நாவற்குழி சமுத்தி சுமண விகாரையில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் குறித்த விகாரையில் இடம்பெற்றது.
குறித்த விகாரைக் கோபுரத்துக்கான அடிக்கல்லினை 523 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் திஸாநாயக்க நாட்டி வைத்தார்.
நாவற்குழி மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்றத்துக்கு அருகில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையில் “களன மிதுரு” கோபுரம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த வகையில் குறித்த கோபு ரம் அமைப்பதற்கான ஒரு தொகுதி நிதியை களன மிதுரு பௌத்த அபிவிருத்தி நிலையம் வழங்கவுள்ளதுடன் மேலதிக நிதியை பல தரப்பினரிடமும் நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் இடம் பெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் விகாராதிபதிகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் கலந்து கொண்டனர்.
நாவற்குழி மேற்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுதிட்டத்தில் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அண்மையில் வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள விகாரையிலேயே மேற்படி பிரமாண்டமான கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேற்படி விகாரை அமைந்துள்ள பகுதியானது யாழ் நகர் ஆரம்பிக்கும் பகுதியாகவும் நாவற்குழி, ரயில் நிலையத்துக்கு அருகிலும், கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதி மற்றும் மன்னார்-யாழ்ப்பாணம் ஏ32 வீதியும் சந்திக்கும் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அப் பகுதியில் இருந்தே அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அங்கு பிரமாண்டமான விகாரை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.