
வட மாகாண சபை தனித்து செயற்படக் கூடாதென இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமென்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், அதன் அடிப்படையிலேயே அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த மஹிந்த அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் அழுத்தம் அதிகமாக காணப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து இணக்கப்பாட்டுடன் செயற்படும் முனைப்பில் அமெரிக்கா ஈடுட்டுள்ளது. இதற்கு, கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.நா அமர்வில் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானத்தின்போது வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வாறே இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இலங்கையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஏக பிரதிநிதிகளாக செயற்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தற்போது எதிர்க்கட்சியாக செயற்படுவதால் அரச பொறிமுறையின் பிரகாரம் அரசாங்கத்துடன் ஒன்றித்து போவதே சிறந்ததென, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வட மாகாண சபைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீனாவுடனான பொருளாதார செயற்பாடுகளை ஆரம்பம் முதலே இந்தியா எதிர்த்து வந்தது. எனினும், சீனாவுடனான பொருளாதார பிணைப்பை தவிர்க்கமுடியாத நிலையில் இலங்கை உள்ளதோடு, இடைநிறுத்தப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்கும் முனைப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை-சீனாவுடனான பொருளாதார ரீதியிலான தொடர்பில், இந்தியா எவ்வகையான பங்களிப்பை செலுத்தப்போகின்றது என்பதும் இங்கு முக்கிய பிரச்சினையாக காணப்படுகிறது.