பிரயோசனம் உள்ளதான கூட்டங்களை நடத்துங்கள்


கூட்டங்களை ஏற்பாடு செய்தல்-நடத்துதல் என்பன மிகவும் முக்கியமானவை. கூட்டங்களுக்கான ஏற்பாடு களைச் செய்வதில் விடப்படும் தவறுகள், அந்தக் கூட்டத்தையே பிரயோசனம் அற்றதாக்கி விடும். 
அதேபோல் கூட்டங்களை நடத்தும்போது அவை வினைத்திறன் உள்ளதாக இருப்பதும் அவசியம். இல்லையேல் கூட்டங்களால் எந்தப் பிரயோசனமும் ஏற்பட்டு விடமாட்டாது. 
வடக்கு மாகாணத்தில் ஜி.ஏ.சந்திரசிறி ஆளுநராக இருந்தபோது நடந்த கூட்டங்கள் பயனுறுதி மிக் கவையாக இருந்தன. 

அதேநேரம் சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரச அதிகாரிகள், அதிபர்கள் வரவழைக்கப்படுவது வழக்கம்.
அவ்வாறான  நிகழ்வுகளின் போது 12 மணிக்கு சந்திரசிறி வருவதாக இருக்கும். ஆனால் அரச அதிகாரி களும் அதிபர்களும் காலை எட்டு மணிக்கே நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு வந்து விட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கும்.
இதனால் எத்தனையோ மனித மணித்தியாலங்கள் வீணடிக்கப்பட்டதும் உண்டு.

ஆக, கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் எப்போதும் பயனுறுதி மிக்கவையாக நடத்தப்படுவதே ஏற்புடையது. இல்லையேல் கூட்டங்கள் மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டுவிடும். இந்த வகையில் தற்போது ஒருங்கிணை ப்புக் குழுக்கூட்டங்கள் பிரதேச மட்டங்களில் நடந்து வருகின்றன. எனினும் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டம் முழுமைக்கும் இருக்க முடியாதவர்களாக இருப்பதும்; உரிய அதிகாரிகள் கூட்டத்துக்குச் சமுகம் கொடுக்காமல் தவிர்ப்பதும்; கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் உரிய பொறுப்புக்கூறலை-பதில் அளிப்பதைத் தட்டிக் கழிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. 

பொதுவில் பிரதேச மட்டங்களில் நடத்தப்படும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் என்பன மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய்கின்ற கூட்டங்களாக இருப்பதால் அந்தக் கூட்டங்கள் எப்போதும் பய னுறுதி மிக்கதாக இருக்க வேண்டும்.       

குறித்த கூட்டத்தில் பங்கு பற்றியதால்-குறித்த கூட்டம் நடந்ததால் எங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினையை கூட்டத்தில் தெரிவிக்க முடிந்தது என்பதாக மக்கள் நினைக்கவேண்டும்.

இதைவிடுத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை நிறைவேற் றும்வகையில் ஒரு சம்பிரதாயத்துக்காக நடத்தி முடித்தால் எல்லாம் சரி என்று பொறுப்பானவர்கள் நினைத்தால்  அல்லது கூட்டத்தில் முக்கியமான விடயங்களை கதைக்க முற்பட்டால் ஏதாவது காரணங்களைக் கூறி அந்த விடயத்தை மழுங்கடிப்புச் செய்வதாக இருந்தால் கூட்டம் கூடுவதன்மூலம் வீணான செலவும் மனித மணித்தியால வீணடிப்புமே நடந்ததாக இருக்கும். 
எதுவாயினும் நடத்தப்படும் எந்தக் கூட்டமாயினும் அந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நன்மை கிடைப்ப தாக இருக்க வேண்டும். 

அவ்வாறு நன்மை பயப்பதாக இருந்தால் கூட்டங்களை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நடத்துவதும் கூட் டத்துக்கு வரவேண்டிய அதிகாரிகளுக்கு முற்கூட்டியே தகவல்களைக் கொடுத்து ஆயத்தப்படுத்தல்க ளுடன் அவர்கள் வருவதை உறுதிப்படுத்துவதும் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதும் குறித்த நேர வரையறைகளுக்குள் குறிக்கப்பட்ட விடயங்கள் பற்றி ஆராய்வதான நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியம். 

இவற்றுடன் கூட்டத்தில் இருக்கும் எவரும் பிள்ளையைக் கிணற்றுக் கட்டில் இருத்தி விட்டு வருகின்ற மன நிலையுடன் இருக்கக்கூடாது என்பதும் அவசியமாகும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila