வடக்கிலிருந்து முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஐந்து தமிழர்கள் சிங்கள தேசிய கட்சியில் தெரிவாகியுள்ளனர். சீன அமைச்சர் ஒருவர் இந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்தச் சமயத்தில் வடக்கு மாகாண மக்களுக்கு நாமே நிரந்தரமானவர்கள் என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் கூறியிருப்பதன் அர்த்தம் என்ன?
தனி மனிதர்இ பொதுச்சேவையாளர்இ சமூக அமைப்பு, பாடசாலை, அரசியல் கட்சி என்று எதனை எடுத்தாலும் அவற்றின் ஒவ்வொரு காலகட்டமும் வரலாற்றுப் பதிவுக்கானது. 25வது ஆண்டில் வெள்ளிவிழாஇ 50ல் பொன்விழா, 75ல் வைரவிழா பின்னர் நூற்றாண்டுவிழா என்று இவைகளுக்கு தனித்தனியான பெயர் உண்டு.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75வது ஆண்டு. தமிழர் தாயகமான இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள மூலைமுடுக்கெங்கும் இதற்கான விழாக்கள் நடைபெற்று கட்சியை எழுச்சியடையச் செய்ய வேண்டிய காலம்.
கவனிப்பாரற்ற ஒரு கோவிலின் மூலஸ்தானத்தில் விளக்கொன்று நூர்ந்து நூர்ந்து எரிவதைப்போல தமிழரசுக் கட்சி தனது சொந்த மண்ணில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 1974ம் ஆண்டில் இதன் வெள்ளிவிழா மலர் வெளிவந்த பின்னர் இன்னொரு கால வரலாற்றின் அறிகுறியான மலரை பார்க்க முடியவில்லை. கட்சியின் தலைவர், செயலாளர் பதவிகள் என்று பார்த்தால் நிரந்தரமாக ஒருவர் அப்பதவியில் இல்லை. எல்லாமே ஷபதில்|கள். இப்போது பதிலுக்கும் பதில் வருகிறது.
கட்சியின் வைரவிழா ஆண்டில் அது நொடிந்து நொந்துபோய் காணப்படுகிறது. இதற்கு ஒத்தடம் கொடுத்து நிமிர்த்திவிட வேண்டியவர்கள் பதவிகளின் பின்னால் பதுங்கிக் காணப்படுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த வாரம்வரை கட்சியின் பதில் செயலாளராகவிருந்தவர் திடீரென நோயைக் காரணம் கூறி பதவி விலகஇ இன்னொருவர் புதிய பதில் செயலாளராக வந்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன்.
முன்னர் பதில் செயலாளராகவிருந்தவர் மருத்துவர் சத்தியலிங்கம். சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் முக்கியமான கூட்டத்தின்போதும் இவர் தனது நோயைக் காரணம் காட்டி ஒதுங்கியவர். இப்போது நோயைக் காரணம் காட்டி பதில் பதவியிலிருந்தே விலகி விட்டார். நிரந்தரச் செயலாளர் ஒருவர் கட்சிக்கு எப்போதுதான் கிடைப்பாரோ என்ற நிலையில் அனைவரும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
2010ல் தேசியப் பட்டியல் எம்.பியாக கட்சிக்குள் நுழைந்து 2015லும் 2020லும் தேர்தலூடாக எம்.பியாகி கடந்த வருட பொதுத்தேர்தலில் தோல்வி கண்டவர் சுமந்திரன். 2020 தேர்தலில் சிறீதரனின் நட்பினால் அருந்தப்பில் எம்.பியான இவர் கடந்த வருடத் தேர்தலில் சிறீதரனைக் கவிழ்ப்பதற்கு எத்தனித்து தானே கவிழ்ந்தவர்.
இதன் பின்னர் கட்சியின் தலைவராக சிறீதரனை எதிர்த்துப் போட்டியிட்டு அதிலும் தோல்வி கண்டவர். இத்தோடு இவர் விடவில்லை. கட்சியின் செயலாளர் பதவியைத் தருமாறு புதிய தலைவர் சிறீதரனிடம் கேட்டு மறுக்கப்பட்டதையடுத்து அமைதியடையவில்லை. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பக்கச் சார்பு அனுசரணையால் கட்சியின் பேச்சாளரானார். இப்போது சத்தியலிங்கத்தின் கருணையால் பதில் செயலாளராகியுள்ளார்.
சரியான வேளை வரும்போது சத்தியலிங்கம் பதில் செயலாளர் பதவியிலிருந்து விலகி சுமந்திரனை அப்பதவிக்கு அமர்த்துவார் என்கின்ற கருத்தை பல அரசியல் விமர்சகர்கள்இ ஆய்வாளர்கள்இ கட்டுரையாளர்கள் (இந்தப் பத்தியாளர் உட்பட) கடந்த சில வாரங்களாக சுட்டி வந்தது உண்மையாகியுள்ளது. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தல்களின்போது அபேட்சகர்களை நியமிப்பது உட்பட அனைத்திலும் செயலாளரே ஒப்பமிடும் உரிமையைப் பெற்றவராதலால்இ இவ்வேளையில் சுமந்திரன் அப்பதவியில் இருந்தால் மட்டுமே அவருக்கு விருப்பமானவர்கள் அபேட்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதே இந்தத் திட்டமிடலின் பின்னணி.
அடிக்கடி நோய்வாய்ப்படும் மருத்துவர் சத்தியலிங்கம்இ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டும் கைவிடாது வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி அண்மையில் ஓர் ஊடகத்தில் எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியால் மாதாந்தப் படிஇ அமர்வுகளால் கிடைக்கும் சிறப்புப் படிஇ சலுகை அடிப்படை உணவு மற்றும் பல மேலதிக வசதிகள் இந்தப் பதவியால் கிடைக்கும்வரை தமது நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென மருத்துவர் நினைக்கிறார் போல் தெரிகிறது.
என்றாவது ஒரு நாள் சுமந்திரன் நாடாளுமன்றம் செல்ல விரும்பும்போது சத்தியலிங்கம் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்து அவருக்கு இடம்கொடுப்பார் எனவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.
எதுவானாலும் கட்சியின் எதிர்காலம் என்பது இப்போது நீதிமன்றத் தீர்ப்பில் தங்கியிருக்கிறது. யூன் மாதத்தில் வழக்கொன்றின் தீர்ப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. என்றாவது வரும் இந்தத் தீர்ப்பு சிறீதரன் தரப்பு கேட்டிருக்கும் விருப்புக்கு சாதகமாக அமையுமாயின் நிர்வாகிகள் தெரிவுக்கு முன்னராகஇ கட்சியின் மூலக்கிளைகளிலிருந்து மத்திய குழுவரைக்கும் தேர்தல் நடத்தினால் அது சிறீதரன் தரப்புக்கு சாதகமாக அமையுமென்ற அச்சம் அவரை எதிர்ப்பவர்களுக்கு இருக்கிறது. சிலவேளை இவைகளை முடிப்பதற்குள் அடுத்த பொதுத்தேர்தல் வந்தாலும் வந்துவிடும்.
தமிழர்களின் தனித்துவமான அரசியல் தலைமை இப்போது சுமந்திரன் - சிறீதரன் என்ற இருவரின் போட்டிக்குள் நசிபட்டுக் கொண்டிருக்கையில், தமிழரின் அரசியலைத் தீர்மானிக்கும் பொறுப்பை வடக்கிலும் கிழக்கிலும் கணிசமான ஆசனங்களைப் பெற்றிருக்கும் அநுர குமார கட்சி தனதாக்கியுள்ளது. இது போதாதென்று வடமாகாணம் இப்போது எந்த நாட்டுக்கு சொந்தமாகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
'வடக்கு மாகாண மக்களுக்கு நாமே நிரந்தரமானவர்கள்" என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவித்தது. ஈழநாடு பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இதழின் முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுடன் நட்பு ரீதியாக நடத்திய சந்திப்பின்போது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தமது கருத்துக்குச் சான்றாக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரேயொரு வெளிநாட்டுத் தூதரகம் இந்தியாவுடையது மட்டுமே என்றும், ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டம் உட்பட பல காரியங்களை எடுத்துக் கூறியுள்ளார்.
சீனாவின் நல்லிணக்கம் மற்றும் இனவிவகாரங்களுக்கான அமைச்சர் பான் யு தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று இந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருக்கும் வேளையில் இந்தியத் துணைத்தூதுவர் தமது கருத்தை வெளியிட்டிருப்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
ஏற்கனவே பல தடவை கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தமது அதிகாரி;கள் சகிதம் வடக்குக்கும் கிழக்குக்கும் காரணம் கூறாத பல விஜயங்களை மேற்கொண்டிருந்தார். காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்கரைகளில் நின்று தூரநோக்கிக் கண்ணாடியால் பார்வையிட்டவாறுஇ இந்தியா எவ்வளவு தூரத்தில் உள்ளதுஇ இராமர் பாலம் எவ்வாறு உள்ளது என்று பல விடயங்களை வெளிப்படுத்தியது ஞாபகம் இருக்கலாம். அதுமட்டுமன்றி கடலோர மக்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கியதையும்இ பல இடங்களில் கடலட்டை பண்ணைகளை உருவாக்க உதவியதையும் இந்தியா கவனிக்காது இருந்திருக்க முடியாது. இந்தப் பின்னணியில் பார்க்கையில் வடமாகாணத்தை சீனா தனது பொருளாதார அபிவிருத்தி உதவிக;டாக தன்வயப்படுத்தி விடலாமென்னும் அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்க இடமுண்டு.
இவ்விடயம் தொடர்பாக ஓய்வுபெற்ற தமிழ் அரசியல்வாதி ஒருவருடனும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஒருவருடனும் உரையாடியபோது இருவரது கருத்துகளும் ஒரே பார்வையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவற்றின் தொகுப்பாக பின்வரும் கருத்துகளை பார்க்கலாம்:
'வடமாகாணம் தனி ராஜ்ஜியமோ தனிநாடோ அல்ல. இங்கு மக்களால் தெரிவான மாகாண சபையும் இல்லை. தமிழ்த் தேசிய நோக்கம் கொண்ட கட்சிகள் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளன. வடக்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அநுர குமார கட்சி முனைந்து கொண்டிருக்கிறது. இவர்களினூடாக வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பொருளாதார விருத்தி போன்றவைகளில் இந்தியா நேர்மையாக எதனைச் செய்தது? 1983 இனவழிப்பின் பின்னர் பாதிக்கப்பட்ட தமிழரை அவர்கள் தாயகத்துக்கு அனுப்புவதற்கு கப்பல்களை அனுப்பிய இந்திரா காந்திஇ தமது பிரதிநிதியாக நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பியதைத் தவிர வேறு எதனை செய்ய முடிந்தது?
1987ல் ராஜிவும் ஜே.ஆரும் இனப்பிரச்சனை தீர்வுக்கென செய்த ஒப்பந்தத்தில் எந்த அம்சம் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்பட்டது. தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் இந்தியா எப்பொழுதும் அக்கறையாக உள்ளது என்று இந்திய அமைச்சர்களும் ராஜதந்திரிகளும் கூறுவார்களே தவிரஇ எதனை நிறைவேற்றினார்கள்? 13ம் திருத்தம், மாகாண சபை, காவல் - காணி அதிகாரம் என்பவையெல்லாம் பேச்சுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிறிது காலம் இயங்கிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சராக தங்களால் நியமிக்கப்பட்டவரையே இந்தியா தூக்கியெறிந்துவிட்டது. இவ்வாறு இந்தியா செய்யத் தவறியவைகளை நீண்ட பட்டியலிட முடியும்" என்று மேற்சொன்ன இரு பிரமுகர்களும் தங்கள் பக்கக் கருத்துகளை வெளியிட்டனர்.
சீனாவுக்கு வடமாகாணத்தைப் பிடிக்கும் எண்ணமில்லை. புவியியல் பரப்பும் அதற்குச் சாதகமாக இல்லை. ஆனால், தனது பங்களிப்பினால் சீனா தமிழர் மனதில் நம்பிக்கையான இடத்தைப் பெற்றுவிடுமென்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியும் அவரது கட்சியும் மாக்சிஸ கொள்கையாளர்கள் என்பதால் நிகழ்காலத்தில் சீனாவின் கால்பதிப்பு ஆழமாகவும், வேகமாகவும் இருக்கலாமென கருதும் இந்தியா, வடமாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென விரும்புவதையா துணைத்தூதுவர் சாய் முரளியின் கருத்து வெளிப்படுத்துகிறது?
குறிப்பு - இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியென பிரகடனப்படுத்தியுள்ள சீனா, அப்பிரதேச மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் வழங்கி வருவதோடு அவர்கள் சீனாவுக்கு சென்றுவர விசா நடைமுறையை ரத்துச் செய்திருப்பதை தடுக்க முடியாது பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய அரசுஇ இலங்கையின் வடபகுதியை - அது தமிழரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருப்பதால் இவர்களுக்கு தாங்கள் மட்டுமே நிரந்தரமானவர்கள் என்று கூறுவதன் அர்த்தம் என்ன?