முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் : பிரேரணை நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு)
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நிலையை, சர்வதேச வைத்தியர்கள் பரிசோதிக்க வேண்டுமென வலியுறுத்தி வட மாகாண சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட மாகாண சபையின் 58ஆவது அமர்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நல்லிணக்க செயலணியிடம் பல முன்னாள் போராளிகள் தமக்கு இரசாயண ஊசி ஏற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பான உண்மைத்தன்மையினை அறிய வேண்டிய கட்டாயம் உள்ளதென இதன்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்தோடு, ஏற்கனவே உயிரிழந்த 107 முன்னாள் போராளிகளின் தகவல்கள் மற்றும் மரண விசாரணை அறிக்கைகளை பெற்று வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவேண்டியுள்ளதென மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டார். மேலும் விடுதலை செய்யப்பட்ட சுமார் 15000 முன்னாள் போராளிகளையும் அடிப்படை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென தெரிவித்த மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், இதற்கு பன்னாட்டு விசாரணை அல்லது வெளிநாட்டின் உதவி தேவைப்படுகின்றதெனவும், இதற்கு அரசாங்கம் சம்மதிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இதற்கு மாகாண ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்த நிலையில், பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னாள் போராளிகளின் திடீர் மரணம் : வட மாகாண சபையில் இன்று பிரேரணை புனவாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்ற நிலையில், இதுகுறித்த பிரேரணையொன்று இன்று வட மாகாண சபையில் முன்வைக்கப்படவுள்ளது. வட மாகாண சபையின் 58ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வில், வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் குறித்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில், நூற்றிற்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில், பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென வலியுறுத்தியே குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
Add Comments