மக்கள் மனமுவந்து தரும் கொடைகளை தேவையுள்ள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான 'உதவிப்பாலம்' என்ற கொடை அலகை உருவாக்கி நடத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மணிமேகலை உணவுக்கூடத்தை, இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு கூறினார். |
அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, 'தமிழ் மக்களிடையில் கொடுக்கும் பழக்கம், கொடையளிக்கும் பழக்கமானவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன. வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்குள்ளவர்கள் உருப்படியாகச் செலவு செய்யும் படியாகக் கொடைகளை வழங்க வேண்டும். வெறும் ஆடம்பரச் செலவுகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது. எம்மைச் சுற்றி தேவைகள் தாண்டவமாடுகின்றன. வறுமை வாட்டுகின்றது. இருப்போர் இல்லாதோரின் இடர்களைக் களைய முன்வரவேண்டும். இதனால்த்தான் நாங்கள் 'உதவிப் பாலம்' என்ற ஒரு கொடை அலகை உருவாக்கியுள்ளோம். பெரிய கொடைகளை எதிர்பாராமல் எத்துணை சிறிய கொடையாக இருந்தாலும் மக்கள் மனமுவந்து தரும் உதவிகளை அல்லல்படும்; மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் கொடுத்த ஒரு சிறு தொகைப் பணத்தில் எவ்வாறு ஒரு வயது முதிர்ந்த அம்மையார், அதுவும் உற்றார் உறவினர்களைப் போரில் பறிகொடுத்த ஒருவர், தன் வாழ்க்கையை மறுசீரமைப்புச் செய்து கொண்டார் என்பதைக் கூற விரும்புகின்றேன். புதன்கிழமைகளில் மக்கள் என்னை நாடி வருகின்றார்கள். அன்று குறை கேட்கும் நாள். இந்த அம்மையார் ஒரு சிறு பணத் தொகையைக் கேட்டார். நீங்கள் எனக்குக் கொடை உதவி செய்யத் தேவையில்லை. கடனாகவே தாருங்கள் என்றார். பணத்தைப் பெற்று விட்டுப் பல்டி அடிக்கும் பலரை நான் பார்த்துள்ளேன். ஆனால் அந்த அம்மையாரின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. வாக்கில் தெளிவிருந்தது. கேட்டதைக் கொடுத்தேன். சுமார் 6 மாதங் கழித்து வந்து 'இந்தாருங்கள் உங்கள் பணம்' என்றார். என்ன நடந்தது என்று கேட்டேன். நீங்கள் தந்த பணத்திற்கு ஏலம், கறுவா, கராம்பு, வெந்தயம் போன்ற உணவிற் சேர்க்கும் மூலிகை உணவுகளை வாங்கினேன். அவற்றைச் சிறு சிறு பக்கெட்டுக்களாக ஆக்கினேன். பள்ளிக்கூடங்கள் காலை 10, 11 மணியளவில் சிறிய இடைவேளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொடுப்பார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கச் சென்று இந்தப் பொதிகளை விற்றேன். அதிகம் அல்ல. ஒவ்வொரு பொதியும் 10, 20 ரூபாய்தான். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பள்ளிக்கூடம். சில பள்ளிக் கூடங்கள் உள்ளே விடமாட்டார்கள். அதிபர்களைக் கண்டு போரில் பாதிக்கப்பட்ட என்னை நேர்மையுடன் வாழ வழிவிடுங்கள் என்று கேட்டேன். பலர் எனக்கு அனுமதி அளித்தார்கள். அந்தவாறு விற்றதில்த்தான் என் கடனை அடைக்க முடிந்துள்ளது என்றார். நான் திருப்பி வாங்கவில்லை. அவரின் ஊக்கத்திற்கான பரிசு என்று கூறி அனுப்பி விட்டேன். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுப்பதால் இடர்ப்பட்ட எங்கள் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்' என்றார். |
விக்னேஸ்வரனிடம் கடன் வாங்கிய பெண்ணின் நேர்மை!
Add Comments