தெற்கில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்ற எண்ணவோட்டத்தில் அரசியல்களம் அமைந்துள்ளது. ஆனால், அடுத்த மாத உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சியில் எவர் போட்டியிடுவது, எந்தக் கட்சிக்கு கதிரைப் பாய்ச்சல் நடத்துவது என்ற போட்டி தமிழர் பிரதேசத்தில். சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் என்றுமே இணைய முடியாது போலும்.
நீங்கள் வேறு நாடையா, நாங்கள் வேறு நாடையா என்று தாயக தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடிய பாடல் மிகவும் பிரபல்யமானது. ஆயுதப்போர் உக்கிரமாக இருந்த காலத்தில் தமிழர் தேசத்தில் பட்டிதொட்டி எங்கும் பரவலாக இது ஒலிபரப்பானது.
இதனை இப்போது கூறுவதற்கு சில காரணங்கள் உண்டு. இதில் முக்கியமானது, அடுத்த மாதம் இடம்பெறவுள்ள உள்;ராட்சித் தேர்தலுக்கு தமிழர் தேசக் கட்சிகள் வேட்பாளர்களைத் தேடுவதிலும், யாருடைய கழுத்தை யார் அறுப்பது என்பதிலும் தீவிரமாகிக் கொண்டிருக்க, சிங்கள தேசம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்தக் கட்சி எவ்வாறு வெற்றி பெறுவது என்பது பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்றது.
2009ல் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்குமென அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி பகிரங்கமாக அறிவித்து வருகிறது. இதற்கு மறுத்தான் கொடுப்பதுபோல மகிந்தவின் பொதுஜன பெரமுன தாங்களே வெற்றி பெறப்போவது என்று மட்டும் சொல்லாது, அடுத்த ஜனாதிபதி தங்களின் நாமல் ராஜபக்ச என்றும் அதற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்க ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தாங்கள் தனித்தே அடுத்த தேர்தலைச் சந்திப்போம் என்று கூறிக்கொண்டிருந்தாலும், சஜித் பிரேமதாசவை ஒருவாறு அப்புறப்படுத்திவிட்டு அவரது கட்சியை முழுமையாக தங்களுடன் இணைப்பதற்கான உத்திகளை தேடிக்கொண்டிருக்கிறது.
மேற்சொன்ன மூன்று தரப்பும் அடுத்த மாத உள்ளூராட்சித் தேர்தலை பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் கையகப்படுத்திய அநுர குமார தரப்பு இந்தத் தேர்தலையும் வெற்றி கொள்ளுமென்ற எதிர்பார்ப்பில், ஆர்ப்பாட்டமில்லாது இயலுமானவரை பெறக்கூடிய ஆசனங்களைப் பெற்றால் போதுமென்ற போக்கில் தேர்தலைச் சந்திக்கின்றன.
புதுவையின் பாடலுக்கு இணையான சொற்கோவையை வீசி விட்டால் தமிழரசுக்கு வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கையில் அதன் பதில் செயலாளர் சுமந்திரன் நான்கு வார்த்தைகளை விளாசியுள்ளார். 'நாடு அநுராவோடு, வீடு எங்களோடு" என்ற நம்பிக்கையை இவரது சுலோகம் தெரிவித்து நிற்கிறது. ஆனால், களநிலைவரம் அவ்வாறில்லை. அநுராவின் அலை மற்றவர்கள் சொல்வதுபோல இன்னும் ஓயவில்லை என்னும் சுமந்திரனின் கூற்று தமிழர் தாயகத்துக்கும் பொருந்தக்கூடியவாறே நிலைமை காணப்படுகிறது.
தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டதால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கில் படுதோல்வியைக் கண்டது என்கின்ற அபிப்பிராயம் பலரிடம் உண்டு. ஆனால், அநுர தரப்பு தகுதியான வேட்பாளர்களைக் கண்டெடுத்து, வாக்காளப் பெருமக்களை நாடி பிடித்துப் பார்த்து தேர்தலைச் சந்தித்த முறை அவர்களுக்கு எதிர்பாராத வெற்றியை பெற்றுக்கொடுத்தது என்பதை ஏனோ இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ்க் கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிளவும் பிரிவும் இவர்களின் தோல்விக்கான அடிப்படைக் காரணம். இதனை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சித் தேர்தலில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தை கொழும்புக்கு எடுத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் போதிய அபேட்சகர்களைப் பெறமுடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. அடுத்த பொதுத்தேர்தலில் முயற்சிப்போம் என்றவாறு மெதுவாக நழுவ வேண்டி வந்துவிட்டது.
இவைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க தமிழர் தரப்பு இப்போது எங்கு நிற்கிறது என்பதை பார்ப்பது அவசியமாகிறது. உள்;ராட்சித் தேர்தல் வரப்போகிறது என்ற தகவல் வந்தபோதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என அழைக்கப்படும் தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒற்றுமை முயற்சி ஒன்றை ஆரம்பித்தார். இதன் ஒரு கட்டமாக தமிழரசுக் கட்சி எம்.பி. சிறீதரனோடு, அவர் தமிழரசின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் என்ற அடிப்படையில் நேரடிப் பேச்சை நடத்தினார்.
ஆனால், கட்சியின் தலைமைப்பீடம் அங்கிருக்கும் ஒருவரின் முடிவுக்கிணங்க இந்த முயற்சியை எதிர்த்தது. இதனால் உத்தியோகபூர்வமாக தமிழரசுக் கட்சியோடு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் நோக்கில், கட்சியின் பதில் தலைவர் திரு. சீ.வி.கே.சிவஞானத்தின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட ஆவணத்தை அவரிடம் கஜேந்திரகுமார் கையளித்தார். சுமந்திரனின் ஆலோசனையின் பேரில் கஜேந்திரகுமாரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. புதிய அரசியலமைப்பு வரும்போது நிலைமையைக் கவனிப்போம் என்று சீ.வி.கே. அவர்கள் பதிலளித்து விடயத்தை மூடிவிட்டார்.
இதனை எழுதும்போது 1976ம் ஆண்டு வரலாற்று நிகழ்வொன்று ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கையின் அரசியல் சட்டத்தை மீறி தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டார்கள் என்று காரணம் கூறி அவர்கள் மீது இலங்கை அரசாங்கம் ட்ரயல் அற் பார் வழக்கினைத் தாக்கல் செய்தது. இவ்வழக்கில் அரசியலுக்கு அப்பால் தமிழின ஒற்றுமையைக் காட்டும் வகையில் அனைத்துத் தமிழ் சட்டவாளர்களும் ஆஜராவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழரசுத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தை நாடிச் சென்று அழைப்பு விடுத்தபோது அவர் அதனை ஏற்று வழக்கில் ஆஜரானார். அரசியலில் பரம எதிரியாகவிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அழைத்தபோது ஜி.ஜி.பொன்னம்பலம் மறுக்காது வழக்கில் பங்குபற்றியது தமிழர் அரசியலில் முக்கியமான ஒன்று. மொத்தம் 67 தமிழ் வழக்கறிஞர்கள் இதில் ஆஜராகியிருந்தனர்.
இது நடைபெற்று ஐம்பதாண்டுகளாகும் நிலையில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் தமிழரசுத் தலைவரின் இல்லம் தேடி இன நன்மைக்காக ஒன்றுபடும் அழைப்பை விடுத்தபோது அது நிராகரிக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்பது பலருடைய கருத்து. இன்று மிக முக்கியமான ஒரு காலத்தில் இரண்டு பிரதான கட்சிகளினதும் இணைப்பு அவசியமானதென்பது பொதுவான அபிப்பிராயம். ஆனால் ஏனோ அது நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு இணைப்பு, துண்டிப்பு, மறுப்பு போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் கட்சிகளிடையே இடம்பெறுகிறது. இது எதுவுமே கனியாகும் சாத்தியம் காணப்படவில்லை. அன்றைய தமிழ்த் தலைவர்களிடமிருந்த விட்டுக்கொடுப்பும் இணங்கிப் போகும் தன்மையும் இப்போது அறவே இல்லாமலாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், தமிழரசுக் கட்சிக்கு நிரந்தரமான தலைவரோ, செயலாளரோ இல்லாதிருப்பதே. எல்லாப் பதவிகளுமே பதில் பதவிகளாக இருப்பதால் அவரவர் முடிவு கட்சியின் முடிவாகிப் போகிறது.
முன்னாள் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களை தங்கள் விருப்புக்கு ஏற்ப வளைத்தெடுத்தவர்கள் இப்போது அதே பாதையில் பயணிப்பதே தமிழரசுக் கட்சியின் இன்றைய இறங்குநிலைக்கு முக்கிய காரணம். இதன் ஒரு பக்கமாக, ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லத் தள்ளப்பட்டு வெளியே போனவர்களை மீள இணைப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்த முடிவும் பிசுபிசுத்துப் போயுள்ளது.
பார்க்கப் போனால் தமிழ்த் தேசியம் என்று தங்களை அடையாளப்படுத்தும் அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளும் நவக்கிரகங்கள் போல் ஒன்றையொன்று பார்க்க விரும்பாது தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் பதினேழு உள்ளூராட்சிச் சபைகளுக்கும் இடம்பெறப்போகும் போட்டியை கூறலாம்.
தமிழரசுக் கட்சி அனைத்துச் சபைகளிலும் தனித்தே போட்டி என்று அறிவித்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று போட்டியிட்ட சட்டவாளர் கே.வி.தவராஜா தலைமையிலான அணி ஜனநாயக தமிழரசுக் கட்சி என்ற பெயரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியோடு சேர்ந்து போட்டியிட முன்வந்துள்ளது.
கஜேந்திரகுமார் கட்சியில் முன்னர் அங்கம் வகித்த மணிவண்ணன் தலைமையிலான குழு இப்போது சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்துள்ளது. இவர்கள் யாழ்ப்பாணத்தின் பதினாறு சபைகளுக்குப் போட்டியிடுகின்றனர் வடமராட்சியில் ஒரு சபைக்குப் போட்டியிடும் சுயேட்சைக் குழுவோடு இணைந்து போட்டியிடுகின்றனர்.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியவை இணைந்தா அல்லது தனித்தனியாகவா போட்டியிடுவார்கள் என்பது இதனை எழுதும்வரை தெரிய வரவில்லை. அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் போட்டியிடுகின்றன. இவை அனைத்திலும் தாங்களே வெற்றி பெறுவோமென தேசிய மக்கள் சக்தியின் வடபகுதி அமைப்பாளரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் அநுர குமார அணி மூன்று ஆசனங்களை எவ்வாறு இலகுவாக வென்றது என்பதை தமிழர் தரப்பு கட்சிகள் சுயமாக பரிசீலனை செய்து பார்ப்பார்களாயின், உள்;ராட்சித் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையுமென்பதை இலகுவாகக் கிரகிக்க முடியும். இனத்தின் நன்மை கருதியாவது இவர்கள் தேவைப்படும்பொழுது விட்டுக்கொடுத்தும் தேவையான இடங்களில் இணைந்தும் போட்டியிட்டு பதினேழு சபைகளையும் கைப்பற்ற முடியும். ஆனால், இனம், கட்சி, மக்கள், எதிர்காலம் என்பவைகளைத் தவிர்த்து, பதவிச்சுகம் மட்டுமே தேவை என்று கருதுவதால் இணைந்து செல்வதில் இவர்களுக்கு நாட்டம் வரவில்லை.
ஏற்கனவே உள்ள பிளவுகள் போதாதென்று இப்போது தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்து இன்னொரு புதிய தமிழரசுக் கட்சி குட்டி போடப்போவதாகவும் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி எதுவுமில்லை, கட்சியை பிளப்பதற்கான ஒரு சதி என்று தமிழரசின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அரசியலில் சதி என்பது தவிர்க்க முடியாத ஓரங்கம். சதிகளால்தான் ஒவ்வொரு கட்சிகளிலிருந்தும் இன்னொரு கட்சிகள் உருவாகின என்பது வரலாறு.
தற்போதுள்ள மகிந்தவின் பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி என்பவை அவர்களின் முன்னைய கட்சிகளில் இடம்பெற்ற சதி முயற்சிகளால் உருவாகி சிங்கள தேசத்தில் முன்னணியில் நிற்பதை நினைவிற் கொண்டால், புதிய தமிழரசுக் கட்சி என்பதும் அதுபோன்ற ஒரு சதியால் உருவாகக்கூடும். அவ்வாறு உருவாகுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் இப்போதுள்ள கட்சியின் நிர்வாகிகளே சுமக்க நேரிடும்.