அங்கு வந்தடைந்த 24 பேரடங்கிய யாத்திரிகர் குழுவினரை முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் மிக பயபக்தியுடன் வரவேற்றதுடன் அவர்களுக்கு வேண்டிய உணவு இருப்பிட வசதிகள் உட்பட சகல தேவைகளையும் செய்து கொடுத்தனர்.
வந்திருந்த அனைத்து யாத்திரிகர்களும் தங்கள் கைகளில் வேல், சேவல் கொடி மற்றும் பனர் என்பனவற்றைக் கையில் தாங்கிய வண்ணம் வருகை தந்த காட்சி அங்கிருந்த ஆலய நிர்வாகத்தினரையும், பக்தர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அங்கு 22ம் 23ம் திகதி வரை தங்கியிருந்த குழுவினருக்கு தேவஸ்தான நிர்வாக சபையினர், விசேட கௌரவமளித்து 24ம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 05-15 மணியளவில் வழியனுப்பி வைத்தனர்.
கடந்த வருடம் 07 பேருடன் முருகையா தேவஸ்தானத்திற்கு வருகை தந்த பாத யாத்திரைக் குழுவினர் இம்முறை 24 பேருடன் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்ட யாத்திரைக் குழுவினர் அன்று முழுவதும் மாமுனை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் தங்கியிருந்து மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை மருதங்கேணி பகுதியிலுள்ள திரியாய் அம்மன் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளச் செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் மாமுனை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தினர் செய்து கொடுத்தனர்.
அங்கிருந்து சனிக்கிழமை வற்றாப்பளை நோக்கி புறப்படவுள்ள யாத்திரைக் குழுவினர் அங்கு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்வதுடன் அங்கிருந்து வேல்சாமி குழுவினருடன் சேர்ந்து பாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.


