யாழ். வடமராட்சியில் பதற்றம்! பொலிஸ் அதிகாரிகளிற்கு நேர்ந்த கதி

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மீனவர்கள் மாவட்ட கடற்தொழில் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த பகுதிக்கு பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகள் வந்துள்ளனர்.
அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நீதிமன்றிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டாம் எனக் கூறியும், மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி குறித்த இடத்திற்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டு பொலிஸ் அதிகாரிகளை அப்பகுதி மீனவர்களும், மக்களும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் வெளிமாவட்ட மீனவர்கள் பெருமளவிலானவர்கள் தங்கியிருந்து அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை நிறுத்தக்கோரி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அரசியல் வாதிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். எனினும் எந்த நடவடிக்கையும் இதுவரை உரிய முறையில் எடுக்கப்படவில்லை.
இதனால் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை தாம் கடற்தொழிலில் ஈடுபடப் போவதில்லை என்ற தீர்மானத்தை வடமராட்சி மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே வடமராட்சியில் வெளி மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடியில் ஈடுபடும் போது அப்பகுதி மீனவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி வருகை
குறித்த இடத்திற்கு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி வருகைத்தந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எனினும் இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அதிகாரி மீனவர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இது தம்முடைய அனுமதியுடன் இடம்பெறவில்லை என்றும், மத்திய கடற் தொழில் அமைச்சின் அதிகாரத்தின் கீழ் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மத்திய கடற் தொழில் அமைச்சின் அதிகாரி இவ்விடத்திற்கு வருகைத்தர வேண்டும் என குறிப்பிட்ட மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதமான தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில்தமக்கு சாதகமான முடிவை இதற்கான அமைச்சர் உள்ளிட்ட அரசியல் தரப்பினர்கள்தெரியப்படுத்த வேண்டுமென்றும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அதுவரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை விடுவிக்கமுடியாதென்றும் கூறுகின்றனர்.









Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila