ஜனாதிபதி தேர்தலும், வெகுமதியும் - செல்வரட்னம் சிறிதரன்


ஜனாதிபதி தேர்தலும், வெகுமதியும் - செல்வரட்னம் சிறிதரன்:-

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவி வகித்து, ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கான ஆணையைக் கோருவதற்காகவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏழாவது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான பிரகடனத்தை வெளியிட்டிருந்தார். அவருடைய இந்த அரசியல் நகர்வானது, அவருக்கு எதிரான ஓர் அரசியல் பூகம்ப அலையையே நாட்டில் ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பல அரசியல்வாதிகளின் முகமூடிகளைக் கிழித்து, அவர்களின் உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தவும் செய்திருக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அந்தக் கட்சியின் செயலாளராகச் செயற்பட்டு வந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக அவரிடமிருந்து விலகி, எதிரணியில் இணைந்தது மட்டுமல்லாமல் இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக எதிரணியின் பொது வேட்பாளராகவும் களமிறங்கியிருக்கின்றார்.

அவர் கட்சி மாறிய உடனேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக வேறு ஒருவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்துள்ள போதிலும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக தாமே இன்னும் செயற்பட்டு வருவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட கட்சித் தாவலைத் தொடர்ந்து, இதனை எழுதும்வேளை வரையில் அரச தரப்பில் இருந்து 14 பேர் எதிரணியில் இணந்திருக்கின்றார்கள். மேலும் பலர் அரசாங்கத்தில் இருந்து எதிரணிக்கு கட்சி மாறத் தயாராக இருப்பாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதன் மூலம் ஆட்சியில் உள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக அவரிடமிருந்து பறித்தெடுக்கப் போவதாக, எதிரணியில் இணைந்துள்ள மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார்.

வெல்ல முடியாத யுத்தம் என்று வர்ணிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையைப் படைத்திருக்கின்ற போதிலும், ஜனாதிபதி ராஜபக்சவினால், நாட்டின் அனைத்து இன மக்களினதும் மகனங்களை வென்ற ஒரு தேசிய தலைவராகப் பரிணமிக்க முடியவில்லை. மாறாக, குடும்ப ஆட்சியைத் தக்க வைப்பதற்காக ஒரு சுயநல அரசியல் போக்கைக் கடைப்பிடிப்பவராக, ஊழல் நிறைந்ததோர் ஆட்சிக்குத் தலைமை தாங்குபவராக, இந்த நாட்டின் முக்கிய பிரச்சினையாகிய தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறிய ஒருவராக, இராணுவ ஆட்சியை நோக்கிய ஒரு நகர்வை மேற்கொண்டிருப்பவராகவே அவர் நோக்கப்படுகின்றார்.

இத்தகையதொரு பின்னணியிலேயே, மைத்திரிபால சிறிசேன என்றதோர் பலமிக்க அரசியல்வாதியின் கட்சித் தாவலும், அதனைத் தொடர்ந்து அரசாங்கம் ஆட்டம் காணுகின்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

மோசமான ஓர் ஆட்சியில் அல்லது மோசமான நிலைமைகளை நோக்கிச் செல்கின்ற ஓர் ஆட்சியில் மாற்றத்திற்கான அரசியல் சுழல் ஒன்று மையம் கொண்டு. பேரலையாக ஆர்ப்பரித்து எழும்போது, கட்சித் தாவல்கள் என்ற மாற்றங்கள் நிகழ்வதை இயல்பான ஒரு நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ளலாம். ஊரோடு ஒத்து ஓடு என்பதற்கு அமைவான செயற்பாடாக அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், அரசியல் மாற்றம் என்ற பேரலை காரணமாக, எதிராக சரிந்து செல்லும் வகையில் தோற்றம் காட்டுகின்ற தரப்பை நோக்கி எதிரணிகளில் இருந்து கட்சி தாவுகின்ற அரசியல் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருப்பதையும் இப்போது காணக் கூடியதாக இருக்கின்றது.

வெகுமதி அரசியல்


யுத்த வெற்றி என்ற சாதனையை நிலைநாட்டியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அபிவிருத்திப் பாதையில் நாட்டை வழிநடத்தி, ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றப் போவதாக சூளுரைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், ஆட்டம் கண்டுள்ள அவர் தன்னுடைய ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக, வெகுமதியளிக்கும் அரசியல் போக்கைக் கடைப்பிடித்துச் செற்பட்டு வருகின்றார் என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஜனாதிபதி பதவியின் இரண்டாவது தவணை முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவது தவணையிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னோடியாக நாட்டு மக்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்காகவே 2015 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், திட்டமிட்ட வகையில் வகுக்கப்பட்டிருக்கின்றது என்று பொருளியல் நிபுணர்கள் கணித்திருக்கின்றார்கள். வழமையான வரவு செலவுத் திட்டத்திலும்பார்க்க. இந்த வரவு செலவுத் திட்டத்தில் விசேட சலுகைள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு, அதற்கு வசதியாக நவம்பர் மாதம் வழமையாகக் கொண்டு வரப்படுகின்ற வரவு செலவுத் திட்டம் ஒரு மாதம் முன்னதாக ஒக்டோபர் மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. சமையல் காஸின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்க முன்னோடியாக அரச ஊழியர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள், 50 ஆயிரம் ரூபாவுக்கு ஜனாதிபதியின் தலைமையில் பகிரங்கமான அரசியல் நிகழ்வாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் நில்லாமல், இந்த சலுகை விலையிலான மோட்டார் சைக்கிள் பொலிசாருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே, வடபகுதிக்கான ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரையில் நீடித்த நிகழ்வை, அரசியல் வர்ண ஜாலங்கள் நிறைந்த நிகழ்வாக அரச தரப்பினர் நடத்தியிருந்தனர். யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களின் பினனர், வடபகுதிக்கான ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரையில் நீடித்தபோது, அது பெரியதோர் அரசியல் சாதனையாகப் படம் காட்டப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்தவுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்புவதும், யுத்தத்தினால் சீரழிந்துபோன அரச சேவைகளை, பொது மக்களுக்கான சேவைகளை மீண்டும் சீராக்குவதென்பது ஓர் அத்தியாவசிய செயற்பாடாகும். சுhதாரணமாக சிந்திப்பவர்களுக்கு இதில் சாதனையென்று வர்ணித்து பெருமை பேசுவதற்கு எதுவுமே இருப்பதாகத் தோன்ற முடியாது. ஆனால், சாதாரணமாக நடத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த நிகழ்வு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கோலாகலமான அரசியல் பிரசார நிகழ்வாகவே நடத்தப்பட்டிருந்தது என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

அத்துடன், விடுதலைப்புலிகளின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பின் ஓர் அம்சமாகச் செயற்பட்டிருந்த, அவர்களுடைய வங்கிச் சேவை – வைப்பகத்தில் வன்னிப்பிரதேச மக்களினால் அடைவு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான வெகுமதி நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கிளிநொச்சியில் வைத்து தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு இந்த நகைகளை வழங்கியிருந்தார்.

இந்தப் பின்னணியில், ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் என்றும் வேட்பு மனுக்கள் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி 960 பேரை, அலரி மாளிகைக்கு அழைத்து, விடுதலைப்புலிகளின் வைப்பகத்தில் அடைவு வைக்கப்பட்டிருந்த நகைகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

பொது மக்களிடமிருந்து அடைவ பிடிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை மோசமான யுத்தச் சூழலிலும், விடுதலைப்புலிகள் பாதுகாப்பாகத் தம்முடன் முள்ளிவாய்க்கால் வரையில் கொண்டு சென்றிருந்தனர். யுத்தத்தில் விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமளவான இந்தத் தங்க நகைகளகை; கைப்பற்றியிருந்தனர். அந்த நகைகளை யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்கள், காலம் கடந்த பின்னர், மூன்றாம் முறையாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் போட்டியிடுகின்ற சந்தர்ப்பத்தில் அவற்றின் உரிமையாளர்களுக்கு தேர்தல் வெகுமதியாகக் கையளிக்கப்பட்டிக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலை நோக்கிய முன் ஆயத்தங்களாகவே, யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை நீடிப்பு, சலுகை விலை மோட்டார் சைக்கிள் விற்பனை, 20 ஆயிரம் பேருக்கான காணி உறுதி கையளிப்பு, விடுதலைப் புலிகளின் அடைவு நகை கையளிப்பு, காலத்திற்கு முந்திய வழமைக்கு மாறாக சலுகைகளை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டம், பொருட்களின் விலை குறைப்பு போன்ற வெகுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதும் அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.

இந்த வெகுமதி நடவடிக்கைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. அதிரடியாக அரச தரப்பில் இருந்து எதிரணிக்குத் தாவ முற்பட்டிருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் வெகுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பரவலாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. அத்துடன் எதிரணியில் உள்ளவர்களை அரச தரப்பில் சேர்த்துக் கொள்வதற்கும், இந்த வெகுமதிகள் அரச தரப்பினரால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை முன்னாள் ஜனாதிபதியும், அந்தக் கட்சியின் தலைவியுமாகிய சந்திரிகா பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், மிகவும் இரகசியமான முறையில் அரச தரப்பில் இருந்து எதிரணிக்கு மாற்றியிருந்தனர் அதற்கு எதிர் வினையாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தகநாயக்காவை அந்தக் கட்சியில் இருந்து அரச தரப்பிற்குத் தாவச் செய்து, அவருக்கு, அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலாக சுகாதார அமைச்சராகப் பதவியை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டியில் வைத்து, வெகுமதியாக  வழங்கி கௌரவித்திருக்கின்றார். பதவி மட்டுமல்லாமல், பெருந்தொகையான பணமும் இவ்வாறு வெகுமதியாக வழங்கப்படுவதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

அரச தரப்பின் அரசியல் பலத்தைத் தக்க வைப்பதற்காக வெகுமதிகள் வழங்கப்படுவதைப் போன்று எதிரணியைச் சார்ந்தோரும் செயற்படுகின்றார்களா என்பது தெரியவில்லை. அதுபற்றிய தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளிவந்ததாகவும் தெரியவில்லை. எது எப்படியாயினும், கொள்கை ரீதியில் அல்லாமல், வெகுமதிகளுக்காகவே தாங்கள் கொண்டிருந்த அரசியல் கொள்கைகளைக் கைவிட்டு, தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளைக் கைவிட்டு கட்சி தாவுகின்ற அரசியல்வாதிகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்காலத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், அரசியல் செயற்பாட்டிற்காக வெகுமதிகளைப் பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகள் குறித்தும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சுய அரசியல் இலாபத்திற்காக, வெகுமதிகளைப் பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகள் எந்த நேரத்திலும் தங்களுக்கு வாக்களித்த பொதுமக்களையும் விற்பதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

எதுவும் நடக்கலாம்

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும், ஜனாதிபதி ஆட்சி முறையை 100 நாட்களில் இல்லாமல் செய்வோம் என்ற உத்தரவாதத்திற்கும் இடையிலான அரசியல் மோதலின் போர்க்களமே ஏழாவது ஜனாதிபதி தேர்தலாகும்.

இந்த மோதலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எதிரணியினர் ஒன்றிணைந்திருக்கின்றனர்.  இந்த ஒன்றிணைவானது, மூன்றாம் முறையும் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு நாட்டு மக்களின் ஆணையைக் கோரி, தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினரின் செல்வாக்கு மிக்க அரசியல் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதையும் காண முடிகின்றது. இதன் காரணமாகவே வெகுமதி அரசியல் உத்தியை அரச தரப்பினர் இந்தத் தேர்தலில் பகிரங்கமாகவும், தாரளமாகவும் பயன்படுத்த வெளிப்பட்டிருக்கின்றார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த மோசமான ஒரு யத்தத்தை வெற்றிகொண்டு, நாட்டு மக்களுக்கு பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுதலையைப் பெற்றுத் தந்த வரலாற்றுப் பெருமை மிக்க வீரனாகப் பேரினவாதிகளாலும், தீவிர பேரின பற்றாளர்களினாலும் கருதப்படுகின்ற ஒருவரின் அரசியல் இருப்பே கேள்வி குறிக்கு உள்ளாகியிருக்கின்றது என்பது சாதாரண விடயமல்ல. அது மிகவும் பாரதூரமான அரசியல் விடயமாகும்.

இத்தகைய ஓர் இக்கட்டான நிலையில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கும், கடுமையானதோர் அரசியல் போட்டியில் வெற்றியீட்டுவதற்கும், அரச தரப்பினர் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நடவடிக்கைகளை, முன்னேற்பாடாக அரச தரப்பினர் மேற்கொண்டு வந்துள்ளார்கள். எதிர்பாராத வகையிலேயே மைத்திரிபால சிறிசேனவின் எதிரணி பக்கமான தாவலும், அவரே பொது வேட்பாளராகியதும் இடம்பெற்றிருந்தன. அது அரசாங்கத்தையே ஆட்டம் காணச் செய்திருக்கின்றது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதனையும் செய்வதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதே பொதுவான கணிப்பாக இருக்கின்றது.

விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட பின்னரும், விடுதலைப்புலிகளையே தமது அரசியல் செயற்பாடுகளுக்கான மையப் பொருளாக, அரச தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். யுத்தம் முடிந்து ஐந்தரை வருடங்களாகின்ற நிலையிலும் இந்த போக்கில் இருந்து அவர்கள் இன்னும் விடுபடவில்லை.

விடுதலைப்புலிகளின் ஆயுதச் செயற்பாடுகள் முடிவுக்கு வந்து நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள போதிலும், தேசிய பாதுகாப்புக்கு இன்னும் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பது அவர்களுயைட அரசியல் தாரக மந்திரமாக இருந்து வருகின்றது. தேசிய பாதுகாப்புக்காகவே, யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் இன்னும் பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேங்கங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர், நிரந்தரமாக நிலைகொண்டிருக்கத்தக்க வகையில் பரந்த அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இராணுவத்தினரின் தேவைகள், தேசிய பாதுகாப்புடன் இணைக்கப்பட்டு, நாட்டின் எல்லா செயற்பாடுகளிலும் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன், யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் இராணுவத்தினருக்கு, சிவில் நிர்வாகச் செயற்பாடுகளிலும் பங்களிக்கப்பட்டிருக்கின்றது.

சமூக, பொருளாதார செயற்பாடுகள் மட்டுமல்லாமல், அரசியல் நடவடிக்கைகளிலும்கூட இராணுவத்தினர் வடபகுதியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். சமூக, அரசியல் நிகழ்வுகளில் சமூக முக்கியஸ்தர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம் இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. சீருடை தரித்த இராணுவ பொலிஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளைப் போன்று இந்த நிகழ்வுகளில் மாலையும் கழுத்துமாக புன்னகை தவழும் முகங்களோடு கலந்து கொள்வது சாதாரண காட்சியாகியிருக்கின்றது.

இராணுவம் மற்றும் பொலிசாரின் பிரசன்னமின்றி எந்தவொரு நிகழ்வும் இடம்பெறக் கூடாது, அவ்வாறு நடைபெறுவதற்கு அனுமதி கிடையாது என்பது வடக்கில் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுகின்ற, எழுதாத சட்டவிதியாகும்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுப்பதற்காகவும், தேசத்திற்கு விரோதமானவர்கள் பொதுமக்கள் மத்தியில் ஊடுருவி செயற்படாமல் தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரச தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது,

அது மட்டுமல்லாமல், தேர்தல் பிராசாரங்களில் அரச தரப்புக்கு ஆதரவாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. வடக்கில் அண்மையில் நடந்து முடிந்த மாகாணசபைக்கான தேர்தல் பிரசாரத்தின்போது, சீருடை தரித்த இராணுவத்தினர் பகிரங்கமாகவே அரச தரப்;பு வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடுகின்ற நடநவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, இது மோசமான தேர்தல் விதி மீறல் செய்பாடு என்று தேரதல் கண்காணிப்பாளர்களும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் குரல் எழுப்பியிருந்தன.

ஆயினும் அவர்களுடைய ஆட்சேபணைகள் எதுவும் தேரதல் திணைக்களத்தினாலோ அல்லது அரச தரப்பினராலோ கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

விடுதலைப்புலிகளின் அடைவு நகைகளை ஜனாதிபதியிடமிருந்து நேரில் பெற்றுக் கொள்வதற்காக அலரி மாளிகைக்குச் சென்றிருந்தவர்களிடம், இந்த அரசாங்கத்தின் பெருமைகள் குறித்து பிரசாரம் செய்யப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்ததாக தங்க நகைகளைப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் செயற்பாடு வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னதாக இடம்பெற்றிருக்கின்றது. இந்த அடைவு நகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரியவர்களைத் தெரிவு செய்ததும், அவர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று அலரி மாளிகையில் முன் நிறுத்தியதும் என அனைத்துச் செயற்பாடுகளையும் இராணுவத்தினரே மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தமோதல்களின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அடைவு நகைகளை இவ்வாறு இராணுவத்தினரின் முழுமையான பங்களிப்பில் - அவர்களால் வழங்கப்பட்டமை சட்டத்திற்கு முரணான செயற்பாடு என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டி கண்டித்திருக்கின்றனர். இந்த நகைகள் முறைப்படி நீதிமன்றத்தின் ஊடாகவே கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

யுத்தத்தின் பின்னர், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களின் புனர்வாழ்வு போன்ற அனைத்துச் செயற்பாடுகளிலும் இரண்டறக் கலக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை, அரசியல் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்காக அரச தரப்பினர் பயன்படுத்தப்படமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இராணுவத்தினரையும் முக்கிய கருவியாக அரசு பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயினும், தற்போது நிலவுகின்ற நிலைமைகள், அரசியல் சூழல் என்பவற்றில், தேர்தலின்போது, வன்முறைகள் இடம்பெறுவதற்கும், இராணுவ அடக்குமுறை போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச நெருக்கடி குழு என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. பலத்தைப் பயன்படுத்தியோ அல்லது வன்முறைகள் மூலமாகவே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நடைnறும் முயற்சிகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துவதுடன் எதிர்கால ஸ்திரமின்மைக்கும் வித்திடுவதாக அமையும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தனது சர்வதேச கடப்பாட்டை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதை நினைவூட்டியுள்ள அந்த அமைப்பு, அதனை நிறைவேற்றத் தவறினால், இராஜதந்திர விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று சர்வதேச நெருக்கடி குழு எச்சரிக்கை செய்திருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதைத் தவிர்த்ததன் காரணமாக ஐநாவின் சர்வதேச விசாரணையொன்றுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம், பதவி ஆசைக்காக இந்தத் தேர்தலில் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டாது என்றும், அவ்வாறு செயற்பட்டால், மேலும் மோசமான சர்வதேச நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து வைத்துள்ளது என்றும் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

எது எப்படியானாலும், மூன்றாம் தவணைக்கான ஜனாதிபதி பதவியைக் கோரியுள்ள ஜனாதிபதியின் தேர்தல் செயற்பாடுகளும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக முனைந்துள்ள எதிரணியினரின் முயற்சிகளும், முழு நாட்டையும் ஓர் அக்கினிப்பிரவேசத்திற்கு இட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்கள்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila