ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்நேரத்தில் தமிழ் மக்கள் அவரை அன்போடு வரவேற்கின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் கடந்த வருடம் ஜெனிவாவில் நடைபெற்ற போது ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஒரு நியாயமான அறிக்கையை ஆணையாளர் முன்வைத்தமைக்கு எங்கள் நன்றிகள்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை இலங்கை நடைமுறைப்படுத்துகிறதா? என்பதை பார்வையிடுவதற்காக தாங்கள் வருவதையிட்டு நாம் ஆறுதல் அடைகின்றோம்.
உங்களின் வருகையின் போது இலங்கை அரசு போல எங்களால் வரவேற்பு உபசாரங்களை வழங்க முடியவில்லை என்ற மனக் கவலை இருந்த போதிலும் இந்த வரவேற்பு உபசாரங்கள் உங்கள் நீதியான-நடுநிலையான முடிவுகளில் எந்தத் தயக்கத்தையும் ஏற்படுத்தமாட்டாது என்பதிலும் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். உள்ளத்தால்-இதயத்தால் உங்கள் வருகையை வரவேற்கின்றோம்.
மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த தமிழினத்தை ஐ.நா சபையும் கைவிட்டு விட்டதோ என்ற மன ஆதங்கம் எங்களிடம் நிறையவே உண்டு.
போரில் சிக்குண்டு எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ் மக்கள் மன்றாடிய போது ஐ.நா சபை அமைதியாக இருந்ததுதான் எங்களுக்கு இருக்கக்கூடிய மிக உச்சமான கவலை. இலங்கை அரசு எங்களைக் காப்பாற்றும் என்ற நிலைமை இருந்திருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க மாட்டார்கள்.
2009ஆம் ஆண்டில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தங்கள் வாழ்விடங்களில் குடியிருக்க முடியாத பரிதாப நிலையிலேயே உள்ளன. காணாமல் போனவர்களை நினைந்து சதா கண்ணீர் விடும் உறவுகளின் அழுகைக்கு இன்னமும் முடிவு கிடைக்கவில்லை.
கூடவே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையின்றி பல ஆண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர். தவிர, இன்னமும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளதாயின் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றுகிறது என்று எங்ஙனம் சொல்ல முடியும்?
மரியாதைக்குரிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களே! இந்த நாட்டின் 68 ஆவது சுதந்திர நிகழ்வு கடந்த 4ஆம் திகதி நடந்த போது தமிழில்தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதற்காக தென்பகுதியில் கொதித்தொழும் சிங்கள அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்றால் இவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுக்க அனுமதிப்பாரா என்ன?
ஆக, இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக-சுதந்திரமாக வாழ்வதாக இருந்தால் அது சர்வதேச சமூகத்தால்-ஐ.நா சபையின் இறுக்கமான தீர்மானங்களால் மட்டுமே முடியும்.
இதை தங்களின் வருகை உறுதி செய்யும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர்.


