இவ்வாறாக தமிழர் இராச்சியம் கோலோச்சிய காலப்பகுதி இன்று மறைக்கப்பட்டு மிக அண்மித்த காலப் பகுதியில் நின்று கொண்டு இலங்கையின் சரிதத்தைப் புரட்டி எழுதுகின்ற வஞ்சகத்தனம் நடந்தாகின்றன.
கால ஓட்டத்தில் - மிக நீண்ட காலத்தின் அசைவில் பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாதவையாயினும் ஆட்சி உரித்துக்களும் நில உரித்துக்களும் மாற்றப்படுவது அல்லது மறைக்கப்படுவதென்பது அடிப்படையை நிர்மூலமாக்குகின்ற செயலாகும்.
இத்தகைய செயலைச் செய்து கொண்டு இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்களும் கொண்டாட வேண்டும் என்று ஆளும் வர்க்கமும் பெரும்பான்மை இனமும் நினைப்பது எந்த வகையிலும் நியாயமானதன்று.
இலங்கை நாடு சுதந்திரமடைந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டதென்று கூறிக்கொள்ளும் அதே நேரம் சிறுபான்மைத் தமிழ் மக்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் வதைத்த கொடுமையை இந்த உலகப் பிரபஞ்சம் இருக்கும் வரை மறக்க முடியாது.
நாட்டின் சுதந்திர தினத்தை 71 ஆண்டுகளாகக் கொண்டாடுவதும் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெறுவதும் இருபத்தொரு வேட்டுக்களை பீரங்கிகள் தீர்ப்பதும் சுதந்திர தினத்தின் அடையாளமாகிவிடாது.மாறாக சுதந்திரம் என்றால், மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும். இன, மத, மொழி பேதங்கள்களைந்து மானிடம் உயர்ந்து நிற்க வேண்டும்.
நாட்டின் ஆட்சியிலும் முப்படையிலும் நிர்வாகத்திலும் அனைத்து இன மக்களும் பங்கேற்பதாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான சுதந்திரமாகும்.மாறாக முப்படை முழுவதும் சிங்களம்; அணி வகுப்பு மரியாதையை கடந்த 71 ஆண்டு களாக ஏற்பதும் சிங்களம்; சுதந்திர தினம் எமக்கே சொந்தம் என்று கொண்டாடுவதும் சிங்களம் என்றால் சுதந்திரம் என்பது சிங்கள மக்களுக்கானதா அல்லது இலங்கைத் திரு நாட்டுக்கானதா? என்ற கேள்வி எழும்.
ஆக, இத்தனை ஆண்டுகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம் என்று சிங்கள மக்கள் நினைக்க,
அதன் மறுமுனையில் பெளத்த சிங்களப் பேரினவாதம் எங்கள் மீது இன வஞ்சகத்தைச் செய்யத் தொடங்கி 71 ஆண்டுகள் ஆகிவிட் டன என்று தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.
இந்த நினைப்பை முடிவுறுத்தி இலங்கைத் திருநாடு அனைத்து இன மக்களுக்கும் உரி யது என்ற நிலைமை எப்போது ஏற்படுத்தப்படு கின்றதோ அன்றுதான் இலங்கைக்கு உண்மை யான சுதந்திரம் கிடைக்கும்.


