மன்னாரில் மாதா சொரூபம் காரணமாக மதங்களுக்கிடையில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் மன்னார் ஆயர் இல்லம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரினை பேச்சுக்களில் ஈடுபடுத்தி சுமுகமான தீர்வு காண்பதென தீர்மானிக்கப்பட்டு இதற்கான முயற்சிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈழத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலய த்தின் பாலாவி தீர்த்தக்கரைக்கு அருகாமை யில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்தினால் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு தொடர்பில் சுமுக நிலைக்கு கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் சம்பவ இட த்திற்கு நேரில் சென்று பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பாலாவி தீர்த்த கரைக்கு அருகாமையில் சிலரால் அவசர அவசரமாக மாதா சொரூபம் அமைக்கப்பட்டுள்ளமையால் அங்குள்ள இந்து-கிறிஸ்தவ மக்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் சுமுகமான தீர்வொன்றினை காண்பதற்கு நேற்றைய தினம் மன்னாருக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்,
மாந்தை சந்தியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபம் மற்றும் திருக்கேதீஸ்வரம் ஆலயம் என்பவற்றை நேரில் சென்று அது தொடர்பில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதமகுரு, மன்னார் ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டனர். இதன்போது மக்கள் சந்திப்புக்களையும் நட த்தி அவர்களது கருத்தும் கேட்டறியப்பட்டது.
இதன்பின்னர் மன்னார் ஆயர் மற்றும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்தவர்களை பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவது எனவும். அதன்மூலம் குறித்த பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், தமிழ் மக்கள் பெறுவதற்கு இன்னும் எத்தனையோ இருக்கும் நிலையில்,
நாங்கள் மதங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டு இருப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. இந்தநிலை மேலும் தொடர்ந்தால் பேரினவாதிகளுக்கு இது சாதகமாக அமைந்துவிடும். எமக்குள்ளான மோதல்களை பேரினவாத சக்திகளே தூண்டிவிடும் நிலை காணப்படும் இன்றைய காலத்தில் இவ்வாறான மோதல்களை நாமே கையாண்டு தீர்த்து கொள்வது நல்லதாகும்.
தமிழ் மக்களுக்கிடையிலான மத ரீதியான மோதல் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை பெறுவதில் மேலும் சிக்கலை தோற்றுவிக்கும். நாம் அனைவரும் இந்து-கிறிஸ்தவர்கள் என பாராமல் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் விட்டுக்கொடுப்புக்களை செய்தும் புரிந்துணர்வு அடிப்படையிலும் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.