ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்டகேள்விக்கு பதிலளிக்காது எழுந்துசென்ற ஆளுநர்

ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்டகேள்விக்கு பதிலளிக்காது எழுந்துசென்ற ஆளுநர்வடக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் அல்லாத ஓர் இடத்தில் ஏன் புத்தவிகாரை எழுப்புகின்றீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது எனக் கூறி இடையில் எழுந்துசென்றுவிட்டார் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த திங்கட் கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் சிங்களவர்களே வசிக்காத கொக்குளாய் கிராமத்தில் ஏன் புத்தவிகாரையை அமைக்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கில் உள்ளவர்களும் தெற்கிலுள்ளவர்களும் உண்மையை விளங்கிக்கொள்ளாது செயற்படுகின்றனர். நயினாதீவில் அண்மையில் புத்த விகாரைக்கு தூபி ஒன்று எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தது. இது தொடர்பில் சிலர் உண்மை விளங்காது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வடபகுதியில் உள்ளவர்கள் இந்துக்கோயில்களை மறைத்து புத்ததூபி எழுப்பப்படுவதாக குற்றம்சாட்டினர். தென்பகுதியில் உள்ளவர்கள் பௌத்த விகாரை அமைப்பதற்கு வடக்கிலுள் ளவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டினர். ஆனால் அது உண்மையில்லை. அங்கு உண்மையில் இந்துக்கோயிலும் இருக்கிறது புத்தகோயிலும் இருக்கின்றது. இந்தநிலையில் தான் அங்கே புத்ததூபி எழுப்பப்பட்டது. அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் கடற்பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு கடல்வளத் துறையிடம் அனுமதி பெறப்படவேண்டும். அத்தகைய அனுமதி பெறாமலேயே அந்தத் தூபி எழுப்பப்பட்டது. அதனாலேயே அதன் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இது குறித்து அனைவரும் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
இதன்போது, சிங்களவர்களே இல்லாத இடத்தில் ஏன் புத்தவிகாரை அமைக்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றினைக் கேட்டார். இதற்கு இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது, விசாரித்துவிட்டுக் கூறுகிறேன் எனக் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
காலம்காலமாக தமிழ் மக்களின் பிரதேசமாக இருந்துவரும் கொக்கிளாய் கிராமத்தில் 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறி வருகின்றனர். இது தொடர்பாக அண்மையில் காணி அளவிடு செய்ய வந்தவர்களுக்கும் அங்கிருந்த தமிழ் மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டமை அனைவருக்கும் தெரிந்ததே.
இதன் அடுத்த கட்டமாக தற்போது தனியார் காணியொன்றை அபகரித்து அதில் புத்தவிகாரை வேகமாகக் கட்டப்படுகின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் வடமாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து வடக்கு முதலமைச்சரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அனைத்தையும் மீறி வேகமாக விகாரை கட்டப்பட்டுக்கொண்டிருப்பதால் மக்களும் சமூக ஆர்வலர்களும் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila