யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்து தலை மறைவாகியிருந்த ஆவா குழுவை சேர்ந்த மேலும் இரண்டு உறுப்பினர்களை கைக்குண்டுகளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரையும் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து யாழ். பொலிஸ் பிரிவின் சிறப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக அறியமுடிகின்றது.
சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சமூகவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கொட்டாஞ்சேனை பகுதியில் மேலும் மூவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் பிரதான உறுப்பினர்கள் அண்மைக் காலத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி நாடு முழுவதிலும் பரவியுள்ளனர் என நேற்று முன்தினம் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஆவா குழு உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே குறித்த சமூக விரோத கும்பல்களை பொலிஸார் கைது செய்து வருகின்றனர். மேலும் குறித்த சமூக விரோத கும்பல்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பணம் அனுப்பப்படுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தமது விசாரணைகளை முன்ன டுத்து வருகின்றனர்.


