முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அளவீடு செய்வதற்காக, நில அளவீட்டு உத்தியோகத்தர்கள் இன்று (புதன்கிழமை) காலை குறித்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது வட்டுவாகல் பாலத்தை மறித்து, வீதியின் குறுக்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காணி அளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்தோடு, முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து நில அளவீடு கைவிடப்பட்டு, நில அளவீட்டாளர்கள் திரும்பிச்சென்றுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட மாகாண சபை உறுப்பினர்கள், வலி வடக்கு மீள்குடியேற்ற தலைவர் கஜீபன் உள்ளிட்டோரும், பிரதேசத்தின் பல பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்காலில் இன்று பாரிய எதிர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை, கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (புதன்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த அளவீட்டு நடவடிக்கை இன்று காலை ஆரம்பமாகி, நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளதாக அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். அத்தோடு, காணி உரிமையாளர்கள் இருப்பார்களாயின் உரிய ஆவணங்களுடன் அளவீடு செய்யும் இடத்திற்கு வருமாறும் கோரியுள்ளார்.
இந்நிலையில், இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதோடு, இதற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.
அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மட்டுமன்றி தமிழ்த் தேசத்திலுள்ள அனைத்து பொது அமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களுடன் கரம்கோர்த்து நில ஆக்கிரமிப்புக்கு எதிரான குரலை வலுப்படுத்த முன்வர வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
நில ஆக்கிரமிப்பு பிரச்சினையானது வெறுமனே காணி உரிமையாளர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தினதும் இருப்பை கேள்விக்குறியாக்கும் விடயம் என்பனை புரிந்துகொண்டு அனைவரும் ஒன்று திரளவேண்டுமென குறிப்பிட்டுள்ளது.