இருவர் விருந்து உண்டால் இணையுமா வடக்கும் கிழக்கும் ?

இருவர் விருந்து உண்டால் இணையுமா வடக்கும்  கிழக்கும் ?

வடக்கு கிழக்கு இணைவு என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமும் விருந்து உண்கிற படம் ஒன்று உலாவுகின்றது.
தீர்வு பற்றி பேசுவதற்கு முன் வடக்கும் கிழக்கும் இணையவேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று. ஒப்பீட்டளவில் வடக்கு தமிழ் மக்களைவிட கிழக்கு தமிழ்மக்கள் பல விடயங்களில் புறக்கணிக்கப்பட்டுவருகின்ற சம்பவங்களை அண்மைக்காலமாக காணக்கூடியதாய் இருக்கின்றது.
போராட்டத்தின் விழுதுகளாக தாங்கிப்பிடித்த கிழக்கு மண் போராட்டத்தின் பின்னரான மீள்பார்வைகளின்போது தனிமைப்படுத்தப்படுகின்றதோ என்ற ஐயப்பாட்டையே வடக்குக்கு கொடுத்துவரும் அதீத முக்கியத்துவங்கள் எடுத்தியம்புகின்றன. அந்த வகையில் வடக்கும் கிழக்கும் அதிகாரப் பரவலாக்க பேச்சுக்களின்முன் இணைக்கப்படவேண்டியது மிகத் தேவையான ஒன்றாகும்.
ஆனால் இந்த இணைப்புக்காக கூட்டமைப்பு செல்கின்ற பாதை எவ்வளவுதூரம் நம்பிக்கைக்குரியதென்றே சிந்திக்க வைக்கின்றது. வடகிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆனால் அந்த பங்களிப்பானது சோரம்போகாத நிலைகளிலிருந்து உள்வாங்கப்படவேண்டும் என்பதை கூட்டமைப்பு கடந்தகால பட்டறிவு ஞானங்களிலிருந்து மீட்டிப்பார்க்கின்றதா என்பதையும் நாம் சிந்திக்கவேண்டியவர்களாகிறோம்.
வரலாற்றில் நிலையான கொள்கைப் பிடிப்புக்கள் இல்லாமல் சுகபோக வாழ்வுக்காக அங்கும் இங்கும் தாவுவதையே முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் தலையாய கடமைகளாகச் செய்துவருகின்றன. இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன அதிகாரமிக்க அமைச்சுப் பதவிகளோ சிறு அமைச்சுப் பதவிகளோ தங்கள் சுய இருப்புக்கு கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே அந்த தலைமைகள் உள்ளன. இதற்காக யாரைக் கைகழுவி விடவும் யாரைக் கட்டி ஆலிங்கனம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.
தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமான அரசியற் புரிந்துணர்வு என்பதே நம்பிக்கைமிக்க சமூக ஊடாட்டத்திற்கு வழிவகுக்கவல்லது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் காலக்கோட்டின்படி பல சந்தர்ப்பங்களில் வந்தபோதும் முஸ்லிம் தலைமையின் சீரின்மையால் கை நழுவிப் போயின.
கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபா-ஹக்கீம் உடன்படிக்கையிலிருந்து கிழக்கு மாகாண ஆட்சியமைப்புத் தொட்டு முதலமைச்சர் தெரிவு ஈறாக எந்த இடத்திலுமே இதற்கான சமிக்ஞைகளில் முஸ்லிம் தலைமை இழகிப் போனதில்லை. இதற்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுத்தவைகளோ ஏராளம். ஆனாலும் வடக்கு கிழக்கு இணைவு பற்றிய தெளிவான விருப்பம் முஸ்லிம் தலைமையிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியைக்கூட ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்குவதற்கும் தமிழினம் தயாராக இருக்கின்றது என்ற அறிவிப்பும் கூட்டமைப்பிலிருந்து விடுக்கப்பட்டிருக்கிறது. சரி ஒரே மண்ணில் ஒரே மொழியைப் பேசுகின்ற ஒத்த சகோதரர்கள் என்ற பார்வையில் இதை விட்டுக்கொடுத்தாலும் இதற்கும் மேலாக எதையெதையெல்லாம் முஸ்லிம் தலைமை எதிர்பார்க்கிறது? ஒருமுறை அந்தப் பதவியைக் கொடுத்தாலும் தொடர்ந்தும் அதைக் கொடுக்கவேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார்களா? அப்படியாயின் தமிழ்மக்களுக்கு அது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதைச் சிந்திக்கிறார்களா?
அனைத்துக் கட்சிகளையும்விட அதிக ஆசனங்களை கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்த நிலையிலும் முதலமைச்சர் பதவி விட்டுக்கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நல்லிணக்க முனைப்பு அவர்களின் மனத்திலே எந்தளவுக்கு பதிந்திருக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் இப்பொழுது ஒன்றாக ஆட்சி செய்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கைகழுவிவிட்டுச் செல்வதற்கும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் வலுவான ஒரு உறவுப்பாலம் அமைக்கப்படவேண்டும். ஏற்கனவே கூறியதைப்போல் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்களின் ஆதரவுத்தளம் அடிப்படையானது. இந்த விடயத்தில் அவர்களைப் புறக்கணித்தும் செல்லமுடியாது. ஆனால் தேடிநிற்கும் ஆதரவு வலுவானதா? நம்பிக்கைக்குரியதா? போன்ற கேள்விகளுக்கு கூட்டமைப்பு பதில்களைக் கொண்டிருக்கவேண்டும்.
ஆசை காட்டி மோசம் செய்யும் முஸ்லிம் தலைமையை நம்புவதை விட முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய சாத்தியப்பாடுகளை தமிழ்த்தலைமை ஆராய வேண்டும். வடக்கு தேர்தலில் தோல்வியுற்ற முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் ஆசனம் வழங்கி நல்லிணக்க சமிக்கையைக் காட்டியதைப்போன்று பொதுவான ஒரு தமிழ்-முஸ்லிம் இணக்கப்பாட்டை படித்த, சோரம்போகாத மனிதர்களிலிருந்து கட்டமைக்கவேண்டும். அதை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றுபவர்களையே தேடிச் சென்று ஏமாறுவது தமிழ் மக்கள் வழங்கிய இறைமைக்கு கூட்டமைப்புத் தலைமைகள் செய்கின்ற மாபெரும் அநியாயமாகத்தான் இருக்கும். விட்டுக்கொடுப்புக்களுக்கும் ஓர் அளவுண்டு.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila