ஒற்றையாட்சியைத் தக்கவைக்க வார்த்தைகளால் ஏமாற்றும் அருவருப்பு அறிக்கை! - முதல்வர் விக்கி விசனம்


ஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில்,  தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு இடைக்கால அறிக்கையில் வார்த்தைப் பிரயோகங்களினால் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அருவருப்பை ஏற்படுத்துகின்றது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.
ஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில், தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு இடைக்கால அறிக்கையில் வார்த்தைப் பிரயோகங்களினால் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அருவருப்பை ஏற்படுத்துகின்றது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.
           
இடைக்கா அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள கேள்வி -பதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
1. உத்தேச அரசியலமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தமிழர் தரப்பிலிருந்து பரவலான அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன?
பதில் – முழுமையாக குறித்த ஆவணத்தைப் பரிசீலிக்க எனக்கு நேரம் போதவில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் தறுவாயில் எனது மேலெழுந்த கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன். எனது அவதானம் பின்வருமாறு -ஒருவர் நோயுற்றிருந்தால் அவரின் அந்த நோய் என்ன என்று முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதன்பின் அந்த நோய்க்கு எவ்வாறான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆராயவேண்டும். அந்த ஆராய்வின் முடிவில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு நோயைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
நாம் இப்போது எமது நோயைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே எனது கருத்து. நோயைப் புரிந்து கொள்ளாது ஒவ்வொருவரும் பனடொல் கொடுப்போம், கசாயம் கொடுப்போம், பனடீன் கொடுப்போம், எண்ணை தேய்ப்போம் என்று கொண்டிருக்கின்றோம். நோயைப் புரிந்து கொள்ளாது மருந்துகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டுள்ளோம். நோயைப் புரிந்து கொள்ள நோயின் சரித்திரம் மிக அவசியம். எவ்வாறான பின்புலம் இன்றைய நோயை ஏற்படுத்தியது என்று அறிந்தால்த் தான் உரிய சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். நோயைப் புரிந்து கொள்ளாது சிகிச்சையில் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதே எனது அவதானம்.
இடைக்கால அறிக்கை நோயை அறிந்ததாகவோ, தீர்க்கப் போதுமானதாகவோ தென்படவில்லை. நோயை அறியாத சிகிச்சை தோல்வியில் முடியும்.
இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை உறுதிப்படுத்துவதாகவே குறித்த அறிக்கை உள்ளது. எதனைப் புறக்கணித்து நாம் எழுபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்தோமோ அதனை வலியுறுத்துவதாகவே அறிக்கை அமைந்துள்ளது. அதனால்த் தான் நான் கூறினேன் நோயை அறியாமல் மருந்து பற்றி சம்பாஷணைகள் நடந்துள்ளன என்று.
நோய் என்று நான் குறிப்பிடுவது எமக்கு இனப் பிரச்சனை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்ததையே. சிங்களத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் எடுத்துக் கொண்டு தாம் செய்ததே சரியென்ற அடிப்படையில் இதுவரை காலமும் நடந்து கொண்டதே எமது அரசியல் நோய்க்கு மூல காரணம்.
குறித்த தலைவர்களின் இதுவரையிலான செயற்பாடும் நோக்கும் கண்டிக்கப்பட்டு அதற்கான மாற்றத்தினை நாம் முன் வைக்க முன்வர வேண்டும். அப்போது தான் நோய்க்கு நாம் பரிகாரம் தேடலாம். ஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்குரிய அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில் தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு வார்த்தைப் பிரயோகங்களில் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அருவருப்பை ஏற்படுத்துகின்றது.
ஒரு நாட்டினுடைய ஆட்சிக் கட்டமைப்பினை குறிக்கப் பயன்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு பொருத்தமான வார்த்தையினைப் பயன்படுத்தாது “ஏகிய ரட” என்கின்ற சிங்கள சொற்பதத்தினை பயன்படுத்தியிருக்கின்றார்கள். “எக்சத்” என்ற பதத்தைப் பாவிக்காது “ஏகிய ரட” என்று கூறியமை அறிக்கை ஆக்கியோரின் கபடத் தனத்தை வெளிக்காட்டுகின்றன. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் கோரிக்கை இவ் இடைக்கால அறிக்கையில் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே கருத முடியும்.
2. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தவாறு வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும் ஐக்கிய இலங்கை ஃ மாகாணங்களின் ஒன்றிணைப்பு பற்றியும் பின்னிணைப்பில் வலியுறுத்தியுள்ளதே அது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்- அறிக்கையின் ஆங்கிலப் பிரதியினைப் பார்த்தீர்களானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏறத்தாழ 70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் அடக்கியிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதே தவிர திடமாகத் தமக்கு வேண்டியவற்றைக் கூறத் தவறியுள்ளது. வடமாகாணசபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமான விபரங்களுடன் தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன.
மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றதே தவிர என்னென்ன அதிகாரங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பன பரிந்துரை செய்யப்படவில்லை. ஒட்டு மொத்தத்தில் இவ் இடைக்கால அறிக்கையானது தமிழரின் இனப் பிரச்சனை தொடர்பான பயணத்தினை பின்னோக்கி நகர்த்தியுள்ளதாகவே கருதலாம்.
3. இவ் இடைக்கால அறிக்கைக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா?
நோய்க்கு மருந்து கொடுக்காவிட்டால் நோய் தீராது. தொடரப் போகும் நோய்க்கு ஆதரவு வழங்கச் சொல்கிறீர்களா? அரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே இந்த இடைக்கால அறிக்கை எமக்கு நல்கியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila