வடக்கில் வாழும் மக்களது கழுத்து இராணுவத்தினரால் இறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க கஷ்ரப்படுகின்றனர். எனவே இறுக்கப்பட்ட விலங்குகள் உடைக்கப்பட்டு, இராணுவத்தின் அடக்குமுறை நீக்கப்பட்டு நாங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவேண்டுமென நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் ஆறாவது அமர்வு நேற்றைய தினம் சாவகச்சேரியில் நடைபெற்றது. இதன்போது அங்கு கருத்துத் தெரிவித்த மக்களே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவித்திருப்பதாவது,
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கம் அதனை உண்மையிலேயே நடமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. மாறாக மக்களை ஏமாற்றுவதற்காகவே ஆணைக்குழுக்களையும் செயலணிகளையும் அமைத்து வைத்து காலம் கடத்துகின்ற செயற்பாட்டையே மேற்கொள்கின்றது.
நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் முதலில் தமிழ் மக்களை நம்ப வேண்டும். அவ்வாறு நம்பாது வடக்கில் மக்கள் சுயமாக இயங்க முடியாதவாறு இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளார்கள். அடிப்படைத் தேவைகளைக்கூட நிவர்த்தி செய்வதற்கு செல்வதாயின் இராணுவத்தினரைக் கடந்தே செல்லவேண்டிய நிலமையே காணப்படுகின்றது.
நாம் இங்கு வந்து கதைப்பதை கூட இராணுவ புலனாய்வாளர்கள் அறிந்துகொண்டு எமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடும். எங்களது கழுத்தை அரசாங்கம் இராணுவம் என்ற போர்வையில் விலங்கிட்டு இறுக்கி வைத்துள்ளது. எனவே இத்தகைய நிலை மாற்றமடைந்து அரசாங்கம் தமிழ் மக்களை நம்ப வேண்டும். அவ்வாறான நிலைியிலேயே நல்லிணக்கததை ஏற்படுத்த முடியும்.
ஆனால் தற்போது அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளை பார்க்கின்ற போது அரசாங்கம் மனதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக காணவில்லை. அவர்கள் தமது ஆட்சி, அதிகார போட்டியிலே ஈடுபடுகின்றார்கள். அதனிடையில் சர்வதேசத்திற்காகவே இடையிடையே இவ்வாறான செயலணிகளையும் ஆணைக்குழுக்களையும் அமைத்து மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்றார்கள்.
எனவே உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட வேண்டும். அதைவிடுத்து நாங்கள் செய்யவில்லை என கூறிக்கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. போர் வெற்றியை நீங்கள் கொண்டாடிக்கொண்டு எங்களை இறந்தவர்களுக்காக நினைவுகூருவதை தடுக்க முடியாது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற சரியான கணக்கெடுப்பு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஆயுதங்களை விற்றவர்களும் போராட்டங்களை தலைமை தாங்கி நடாத்தியவர்களையும் உங்களோடு வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு சாதாரண உதவி செய்தவர்களை மாத்திரம் சிறையில் அடைத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் அனைவரும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதேபோன்று இங்கு இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே அவசியமானதாகும். எனேனில் தனது நாட்டு மக்களையே கொத்துக்குண்டுகளையும், நச்சுக்குண்டுகளையும், இரசாயண குண்டுகளையும் போட்டு அழித்தவர்கள் எமக்கு சரியான நீதியை வழங்குவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இலங்கையின் நீதித்துறையானது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் எமக்கு நம்பிக்கையில்லை.
மேலும் நல்லிணக்கத்தை அடிவாங்கியவர்களிடமிருந்து ஏற்படுத்த முடியாது. அது அடித்தவர்களிடமிருந்து தான் ஏற்படுத்தப்பட முடியும். இறுகிய மனத்தோடு செயற்படுகின்ற அரசாங்கம் தன்னிலையில் இருந்து மாற்றமடைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நல்லதொரு சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டு தொடர்ச்சியாக மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைப்பது ஒர் நாளில் அது பூகம்பமாக வெடிப்பற்கு காரணமாய் அமைந்துவிடும் என தெரிவித்திருந்தனர்.