நேற்றைய தினம் (09.02.2025) நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத்தடைக்கு நாங்கள் தான் காரணம் எனும் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம்.
ஏற்கனவே நாட்டில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் நாம் தான் காரணம் என்று அநுர அரசாங்கம் எம்மீது வீண்பழி போட்டுள்ளது.
இந்த செயற்பாடு எமது குரங்கு சமூகத்தை முற்றாக அழிப்பதற்கான சதித்திட்டம் தான் இதுவோ எனும் சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த கால அரசாங்கம் எம்மவர்களை சீனாவிற்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்தார்கள்.
ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் காட்டை அழிக்கிறார்கள். அதனால் மழை பொழிவது இல்லை. நாம் தண்ணீருக்காக ஊருக்குள் வரவேண்டிய சூழலை ஏற்படுத்துகிறார்கள்.
மின்மாற்றிகள் அமைக்கும் போது எமது இனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத பொறியியலாளர்கள், அதற்கு ஒரு சபை, அதை அங்கீகரிக்க ஒரு அமைச்சரவை இதற்கு ஒரு தேர்தல் இப்படி பொறுப்பற்றவர்கள் நாட்டை ஆள்வது கவலையாக உள்ளது.
பொறியாளர்கள் இல்லாத காலத்திலேயே ராமர் பாலத்தை எமது சமூகம் அமைத்தது, இதை நீங்கள் வரலாறுகளில் படித்திருப்பீர்கள்.
அவ்வாறு சிந்தனை உள்ள பலம் பொருந்திய இனமான எமது இனத்தின் மீது வீண் பழி போடவேண்டாம் என எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இந்த மின் தடைக்கும், தேங்காய் விலையேற்றத்திற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
இலஞ்ச ஊழல், ஈஸ்டர் தாக்குதல், போன்ற பிரச்சினைகளை கண்டுபிடித்து மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டுவர ஆட்சிக்கு வந்த நீங்கள் தற்போது தேவையில்லாமல் தேங்காயும், அரிசியும் என கூத்து காட்டுவதை நிறுத்துங்கள்.
நாங்கள் குரங்கு சேட்டை செய்வதாக கூத்தாடும் நீங்கள் நாடாளுமன்றத்திற்குள் நீங்கள் ஆடும் கேலிக்கூத்திற்கும் வித்தியாசம் இல்லை.
தேர்தல் மேடைகளில் வாய்கிழிய ஜனநாயகம் பேசிய நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்களை மூட சொல்வது நியாயமா???
அடுத்தவனை நோக்கி நீங்கள் ஒருவிரல் நீட்டும் போது மற்றைய விரல்கள் உங்களை நோக்கியே உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.