நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் செயற்பாடுகள் தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உண்மையாக விரும்புமாக இருந்தால், தேசிய நல்லிணக்கத்திற்குத் தடையாக இருக்கும் பிரதானமான முட்டுக்கட்டைகளை முதலில் அகற்ற வேண்டும்.
தமிழ் மக்கள் நடத்திய யுத்தம் ஆட்சியாளர்களால் வெல்லப்பட்டதே தவிர தமிழ் மக்களின் மனங்கள் வெல்லப்படவில்லை என்பதை கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் கூறிவருகின்றார்கள்.
தமிழ் மக்களை தென் இலங்கை ஆட்சியாளர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தியதன் காரணமாகவே தமிழ் மக்கள் தமது விடுதலைக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராடினார்கள். தமிழர்கள் நடத்திய போராட்டத்தை அடக்குவதற்காக இலங்கை அரசுகள் மேற்கோண்ட நடவடிக்கைகளின் விளைவாக அரசுகள் மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்தார்கள்.
உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டத்தை தமது அரசியல் லாபங்களுக்காக தென்இலங்கைத் தலைமைகள் இனவாதமாக சிங்கள மக்களிடம் பரப்புரை செய்தார்கள். இனவாதமும், அடக்குமுறையும் தேசிய நல்லிணக்கத்தை உடைத்தெறிந்தது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் சிதைத்தது. இறைமை என்பது தமிழ் மக்களையும் ஒன்றிணைக்காத வெறுமையாகிப்போனது.
யுத்தத்திற்குப் பின்னர் இரண்டு வகையாக இந்த விடயங்களை பார்க்கலாம். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள சம காலத்தை நிலைமாறும் அரசியல் நீதிக்கான காலமாகவும், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான காலமாகவும் பார்க்கலாம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை தற்போதைய சூழலை நிலைமாறும் அரசியல் நீதிக்கான காலமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏன் என்றால் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும் யுத்தம் முன்னெடுக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டத்தை யுத்தத்தை வெற்றி கொண்ட தரப்பு என்றவகையிலும், அரசு என்றவகையிலும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
ஒற்றையாட்சி அரசியல் முறைமைக்குள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதே உண்மையாகும். ஒற்றையாட்சியை விட்டுக்கொடுக்கவே முடியாது என்று கூறும் இலங்கையின் ஆட்சியாளர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க முடியும்?
நியாயமான தீர்வொன்றை வழங்க விருப்பமற்ற அரசினால் தமிழ் மக்களை நிலைமாறும் அரசியல் நீதிக்குள் எவ்வாறு அழைத்துவர முடியும். அடிப்படையிலேயே நம்பிக்கையைக் கொடுக்க முடியாத அரசாங்கத்தை நம்பி எவ்வாறு தமிழ் மக்கள் நீதிக்கான பாதையில் பயணிக்க முடியும்.?
இத்தனை உயிர், உடமை இழப்பக்களையும் சந்தித்த தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், உரிமைகளுக்கான அடிப்படைகளையும் மறந்துவிட்டு, அரசாங்கம் எதிர்பார்க்கும் வெறுமைக்குள் வரமாட்டார்கள்.
இதைப் புரிந்து கொண்ட அரசாங்கம் தமிழ் மக்களை வேறொரு வடிவத்தில் நிலைமாறும் அரசியல் நீதிக்குள் இழுத்துவருவதற்கு முயற்சிக்கின்றது. அதுதான் தேசிய நல்லிணக்கத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கான கலந்துரையாடல் செயற்திட்டமாகும்.
அரசாங்கத்தை தமிழ் மக்கள் நம்பவேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தையும் மற்றொரு பக்கமாக முன்னெடுத்திருக்கின்றது. அன்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போது, தமிழ் மக்கள் அரசாங்கத்தை நம்பவேண்டும் என்றும் தமக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றது என்றும் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் கூறியிருந்தார்.
அதனுடை தொடர்ச்சியாகவே இப்போது நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் கலந்துரையாடல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த செயலணியினர் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு குழுவை தமக்குள் அமைத்துக்கொண்டு மக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகளான அரசியல் தீர்வு, காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் மீளக்கையளிப்பு, இராணுவ நீக்கம், இவற்றுக்கு நிலையான தீர்வை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கும்போதே அரசு எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கம் சாத்தியமாகும்.
தமிழ் மக்களுக்கு முன்னால் எந்தவொரு செயலணியையும், ஆணைக்குழுவையும் கொண்டு வந்து நிறுத்தினாலும் அவர்கள் மேற்கூறிய ஐந்துவிடயங்களையுமே மீண்டும் மீண்டும் முன்வைப்பார்கள். அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் என்று கூறுகின்றதே தவிர,தேசிய நல்லிணக்கத்தை நோக்கி தமிழ் மக்களை அணிதிரளச் செய்யும் எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் இதுவரை செய்து முடிக்கவில்லை.
தமிழ் மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் உளப்பூர்வமாக விரும்புமாக இருந்தால், முதற்கட்டமாக காணி மீளக் கையளிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை,என்பவற்றை செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்டமாக இராணுவ நீக்கம், காணாமல் போனோர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு, பரிகாரம், நஷ்டஈடு வழங்கள் என்பவற்றைச் செய்யலாம்.
இறுதியாக ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி என்ற வார்த்தைப் பிரயோகங்களை மாற்றியமைக்கும் நியாயமான தீர்வொன்றுக்கான வரைபுகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட வேண்டும்.
இறுதியாக ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி என்ற வார்த்தைப் பிரயோகங்களை மாற்றியமைக்கும் நியாயமான தீர்வொன்றுக்கான வரைபுகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யாமல் செயலணிகளை அமைத்து தமிழ் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போவதாக அரசாங்கம் நம்புவதெல்லாம் அல்லது சொல்லவதெல்லாம் ஆரோக்கியமான விளைச்சலைத் தரப்போவதில்லை.
தமிழ் மக்கள் ஏன் போராடினார்கள் என்பதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும், அதிலிருக்கக்கூடிய நியாயங்களும் என்ன? என்பதையும் தென் இலங்கை அரசுகள் இதுவரை புரிந்து கொள்ளவில்லையா? தமிழ், சிங்கள மக்களின் பூர்வீகத்திற்கும், இலங்கையின் வரலாற்றுக்கும் இருக்கக்கூடிய தொடர்புகள் எவை என்பதையும், இரு தரப்புக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் எவை? என்பதையும் ஆட்சியாளர்கள் தெரிந்திருக்கவில்லையா?
எல்லாம் தெரியும் என்றால் ஏன் இந்த வீணான அமர்வுகளும் செலவுகளும்….?
-ஈழத்துக் கதிரவன்.