மீள்குடியேற்ற செயலணியில் சி.வி : கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர்

வட மாகாண சபையின் செயற்பாடுகளில் தலையிடவோ அல்லது அதனூடன் முரண்படவோ மத்திய அரசு தயாரில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். எனவே, மீள்குடியேற்ற செயலணி குறித்து வடக்கு மாகாண சபை யோசனைகளை முன்வைத்தால் அது கருத்திற்கொள்ளப்படும் என்றும், வடக்கு முதல்வருடன் கலந்துரையாடியே மேற்படி செயலணி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல் ஆகியன முடிவடைந்தப் பின்னர், பிரதமரிடமிருந்து நேரடிப் பதிலை பெற்றுக்கொள்வதற்கான கேள்வி நேரம் ஆரம்பமானது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், மீள்குடியேற்ற செயலணிக்குள் அங்கம் வகிக்கின்ற அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அண்மைக்காலமாக வடக்கு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதால், வடக்கு முதல்வர் உள்வாங்கப்பட வேண்டும். அவர் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என தொடுத்த வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், மத்திய அரசானது தனது பொறுப்புகளை பகிர்ந்தளிக்கும் வகையிலேயே இந்த செலயணியை அமைத்துள்ளது. அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாட் பதியுதீன், பைசல் முஸ்தபா ஆகியோர் மீள்குடியேற்ற செயலணியில் அங்கம் வகிக்கின்றனர். அத்துடன், மூன்று அமைச்சுகளின் செயலாளர்களும் இடம்பெற்றுள்ளனர். வடக்கு மாகாண பிரதம செயலாளரும் உள்வாங்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பணிப்பாளர் ஒருவரை நியமிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். மீள்குடியேற்றம் பற்றி வடக்கு மாகாண சபை ஆக்கபூர்வமாக செயற்பட்டுவருகிறது. எனவே, அதன் செயற்பாடுகளில் தலையிட நாம் விரும்பவில்லை. முதல்வர் தலைமையிலான சபையுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறோம். அந்தவகையில், முதல்வருடன் கலந்துரையாடியே மேற்படி செயலணி முடிவுகளை எடுக்கும். இதற்கான பணிப்புரை விடுக்கப்படும். மீள்குடியேற்ற பணிகள் பற்றி பொதுநிர்வாக அமைச்சு சுற்றரிக்கையொன்றை விடுத்துள்ளது. இதற்குரிய நிதியுடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த செயலணி தமது பணிகளை உரிய வகையில் முன்னெடுத்துவருகிறது. எனவே, வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்கள் அதனுடன் இணைந்து செயற்படமுடியும். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் வாழ்கின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திருப்புவதற்கு எதிர்பார்க்கின்றனர். இதற்குரிய வழிவகைகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். அமைச்சரவை உபகுழுதான் செலயணி அமைத்துள்ளது. அதில் செயலாளர் உள்வாங்கப்பட்டுள்ளார். எனவே, முதல்வர் இடம்பெறுவது பொறுத்தமாக அமையாது’ என்றார். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுவாமிநாதன், இது விடயத்தில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படவில்லை. மூன்று அமைச்சுகள் உள்ளடங்கும் வகையில் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வரோ அல்லது எம்.பிக்களோ செயலணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க முடியும்-என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila