இதன் காரணமாக தமிழ் இளைஞர்களுக்கான பெருமளவு தொழில்வாய்ப்பினை வழங்கும் அபிவிருத்தி திட்டம் கைநழுவிச் செல்லும் நிலையேற்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இதனை தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிலூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் 22வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது.
இதன் காரணமாக எமது இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பற்று இருக்கின்றார்கள். முன்னாள் போராளிகள் ஆயுதம் ஏந்தி போராடியதன் காரணமாக, கல்விச் சான்றிதழ்கள் எதுவும் இல்லாத நிலையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
முன்னாள் பெண் போராளிகள் தொழில் வாய்ப்புகளின்றி இருப்பதுடன் திருமண வாழ்க்கையும் இல்லாமல் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், எமது மாகாணத்திற்கும் பூரணமான அதிகாரப் பரவலாக்கலுடன் ஒரு சுயாட்சி இருக்குமானால் எமது இளைஞர் யுவதிகளுக்கு உரிய வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும்.
புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் தமிழ் பிரதேசங்களில் சில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாத காரணமாக குழப்பநிலை உருவாகியது.
எனினும், இன்று இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அங்கு அமைப்பதற்கு சந்தர்ப்பம் தோன்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், வாகரைப் பிரதேசத்தில் 4000 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால், நண்டு, மீன் வளர்ப்பு திட்டம் ஒன்று வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், உள்ளுர் அரசியல்வாதிகள் மக்களை சரியான முறையில் வழிநடத்த தவறியதன் காரணத்தினால் அத்திட்டம் வேறு மாகாணத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமையான ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை.
இதன் காரணமாக இத்திட்டம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் காணப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு அற்றுப்போய்விடுமோ என்ற ஒரு அச்சம் உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.