதேநேரம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அரசோடு சேர்ந்து செயற்படுகின்ற போது அவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கைக ளும் எடுக்காமல் விட முடியுமாயின், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை அரசிடம் கேட்பதில்-வலியுறுத்துவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.
ஆக, இலங்கைக்கு-வடபுலத்துக்கு வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதாக நடந்து கொள்ளக்கூடாது என்பதே நம் தாழ்மையான கருத்து.