ஒரு துறவியின் துணிச்சல்


துறவிக்கு வேந்தன் துரும்பு என்பது தமிழ்ப் பழமொழி.இந்தப் உலகப் பிரபஞ்சத்தில் எல்லாவற்றை யும் துறந்த துறவிக்கு வேந்தன் துரும்பாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.துறவிக்கு மட்டுமல்ல, புலமையும் திறமை யும் நேர்மையும் இறை நம்பிக்கையும் கொண்ட எவரும் மற்றவர்கள் முன் மண்டியிட்டு வாழ மாட்டார்கள் என்பது சத்தியமானது.

மன்னவனும் நீயோ!  வள நாடும் உன்னதோ! என்று சோழச் சக்கரவர்த்தியைப் பார்த்து துணிந்து கேட்டவன் கம்பன்.

இல்லறத்தானாக இருந்தபோதிலும் தன் புலமைக்கு முன்னால் வேந்தனின் செருக்கும் நின்று பிடிக்க முடியாது என்பதைத் துணிந்து காட்டிய கம்பன், அடியயாற்றி வாழ்கின்ற வாழ்வைத் தூக்கி எறிந்தவன்.
ஆக, தமிழர் வாழ்வு என்பது மனுநீதியுடன் தொடர்புபட்டது.

எங்கெல்லாம் அநீதி நடந்தாலும் அது கண்டு பொறுக்கமுடியாத பாரதி தனி மனிதப் பசிக்காக இந்த ஜெகத்தை அழித்திடுவேன் எனும்போது,தமிழர் வாழ்வின் அடித்தளம்; நீதி, நேர்மை, பிழையைப் பிழையயன்று கூறுகின்ற துணிச்சல் என்ற உயர் பண்புகளைக் கொண்டது என்பது உறுதியாகிறது.

இந்த இயல்பு எங்கே அழிந்தொழிந்து விட் டதோ என்று ஏங்கி நின்ற வேளை, கடந்த 03ஆம் திகதி சாவகச்சேரியில் நடந்த மக்கள் மனம் அறியும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை முன்வைத்த அருட் தந்தை றெக்ஸ் செளந்தரா அடிகளாரின் உரை கண்டு வியந்தோம்.
அழைத்தவர்கள் யாராக இருந்தாலும் உண் மையைக் கூறுவதே தன் துறவுக்கும் தான் பின்பற்றுகின்ற இயேசுபிரானின் போதனைக்கும் உகந்தது என்ற நேர்மைத்திறத்துடன் அருட்தந்தை அவர்கள் தன் மனத்திடையும் மக்கள் மனத்திடையும் நிலைபெற்றிருந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அருட்தந்தையின் உரையில்; தமிழ் மக்களுக்கு நேர்மையான நீதியான அரசியல் தலைமை வாய்க்கவில்லை என்ற கருத்து ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர் ஆற்றிய உரையை வகுத்தும் தொகுத் தும் பார்க்கின்றபோது, தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து அதன் பிரகாரம் தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னாளில் தாங்கள் வகுத்த கொள்கையில் இருந்து விலகியது எதற்காக? என்ற கேள்வியை துணிச்சலோடு முன்வைத்தார்.

அந்த முன்வைப்புபக்கச்சார்பற்றது. ஒட்டு மொத்தத் தமிழினம் சார்பானது. கூட்டமைப்பு விட்ட தவறை அவர்களுக்கு உணர்த்துவதானது.ஆம், தமிழ் மக்களுக்கு தமிழ்  அரசியல் தரப்பு செய்த அநீதியை எடுத்துரைத்த அருட் தந்தை றெக்ஸ் செளந்தராவின் உரை சம்பந்தப்பட்டவர்களைத் தொடுகிறதோ இல்லையோ அவரின் உரை இந்த மண்ணில் நீதியும் நேர்மையும் இன்னமும் துளிர்விட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila