பட்டலந்தவுக்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்...!

 கடந்த வாரம் 06-03--2025 அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வி பல்வேறு வகையான வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது.

இந்த செவ்வியினை பல்வேறு கோணங்களுக்கூடாக இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை எடை போடவும், பகுப்பாய்வு செய்யவும் உதவும்.

அந்த செவ்வியில் ரணிலிடம் சிங்கள இடதுசாரி போராட்டக்காரர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மற்றும் படுகொலை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய பதில்கள் ஆட்சியாளர்களின் கோர முகங்களை வெளிப்படுத்தியது.

ஆயினும் இப்போது இலங்கை அரசியலில் ஈழத் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோருவதற்கான வழி ஒன்றையும் திறந்து விட்டுள்ளது.

இப்போது தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் விசாரணை கமிஷன் அறிக்கைக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.அதுவே தமிழ் மக்களின் நீதி கோரளுக்கான ஆரம்பமாக மாற்றியமைக்க உதவும்.

இலங்கை அரசியலில் இரண்டாவது அரசியல் நரி என அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க அல்ஜசீரா தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் பொறுப்பெற்றதாக இருந்தது மாத்திரமல்ல பல இடங்களில் அவர் பதற்றம் அடைந்ததையும், தளர்வடைந்ததையும், கோபமடைந்ததையும், நிதானம் இழந்ததையும் அவதானிக்க முடிந்தது.

பட்டலந்தவுக்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்...! | Tamil Leaders Should Support Battalantha

இந்தப் பேட்டி இந்தச் சிங்கள யானைக்கும் அடி சறுக்கும் என்பதை நிரூபித்துள்ளது. அத்தோடு அனைத்து சிங்களத் தலைவர்களின் குரூர மனப்பாங்கை வெளிப்படுத்தியதாகவும் அமைந்துவிட்டது.

சிங்களத் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் பற்றிய எந்த ஒரு கரிசனையும், பொறுப்புக்கூறலும் இல்லை என்பதையும், தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் உரிமைகளையும் இவர்கள் வழங்க தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தியது. அத்தோடு சிங்கள இளைஞர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்த பட்டலந்த வதைமுகாம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலையையும், தாக்கத்தையும் ஏற்படுத்தப் போகிறது. எனவே இத்தகைய ““பட்டலந்த வதை முகாம்““ பற்றி சற்றுப் பார்த்து விடுவோம்.

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சிங்கள இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி என அழைக்கப்படும் “மக்கள் விடுதலை முன்னணி“ ரோகண விஜயவீர என்று அழைக்கப்படுகின்ற பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera) தலைமையில் இலங்கையில் இரு முறை (1971, மற்றும் 1987-1989) புரட்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தது. ஜே.வி.பி1971ம் ஆண்டு முதலாவது கிளர்ச்சியை செய்து அதில் தோல்வி அடைந்தது.

அதன் பின்னர் அது 1987 ஆம் ஆண்டு மீண்டும் எழுச்சி பெற்றது. அதற்கான பின்னணி என்னவெனில் இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஈழத் தங்களுடைய ஆயுதப் போராட்டமும் அதன் விளைவால் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பிராந்திய அலகை தீர்வாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு வழங்கி விட்டார் என்பதுதான்.

பட்டலந்தவுக்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்...! | Tamil Leaders Should Support Battalantha

அதே நேரத்தில் அமைதிகாக்கும் படையாக இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு வட-கிழக்கில் நிலை கொண்டிருப்பதையும் சிங்கள மக்களுக்கு காட்டி சிங்கள தேசிய உணர்வை தட்டியெழுப்பி அதனுாடாக தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்ற இரண்டையும் தமது கையில் ஏந்தி அதனையே தமது ஆயுதமாக பயன்படுத்தி அதிவேகமாக ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

அந்த ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதற்கு இலங்கையின் முப்படைகளும் பல்வேறுபட்ட இடங்களில் வதை முகாம்களை அமைத்து சந்தோகத்தின் பெயரில் சிங்கள இளைஞர்களை கைதுசெய்து சித்திரவதை செய்து படுகொலைகளில் ஈடுபட்டனர். முன்னையகாலத்தில் தமிழ் மக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்து பழக்கப்பட்டு அதில் தேர்ச்சி அடைந்த சிங்கள ஆயுதப்படைகள் அந்த தேர்ச்சியின் வெளிப்பாட்டை ஜேவிபி கிளர்ச்சியின் போது தங்கள் இனத்தின் மீதும் காட்டத் தவறவில்லை.

ஜேவிபி ஆயுதக் கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட சிங்கள இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்து 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். அதன் தலைவர் ரோகண விஜயவீர உலப்பனை என்ற இடத்தில் 12/11/1989 இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அடுத்தநாள் 13/11/1989 கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அந்த கிளர்ச்சி முற்றாக முறியடிக்கப்பட்டது.

ஜேவிபி யினரின் கிளர்ச்சியை அடக்குவதற்கு விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட முகாம்களில் ""பட்டலந்தை"" முகாம் அன்றைய காலத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய முகமாகும்.

""சித்திரவதை என்ற வார்த்தைக்கு அர்த்தமே பட்டலந்ததான்"" என்று கூறப்படுகின்ற அளவிற்கு அந்த முகாம் சிங்கள தேசத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. இந்த கொலை முகாமுக்கு பொறுப்பதிகாரியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பரும், விசுவாசியுமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் செயற்பட்டார்.

பட்டலந்த சிறப்பு முகாம் 

பட்டலந்த சிறப்பு முகாம் என்பது கம்பகா மாவட்டத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் கிரிபத்கொட- பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள யூரியா உரத்தொழிற்சாலையின் ஒரு பகுதியாகும்.

அவ்வளாகத்திலிருந்த 64 கட்டடங்களை உள்ளடக்கிய இரசாயன உர தொழிற்சாலையின் அதிகாரிகள் தங்குவிடுதியையே இலங்கை பொலிஸ் தனது விசாரணைக்கான சித்திரவதை முகாமாக மாற்றி அமைத்திருந்தது.

குறித்த யூரியா உரத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் அன்றைய காலத்தில் அமைச்சராகவிருந்த ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் நடவடிக்கைகளுக்கான காரியாலயமாக பயன்படுத்தியுள்ளார்.

பட்டலந்தவுக்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்...! | Tamil Leaders Should Support Battalantha

 இலங்கையின் வரலாற்றில் கம்பகா பற்றிக் குறிப்பிட வேண்டும். இன்று அதிக சனத்தொகை கொண்ட மாவட்டமாக காணப்படும் கம்பகா மாவட்டம் இலங்கையின் வரலாற்றில் கோட்டை இராசதானி காலத்தில் அவ்வரசின் பின்புலப் பலமான அரணாக இருந்த பிரதேசமாகும்.

இந்தப் பிராந்தியத்தின் மக்கள் தன் எழுச்சி உடையவர்களாகவும் தீவிரமாகப் போராடக்கூடிய பண்பையும் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.

அதனால்த்தான் கோட்டை ராஜ்யத்தின் குற்றவாளிகளுக்கு கொடிய மரண தண்டனை வழங்கப்படுகின்ற போது இரண்டு கமுகு மரங்களில் கட்டி மனிதனை இரண்டாகப் பிளக்கும் கொடூர தண்டனைகள் இங்கேதான் அதிகமாக வழங்கப்பட்டன என்பதையும் கவனத்திற்கு கொள்ள வேண்டும்.

இந்தப் பிராந்தியத்தின் மக்கள் எப்போதும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்ததையே பிற்கால வரலாற்றிலும் காண முடியும்.

அதற்கு உதாரணமாக எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்கா காலத்தில் தமிழர்களுடன் செய்து கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.ஆர் ஜெயவர்த்தனா நூற்றுக்கணக்கான பிக்குகளை அணிதிரட்டி தளதாமாளிகை நோக்கிய பாதயாத்திரியை மேற்கொண்ட போது பண்டாரநாயக்காவின் தீவிர விசுவாசியான எஸ்.ரீ.பண்டாரநாயக்காவின் அடிதடி குழுவினர் ஜே ஆரின் பாதயாத்திரை குழுவினர் மீது கோரமான தாக்குதலை நடத்தி பாதயாத்திரை தொடர்ந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி துரத்தி அடித்தனர்.

ஜே ஆர் வேட்டி கழர ஓட்டு விரட்டிய சம்பவம் கம்பஹாவில் நிகழ்ந்ததையும் இங்கே குறிப்பிட்டுச் செல்லவேண்டும். அவ்வாறே 1983 ஜூலை படுகொலையின் போதும் கம்பஹாவில் தமிழ் மக்கள் பெரிய அளவில் கொல்லப்பட்டனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஒரு சூழமைவை கொண்டது கம்பஹாவை ஆட்சியாளர்களினால் கிளர்ச்சியை அடக்குவதற்காக பயன்படுத்த வாய்ப்பாக பட்டலந்தையில் ஒரு சிறப்பு முகாம் உருவாக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சந்தேகத்துக்குறியவர்கள் என்று கருதப்படுகின்ற இளைஞர்களும், யுவதிகளும் கைது செய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ கொண்டுவரப்பட்டு இந்த முகாமில் நிர்வாணமாக கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் பத்தாயிரம் இளைஞர்கள் இந்த வதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் கூறப்படுகின்றது. இந்தப் படுகொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் பின்னான ஐந்து வருடங்களில் இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதியாக பதவிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பட்டலந்த வதை முகாம் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்கு ஒரு விசாரணை ஆணைக்குழுவை 1996ல் நியமித்தார். இதனை அடுத்து இலங்கையின் முக்கிய 11 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அவர்களை கைதுசெய்ய இருந்த நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றிருந்தார். ஆயினும் குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் மீண்டும் இலங்கைக்கு வரும்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

அவ்வேளை டக்ளஸ் பீரிஸ் சத்தியக்கடதாசி மூலம் சாட்சியம் அளித்துள்ளார்.

விசாரணை குழு அறிக்கை

அவரிடம் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது அந்த வதை முகாமில் கொல்லப்பட்டவர்களில் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கண்டறியப்பட்டிருந்தது.அதனை விசாரணை குழு அறிக்கையாகவும் சமர்ப்பித்திருந்தது.

அதேவேளை அன்றைய காலகட்டத்தில் தனது தேர்தல் அலுவலகமாக பயன்படுத்தப்பட்ட அந்த வகை முகாமின் ஒரு கட்டடப் பகுதியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்குள்ளே பல்வேறு சித்திரவதைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அதே நேரத்தில் பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் சித்திரவதை செய்யப்படுவதை ரணில் விக்ரமசிங்க ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற செய்திகளும் ஊடகங்களில் கசிந்துள்ளன.

இந்நிலையில் பட்டலந்த வதைமுகாம் படுகொலைகள் பற்றி 1996 நவம்பரில் குற்றத்தடுப்பு பிரிவினராலும், 1997 ல் ஜனாதிபதி ஆணைக் குளுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பட்டலந்தவுக்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்...! | Tamil Leaders Should Support Battalantha

இந்நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்க அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் மீண்டும் அந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இன்றைய என்.பி.பி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் நளினி விஜயசூரிய இது தொடர்பாக குறிப்பிடுகையில் பட்டலந்த விசாரணை குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

ஆகவே பட்டலந்த விசாரணை குழு அறிக்கை நிச்சயமாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் சூழ்நிலை தோன்றி விட்டது.

இந்தச் சூழல் இன்றைய அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடிதான். ஆயினும் அவர்கள் தங்களுடைய தோழர்களின் இழப்பையும், வதைப்பையும் சகித்துக் கொண்டு இருப்பார்களா? என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும்.

கடந்த காலங்களில்  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கலவரங்கள், மனித உரிமை மீறல்கள், போன்றவற்றிற்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், விசாரணை குழுக்கள், தீர்ப்பாயங்கள், நாடாளுமன்ற விசாரணை ஆணை குழுக்கள் என பலதரப்பட்ட விசாரணை குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆயினும் தேர்தல் காலங்களில் குறிப்பிடப்பட்ட இந்த ஆணை குழுக்கள் தேர்தலின் பின்னர், அரசியல் அதிகார சுகத்தில் அமர்ந்த பின்னர் அவை காற்றில் பறக்க விடப்பட்டன, மூடி மறைக்கப்பட்டன, இல்லாத ஒழிக்கப்பட்டன, அல்லது அப்படியே கிடப்பில் போடப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு விட்டன.

இத்தகைய இலங்கையின் அரசியல் வரலாற்று சகதிக்குள் பட்டலந்த விசாரணை அறிக்கை மூழ்கடிக்கப்படுமா? அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா? என பலரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மக்களின் நீதி கோரல்

ரணில் விக்ரமசிங்கவின் போட்டியை அடுத்து தூசு தட்டப்பட்டு இருக்கும் பட்டலந்த விசாரணை அறிக்கை சிங்கள தேசத்தில் பெரும் நெருக்கடியைத்தான் தோற்றுவித்திருக்கிறது.

இப்போது ஜேவிபி யினருக்கு இது இருமுனை கத்தி. எந்தப் பக்கம் தொட்டாலும் ஆபத்தானது. ஆயினும் ஜேவிபி தோழர்கள் தங்கள் இதயத்தில் பூசித்த தோழர்களையும், தலைவர்களையும் எப்படி மறப்பர்? சாவு அல்லது மரணம் என்பது இறந்தவனுக்கு முடிவு.

ஆனால் இறந்தவனின் உறவுகளுக்கும், தோழர்களுக்கும் அது பெரும் சுமை. அது வாழ்பவனின் மரணம் வரை அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்தை சுமக்கின்றனர். அந்த வலியை, வேதனையை, இழப்பை அனுபவிக்கின்றனர்.

ஆகவே தங்கள் அன்புக்குரியவர்களுக்கான நீதியை நிச்சயமாக தேடுவர். ஆகவே சிங்கள தேசத்தில் மனித உரிமைகளுக்காகவும் நீதி கோரலுக்குமான குரல்கள் இப்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

பட்டலந்தவுக்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்...! | Tamil Leaders Should Support Battalantha

எதிரி நெருக்கடிக்கு உள்ளாகின்றபோது மேலும் நெருக்கடிகளை தூண்டி எதிரியை நாம் நிர்பந்தத்திற்கு உள்ளாக்குவதன் மூலமே எமது தேவைகளை அடைய முடியும்.

இப்போது தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அர்த்தமற்ற கர்ச்சிப்புகளை, வீரப்பிரதாபங்களை விடுத்து பட்டலந்த விசாரணை கமிஷன் அறிக்கைக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஜேவிபி தோழர்களுக்கான நீதி கோரலை முன்னிறுத்தி தமிழ் தலைமைகள் நாடாளுமன்றத்தில் போராட வேண்டும்.

இந்த நீதி கோரலை முன்மாதிரியாக கொண்டு தமிழ் மக்களுக்கான நீதி கோரலாக, அதுவே தமிழ் மக்களின் நீதி கோரளுக்கான நெம்புகோளாக எதிர்காலத்தில் மாற்ற முடியும்.

இப்போது தமிழ் அரசியல் தரப்பினர் பட்டலந்த விவாகரத்தை தமது கையில் எடுப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila