இலங்கை அரசால் மீறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லையா? என யாழ்.மாவட்ட சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்றை தினம் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் சமூகத்தினருக்கான மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி நெறியில் வைத்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் தொடர்ச்சியாகப் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை உலக நாடுகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும்.அதுமட்டுமன்றி, வடக்கில் பொதுமக்களுடைய காணிகள் இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்படுகின்றன.
இதனால் அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த காணி அபகரிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை செய்ய ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதாக? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதில் அளித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட முன்னாள் பீடாதிபதி செல்வக்குமரன். அவ்வாறு விசாரணை செய்வதற்கு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை மனித உரிமைகளை மட்டுமே விசாரணை செய்ய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே காணி தொடர்பாக விவகாரங்களை நீதிமன்றங்களே விசாரணை செய்ய முடியும். அதுமட்டுமின்றி சட்டத்தின் படி அரச தேவைக்காகக் காணிகளை சுவீகரிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.