
நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுகிறார் என ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வட மாகாண சபையை விஸ்தரித்தல், வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பதாக அமையவில்லையென குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் ஹக்கடுவையில் நடைபெற்ற 32ஆவது மாகாண முதலமைச்சர்களுக்கான மாநாட்டை விக்னேஸ்வரன் புறக்கணித்தமையானது, வடக்கிலுள்ள பிரச்சினைகளை ஏனைய மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளதாகவும் அமைச்சரவை சந்திப்பிலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல எனவும் குறிப்பிட்டார். வடக்கு தமிழ் மக்களுக்காக விக்னேஸ்வரன் கடந்த மூன்று வருடங்களாக என்ன செய்தாரென கேள்வியெழுப்பிய நிஷாந்த வர்ணசிங்க, வடக்கின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியும் 20 வீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு எஞ்சியவை பயன்படுத்தப்படாமல் திறைசேரிக்கு அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இந்நிலையில், அரசியலமைப்புக்கு முரணான வகையில் வடக்கு முதல்வர் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தால், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமது கடந்த கால செயற்பாடுகளுக்கான காரணத்தை விக்னேஸ்வரன் விளக்கவேண்டும் என்றும் ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.