முன்னாள் போராளி மரணம்! தகவல் திரட்டும் முதல்வர்
முன்னாள் போராளிகளுக்கு இரசாயன மருந்து ஏற்றப்பட்டுள்ள பிரச்சினை குறித்து முன்னாள் போராளிகளின் தகவல்கள் வடமாகாண சுகாதார அமைச்சினால் சேகரிக்கப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மேலும், இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இரசாயன மருந்து ஏற்றப்பட்டதன் காரணமாகவே முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டு சடுதியாக உயிரிழக்கின்றனர். போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்னாள் போராளிகளினால் முன்வைக்கப்பட்டன.
குறித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்க தரப்பு நிராரித்த போதிலும் நேற்று முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராசாயண மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் முன்னாள் போராளிகள் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இது குறித்து தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைகின்றன? என முதலமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முற்றிலும் தெரியாமல் தகவல்களை கூறுவது தவறானது. முன்னாள் போராளிகளின் விடயத்தினை அரசாங்கம் நிராகரித்து வருகின்றது.
அந்த வகையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. முன்னாள் போராளிகள் எப்போது இணைந்துகொண்டார்கள். எவ்வளவு காலம் புனர்வாழ்வுக்கு உற்படுத்தப்பட்டார்கள் என்ன நடந்தது என்பது குறித்து வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக உடனடியாக எந்த கருத்துக்களையும் கூற முடியாமல் இருக்கின்றது.
அவ்வாறு நடந்திருந்தால் அது மிகப்பாரதூரமான விடயம். இந்த விடயத்தினை சர்வதேச மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய ஒரு கடற்பாடு எமக்கு இருக்கின்றது.
குறித்த பிரச்சினைக்குரிய அடிப்படைகளை ஆராய வேண்டிய சூழ்நிலையும் தற்போது எழுந்துள்ளதனால் தீர்க்கமான கருத்துக்களை தர முடியாமல் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comments