தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக சட்டரீதியாக மணல் அகழ்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுகிறது என குற்றஞ்சாட்டியும்,மணல் அகழ்வதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு கோரியும் யாழ்.மேல் நீதிமன்றில் நேற் றைய தினம் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள குடத்தனை, நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களில் மணல் அகழ்வதற்கு தனியார் கட்டட நிறுவன உரிமையாளர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த விண்ணப்பத்தை மருதங்கேணி பிரதேச செயலர் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் அந்த நிராகரிப்பு கடிதம் சட்டத்துக்கு முரணானது எனவும் சட்ட வரையறையை மீறி தனது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டு அந்த நிராகரிப்பு கட்டளையை புறந்தள்ள வேண்டும் என்ற உறுதிகேள் எழுத்தாணை மனுவும், அந்த கடிதத்தினை ரத்து செய்துதான் கோரிய படி மணல் அகழ்வதற்கான அனுமதியை பிரதேச செயலர் வழங்க வேண்டும் என்ற ஏவு எழுத்தாணை மனுவையும் மருதங்கேணி பிரதேச செயலருக்கு எதிராக நிறுவன உரிமையாளரான மனுதாரர் மன்றில் தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி செலஸ்ரின் மன்றில் தெரிவிக்கையில்,
மேற்குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலருடைய நிராகரிப்பு சட்ட முரணானது அதில் அரசியல் தலையீடு உள்ளது. அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பெரும் தொல்லையாக உள்ளது.
அவர்களின் தலையீட்டினால்தான் பிர தேச செயலர் மணலை அகழ வேண்டாம் என கூறியுள்ளார்.
குறித்த பிரதேச செயலர் அரசியல் தலையீடு காரணமாக தனது கடமையை செய்யத் தவறியுள்ளார்.
இந்த நிலையில் சட்டரீதியாக மணல் அகழ்வதற்கான அனுமதியை மறுப்பதால் சட்டவிரேதமான முறையில் மணல் அகழப்படுகிறது. இதனால் சமூக பொருளா தாரத்தில் பல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அனுமதி வழங்கப்பட வேண்டிய நேரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த அரசியல்வாதி தலையிட்டபடியால்தான் அனுமதி வழங்காது மறுக்க நேரிட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் தற்போது வீடு கட்டுமான பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள் ளது. இதனால் 50 ஆயிரம் ரூபாய் வரையில் மணல் விற்கப்படுகிறது. மாவட்ட செயலகத்தால் 22 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மணல் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் கள்ள சந்தை வியாபாரம் மட்டுமே நடக்கிறது. இதனால் பலர் மறைமுகமாக ஆதாயம் அடைந்து வருகின்றனர்.
மணல் அனுமதி வழங்கும் அதிகாரம் படைத்த பிரதேச செயலாளர்களை வடக்கு அரசியல்வாதிகள் ஆட்டிப் படைத்து வருகிறார்கள். கள்ள மணல் விற்பனையில் பலர் திடீர் கோடீஸ்வரர்களாகி விட்டனர். செயற்கையாக மணல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொருத்து வீடுகளை மக்களுக்கு திணிக்கும் மறைமுக மான செயல்பாடுகளை அரசியல்வாதிகள் முன்னெடுத்து வருவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரருடைய மனு விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு எதிர் மனு தாரராகிய மருதங்கேணி வட மராட்சி கிழக்கு பிரதேச செயலர் கே.கனகேஸ்வரனை யூன் மாதம் 12 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.